Published:Updated:

`நியூயார்க்கில் சிட்னி டைம்; ஜெட்லேக் சிக்கல்; 4 விமானிகள்!’ - உலகின் நீண்ட இடைநில்லா விமானப் பயணம்

இந்த விமானப் பயணத்தில் 49 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எரிபொருள் செலவைக் குறைக்க, குறைவான பயணிகளே அனுமதிக்கப்பட்டனர்.

விமான
விமான ( AP )

நீண்ட தூர இடைநில்லா பயணிகள் விமானப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது, க்வாண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம். ஆம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பறக்கத் தொடங்கிய விமானம் தரையிறங்கியது, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில். விமானம் நிற்காமல் பயணித்த தூரம் 16,000 கிலோ மீட்டர்கள். பயண நேரம், 19 மணி நேரம்.

`நியூயார்க்கில் சிட்னி டைம்; ஜெட்லேக் சிக்கல்; 4 விமானிகள்!’ - உலகின் நீண்ட இடைநில்லா விமானப் பயணம்
Twitter/ @Imwaheedfaizi

போயிங் 787-9 ரக விமானத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனைப் பயணம், ஒரு முன்னோட்டம்தான். முழுமையான பயணிகள் சேவை 2020 பிற்பாதியில்தான் வரும் என்கிறார்கள். அதற்கு முன், சோதனைக்காக மூன்று முறை விமானம் இடைநில்லாமல் பயணம் செய்ய உள்ளது. அதில் முதலாவது பயணம்தான் நியூயார்க் முதல் சிட்னி வரையிலானது.

இந்தப் பயணம் ஒரே நாளில் நடைந்துவிட்டாலும், இதற்கான ஏற்பாடுகள் என்பது மிகப்பெரிய திட்டமிடலுடன் தொடங்கியது. காரணம், விமானபோக்குவரத்தில் இது புதிய முயற்சி. அது மட்டுமில்லாது, ஜெட்லேக் என்னும் சிக்கலும் இதில் இருக்கிறது. அதாவது, அதிக நேரம் விமானத்தில் பயணம் செய்யும்போது, புறப்படும் இடத்துக்கும் சேரும் இடத்துக்குமான நேர வித்தியாசம் இருக்கும். இதனால் பயணிகளுக்கு சோர்வு உண்டாகும்.

`நியூயார்க்கில் சிட்னி டைம்; ஜெட்லேக் சிக்கல்; 4 விமானிகள்!’ - உலகின் நீண்ட இடைநில்லா விமானப் பயணம்
Twitter/ @Imwaheedfaizi

இந்தப் பயணத்துக்கான திட்டமிடுதலில் அதையும் கருத்தில் கொண்டனர். அதன் காரணமாக, ஆஸ்திரேலியாவில் இருக்கும் இரண்டு பல்கலைக்கழகங்கள் க்வாண்டாஸ் ஏர்வேஸுடன் ஒப்பந்தம்செய்து, பயணிகளின் உடல்நிலையைக் கண்காணித்தது. விமானப் பயணத்துக்கு முன்னதாக சில அறிவுரைகளும் பயிற்சியும் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

அதன்படி, நியூயார்க் நகரிலிருந்து விமானம் புறப்படும்போது, அவர்கள் தங்களின் கடிகாரத்தில் சிட்னியின் நேரத்தை செட் செய்ய வேண்டும். அதன்படியே சிட்னியில் தரையிறங்கும் வரை செயல்பட வேண்டும். இதனால், இரவில் விமானம் ஏறியிருந்தாலும் சிட்னியில் இரவாகும் வரை பயணிகளைத் தூங்காமல் இருக்கும்படி விமானிகள் குழு கேட்டுக்கொண்டது. இதற்காக அவர்களுக்கு உடற்பயிற்சி உள்ளிட்ட பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

`நியூயார்க்கில் சிட்னி டைம்; ஜெட்லேக் சிக்கல்; 4 விமானிகள்!’ - உலகின் நீண்ட இடைநில்லா விமானப் பயணம்
Twitter/@TasawarAbbasMa2

இதனால் பயணத்தின் முதல் 6 மணி நேரம் யாரும் தூங்கவில்லை. 6 மணி நேரத்துக்குப் பின்னர், அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவு வழங்கப்பட்டு, பின்னர் தூங்கும்படி கேட்டுக்கொண்டனர். பயணம் முடிந்த பின்பு, பயணிகளைப் பரிசோதித்த பேராசிரியர் மேரி கர்ரோல், ``இந்தப் பயிற்சி நிச்சயம் வேலைசெய்தது என்பேன். காரணம், ஜெட்லேக் மூலம் ஏற்படும் சோர்வு, பயணிகளுக்குக் குறைவாக இருந்தது. நிச்சயம் பயணிகள் என்றும் போல் இன்று செயல்படுவார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

பயணிகளுக்கே இத்தனை ஏற்பாடுகள் என்றால், விமானத்தை 19 மணி நேரம் இயக்கும் விமானிகளுக்கு முன்னேற்பாடு இல்லாமலா..? விமானிகளுக்கு பயண சோர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, 4 விமானிகள் சுழற்சி முறையில் விமானத்தை இயக்கினர். அதேபோன்று ஒரு கருவி, விமானிகளின் மூளையைத் தொடர்ந்து கண்காணித்துவந்தது. அதில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து அவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டன.

`நியூயார்க்கில் சிட்னி டைம்; ஜெட்லேக் சிக்கல்; 4 விமானிகள்!’ - உலகின் நீண்ட இடைநில்லா விமானப் பயணம்
FlightRadar24.com

இந்தப் பயணத்தில், 49 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எரிபொருள் செலவைக் குறைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பயணம்செய்த அனைவரும் உயர் வகுப்பான பிசினஸ் க்ளாஸ் வகுப்பில்தான் பயணம் செய்ததாக விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தப் பயணம் தொடர்பாக அவர் கூறுகையில், ''இந்த விமானத்தில் பயணம் செய்வது ஏதோ ஆய்வுக்கூடத்தில் பயணம் செய்வது போலிருந்தது. அவ்வப்போது என்ன செய்ய வேண்டும் என்ற அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், பயணம் சிறப்பாக இருந்தது. புதிய அனுபவம். முதலில், அனைவரும் தூங்காமல் இருக்க சிரமப்பட்டோம்” என்றார்.

இதே க்வாண்டாஸ் நிறுவனத்தின் விமானம், கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு 17 மணிநேரம் இடை நில்லாமல் பயணித்தது. தற்போது அதையும் தாண்டி, 19 மணிநேரம் 14 நிமிடங்கள் பயணித்துள்ளது இந்த விமானம். இதுதொடர்பாகப் பேசிய க்வாண்டாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ, ``இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். இந்தப் பயணத்தில் எங்களுக்கு இருந்த மிகப் பெரிய சவால், பயணிகளின் ஜெட்லேக் சிக்கலை சமாளிப்பதும், விமானிகளின் பணிச் சுமையை சமமாகப் பிரித்து வழங்கிக் குறைப்பதிலும் தான் இருந்தது” என்றார்.