Published:Updated:

`மிஸ்டு கால்' ஊடுருவல்; இந்தியர்களைக் குறிவைத்த இஸ்ரேல் நிறுவனம்! - வாட்ஸ்அப் வெளியிட்ட அதிர்ச்சி

உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், ஆர்வலர்களைக் குறிவைத்து அவர்களின் போன்களுக்குள் இஸ்ரேல் நிறுவனம் ஊடுருவியதை வாட்ஸ் அப் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலி வாட்ஸ் அப். இந்தக் காலகட்டத்தில் சிறிய பட்டன் போன்களில்கூட வாட்ஸ் அப் வசதி வந்துவிட்டது. அந்த அளவுக்கு வாட்ஸ் அப் செயலியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இந்தச் செயலியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கடந்த மே மாதம் ஒரு தகவல் பரவியது.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

ஹேக்கர்கள் சிலர் வாட்ஸ் அப் செயலி மூலம் ஸ்மார்ட் போன்களில் ஊடுருவுவதாகவும் அதனால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வரும் 1.5 பில்லியன் பயனாளர்களை உடனடியாக அப்டேட் செய்யுறுமா கூறியது வாட்ஸ் அப் நிறுவனம். பின்னர், `இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் NSO Group என்ற நிறுவனம் ‘பெகாசூஸ்’ (Pegasus) என்ற ஸ்பைவேர் சாஃப்ட்வேர் உருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கலாம்' எனக் கூறப்பட்டது.

இதையடுத்து வாட்ஸ் அப் பிரச்னை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று அமெரிக்கா, சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 1400 பேரை வாட்ஸ் அப் மூலம் கண்காணித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் குற்றம்சாட்டியது.

என்.எஸ்.ஓ நிறுவனம்
என்.எஸ்.ஓ நிறுவனம்

அதேநேரம், பயனர்களின் தகவல்களை வெளியிட வாட்ஸ் அப் நிறுவனம் மறுத்துவிட்டது. ஆனால், அந்த 1,400 பேரில் இந்தியர்களும் உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவன செய்தி தொடர்பாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி அவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்களை எங்களால் வெளியிட முடியாது. ஆனால், ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது மட்டும் என்னால் கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Vikatan

இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பலரைத் தொடர்புகொண்ட வாட்ஸ் அப் நிறுவனம், அவர்களை எச்சரித்து அவர்களின் போன்களை மே மாதம் இறுதி வரை அதிநவீன கண்காணிப்பில் வைத்துள்ளது. வாட்ஸ் அப்பின் சேவை விதிமுறைகளையும் மீறி அந்த நிறுவனம் மிஸ்டு கால் மூலம் ஸ்மார்ட் போன்களில் ஊடுருவியதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ் அப் தெரிவித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம். தங்கள் கண்டுபிடிப்பான பெகாசூஸ் என்ற மென்பொருளை முறையாக அரசிடம் விற்றதாகக் கூறியுள்ளது.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

ஆனால் கனடாவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரேல் என்.எஸ்.ஓ நிறுவனத்தைச் சேர்ந்த 36 பெகாசூஸ் உளவாளிகள் இந்தியா உட்பட 45 நாடுகளில் ஊடுருவியதைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளது. அதில் ஐந்து உளவாளிகள் ஆசியாவைத் தீவிரமாகக் கண்காணித்ததாகவும் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.