பிரீமியம் ஸ்டோரி

இணைய உலகில் ‘நான்தான் நம்பர் 1’ என நிரூபிக்க, உலகின் வல்லரசு நாடுகள் யாவும் தினம் தினம் புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், ரஷ்யா தனக்கென தனி இணையத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி, சமீபத்தில் அதன் சோதனையோட்டத்தில் வெற்றியும் கண்டுவிட்டது.

உலகுக்கு இணையத்தை அறிமுகப்படுத்தியது அமெரிக்காதான் என்பதால், இணையம் சார்ந்த தொழில்நுட்பங்களில் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதே நேரத்தில், இணையம் சார்ந்த தொழில் நுட்பங்களில் `உலகின் நம்பர் 1’ இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை ரஷ்யாவுக்கு எப்போதுமே உண்டு. அதற்கு, முதலில் தான் ஓர் இணைய ஜாம்பவான் என்பதை நிரூபித்தாக வேண்டும். அதற்கான முயற்சியில்தான் இப்போது இறங்கியிருக்கிறது.

RuNet
RuNet

இணையத்துக்கென சட்டங்கள் மற்றும் வரையறைகளைக்கொண்ட சர்வதேச அமைப்பு ஒன்று இதுவரை இல்லை. இணையத்துக்கு எல்லைகள் கிடையாது. அது சுதந்திரமாக அனைத்து நாடுகளுக்குள்ளும் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கும். அப்படி இருப்பதால்தான் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து அனுப்பப் படும் தகவல்களும், பல நாடுகளைக் கடந்து எந்தவிதத் தடையும் இல்லாமல் உடனடியாக நம்மிடம் வந்து சேர்கின்றன. ஆனால் ரஷ்யாவோ, `இணையத்துக்கும் எல்லைகள் வகுப்பேன்’ என்கிறது.

ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்தால், ரஷ்யாவின் இணையமான ‘RuNet’-ஐத்தான் இனிமேல் பயன்படுத்தியாக வேண்டும். பெரு நிறுவனங்களில் நிறுவனத் தகவல்களைக் கையாள்வதற்கென `இன்ட்ராநெட்’ என்ற அமைப்பு இருக்கும். அதன் மொத்தக் கட்டுப்பாடும் அந்த நிறுவனத்தின் தலைமையிடத்தில் இருக்கும். சமூக வலைதளங்களை அந்த நிறுவனம் முடக்கி வைத்திருந்தால், அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள்ளிருந்து அவர்களுக்குத் தெரியாமல் சமூக வலைதளங்களை நம்மால் நெருங்கவே முடியாது. இதே போன்றதொரு கட்டமைப்பைத்தான் ரஷ்யா அந்த நாட்டில் நிறுவ முயல்கிறது.

RuNet
RuNet

இணையத்தின் பலமே, அதன் எல்லைகளற்ற தன்மைதான். உலகின் எந்த மூலையிலிருக்கும் தகவலையும் நொடிகளில் பெறலாம் என்பதால் தான் இணையத்தால் இவ்வளவு வேகமாக உலகை ஆட்கொள்ள முடிந்தது. இணையத்துக்கான எல்லை என்பது தகவல்களுக்குமான எல்லையும் தான். தன் நாட்டுக்கு மட்டுமான இணையம் என்பது பலவீனமான ஒன்றாகத்தான் இருக்கும். அது ரஷ்யாவுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும்.

2014-ல் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது ரஷ்யா. அந்நாட்டுக் குடிமக்களைப் பற்றிய தகவல்கள் எந்த ஒரு நிறுவனத்திடம் இருந்தாலும், அதை அந்நாட்டு எல்லைக்குள்ளேயே வைத்துப் பராமரிக்கவும், தொடர்ந்து சேவை வழங்கவும் வேண்டும். அந்த உத்தரவைப் பின்பற்ற முடியாதபட்சத்தில், அந்த நிறுவனம் ரஷ்யாவால் முடக்கப்படும் என அறிவித்தது. கூறியதைப்போலவே LinkedIN நிறுவனத்தைத் தடையும் செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ரஷ்யா அதிரடி காட்டிவருகிறது. 2018-ம் ஆண்டு ‘Encryption Keys’-ஐ வழங்க மறுத்ததற்காக டெலிகிராம் செயலியையும் தடைசெய்துள்ளது. Encryption keys இருந்தால் பயனர்கள் என்னென்ன தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றனர் என அரசால் கண்காணிக்க முடியும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தன் நாட்டு மக்களை வேவுபார்க்க முடியும். தன் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட மறுத்ததால், பிளாக்பெரி மெசஞ்சர், வீ சாட் உள்ளிட்ட பல சமூக வலைதளச் செயலிகளையும் தடை செய்துள்ளது. `அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டால் அல்லது பரப்பினால் அந்த இணையதளங்களும் முடக்கப்படும்’ என தன் செயல்களின்மூலம் கூறியுள்ளது. இது அந்நாட்டுப் பத்திரிகைகளுக்கும் பொருந்தும்.

சீனாவும் இணையம் தொடர்பான விஷயங்களில் இதற்குமுன் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கூகுள், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் அனைத்தும் அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்பத் தன்னிறைவை அடைய சீனா முயன்றுகொண்டிருக் கிறது. உலகளாவிய தொழில்நுட்பம் அனைத்துக்கும் மாற்றான தொழில்நுட்பம் அதனிடம் உள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான ‘வாட்ஸப்’புக்குக் கூட மாற்றாக ‘வீ சாட்’ என்ற செயலியை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இவை அனைத்தும் அரசாங்கத்தால் அரசாங்கத்துக்காக அரசாங்கங்களே போடும் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு, தேசத்துக்கான அச்சுறுத்தல் என இவர்கள் ஆயிரம் காரணங்கள் கூறினாலும், உள்நாட்டில் தங்களுக்கு எதிராக எந்த ஓர் அமைப்பும் உருவாகக் கூடாது என்ற மறைமுகக் காரணமும் இந்தத் திட்டத்தின் பின்னால் இருப்பதை மறுக்க முடியாது.

அனைத்து நாடுகளும் தொழில்நுட்பரீதியிலான முன்னேற்றங்களுக்கு திட்டங்களை வகுப்பது ஆரோக்கியமான விஷயம்தான். தேசத்தின் பாதுகாப்பு என்கிற வகையில் பிரச்னையில்லை. அதை மீறி தனிமனித சுதந்திரத்தில் தலையிடுமானால், அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு