Published:Updated:

உலகின் காஸ்ட்லியான விவாகரத்து - அமேசான் பங்குகளால் பணக்கார பெண்ணாகும் மெகென்ஸி

விவாகரத்து செட்டில்மெண்டுகளுக்கு பிறகு உலகின் பணக்கார பெண்களின் டாப் பட்டியலில் மெகென்ஸியும் இடம்பிடிப்பார்.

மெகென்ஸி
மெகென்ஸி

உலகின் காஸ்ட்லியான விவாகரத்துக்கான தீர்வு இந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டவுள்ளது. வர்த்தக உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரருமான ஜெப் பிசாஸ் அவரது மனைவி மெகென்ஸியும் விவாகரத்து பெறவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு தான் அமேசான் என்ற நிறுவனத்தை ஜெப் பிசாஸ் ஆரம்பித்தார். தனது பிசினஸ்களில் தனது மனைவியையும் இணைத்துக்கொண்டார்.

அமேசான்
அமேசான்

அமேசானில் கிடைக்காத பொருள்களே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. முதலீட்டாளர்களுக்கு அமேசானில் பங்குகள் அள்ளிக்கொடுக்கிறது. கடந்த ஜனவரி மாதத்திலே விவகாரத்து தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். 25 வருட காதல் முடிவுக்கு வருகிறது இனி மேல் நண்பர்களாக தொடர்வோம் என மெகென்ஸி ட்விட்டரில் தெரிவித்தார். ஜெப் பிசாஸுக்கு மற்றொரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டதால் இவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

அமேசான் மட்டுமல்ல வாசிங்டன் போஸ்ட் பத்திரிகை, பப்ளிகேஷன், திரைப்படத்துறை என பல்வேறு தளத்தில் கால்பதித்துள்ளார் ஜெப் பிசாஸ். விண்வெளி தொடர்பாக ஆய்வு நடத்தும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனங்களும் ஜெப் பிசாஸ் 2000 ஆண்டுகளிலே தொடங்கிவிட்டார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு முன்பே விண்வெளித்துறையின் எதிர்காலம் குறித்து அறிந்திருந்த ஜெப் அப்போதே அதனை தொடங்கிவிட்டார். எல்லா நிறுவனங்களிலும் ஜெப் பிசாஸ் - மெகென்ஸி இருவரும் இணைந்தே பயணித்தனர். இந்நிலையில் தான் இவர்களது விவாகரத்து முக்கியமானதாக பார்க்கப்பட்டுகிறது.

ப்ளூ ஆர்ஜின் நிறுவனம்
ப்ளூ ஆர்ஜின் நிறுவனம்

இருவருக்கும் இன்னும் விவாகரத்து வழங்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதமே நிதி பங்கீடு தொடர்பாக 90 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மெகென்ஸி சில நிறுவனங்களை ஜெப் பிசாஸுக்கு விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார். வாசிங்டன் போஸ்ட், ப்ளூ ஆர்ஜின் நிறுவன பங்குகளை வழங்க முடிவுள்ளார். அமேசானில் தான் வைத்திருக்கும் பங்குகளை கணவருக்கு விட்டுக்கொடுக்கவில்லை. அமேசான் பங்குகளின் சந்தை மதிப்பு 945 அமெரிக்க டாலர். இதில் 4 சதவிகித பங்குகளை மெகென்ஸி வைத்துள்ளார். அதன் மதிப்பு மட்டும் 38 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்த வாரத்தில் செட்டில்மெண்ட்கள் முடிவாகும் எனத் தெரிகிறது. இதன் பின்னர் அமேசான் பங்குகள் மூலம் உலக பணக்கார பெண்களின் பட்டியில் 3வது இடத்தை பிடிப்பார் எனத் தெரிகிறது.