சினிமா
Published:Updated:

நம் கடந்த காலத்தை நமக்குக் காட்டும் கால இயந்திரம்

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி

இந்த 30 ஆண்டுகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரமிக்கவைக்கும் விண்வெளிப் புகைப்படங்களை எடுத்திருக்கிறது ஹப்பிள்.

“பிரபஞ்சத்தின் தோற்றத்தைத் தேடி மழைக்கால்களிலிருந்து காலத்தின் விளிம்பிற்கே செல்லும் பயணம் இனிதே தொடங்கியது!” கடந்த வாரம் தென் அமெரிக்காவிலிருக்கும் பிரெஞ்ச் கயானா மழைக்காடுகளிலிருந்து ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope) விண்ணில் ஏவப்பட்டது. அப்போது நாசாவின் அறிவிப்பாளர் சொன்ன வார்த்தைகள் இவை. 9.7 பில்லியன் டாலர் செலவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உழைப்பில் உருவாகியிருக்கும் இந்தத் தொலைநோக்கி ஏன் ஸ்பெஷல்?

இதுவரை விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியத் தொலைநோக்கியாக இருந்துவருவது ஹப்பிள் தொலைநோக்கிதான். 1990-ம் ஆண்டு நாசாவால் விண்ணுக்கு அனுப்பப்பட்டது ஹப்பிள் தொலைநோக்கி. பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் இந்தத் தொலைநோக்கி மூன்று தசாப்தங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் பெரும்பங்காற்றிவருகிறது. இந்தத் தொலைநோக்கி தந்த தகவல்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து மட்டும் இதுவரை 18,000-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

நம் கடந்த காலத்தை நமக்குக் காட்டும் கால இயந்திரம்

இந்த 30 ஆண்டுகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரமிக்கவைக்கும் விண்வெளிப் புகைப்படங்களை எடுத்திருக்கிறது ஹப்பிள். இந்தப் பிரபஞ்சத்தின் வயது 1,380 கோடி ஆண்டுகள் எனக் கண்டுபிடிக்க உதவியதே ஹப்பிள் தொலைநோக்கிதான்.

ஹப்பிள் தொலைநோக்கியைவிட 100 மடங்கு திறன்மிக்கது இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், கனடிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் நாசா இணைந்து உருவாக்கியிருக்கும் இந்தத் தொலைநோக்கி விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கப்போகிறது. மிகவும் மேம்பட்ட இந்தத் தொலைநோக்கியை உருவாக்க 1990-களிலிருந்தே திட்டமிட்டு வருகின்றன இந்த விண்வெளி ஆராய்ச்சி மையங்கள். ஆனால், இப்போதுதான் தேவையான தொழில்நுட்பங்கள் அனைத்தும் கைகூடி வந்திருக்கின்றன.

ஹப்பிள் தொலைநோக்கி நம் கண்களால் பார்க்கக்கூடிய ஒளியை (Visible Light) மட்டுமே பிரதானமாகச் சேகரித்தது. ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு ஒளியை (Infrared light) சேகரிக்கும். இது மட்டுமல்லாமல் அளவிலும் சரி, தொழில்நுட்பத்திலும் சரி, மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது இது.

பூமியே அகச்சிவப்பு ஒளியை வெளியிடும் என்பதால் இங்கிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இரண்டாவது லெக்ராஞ்ச்(L2) புள்ளியில் சூரியனைச் சுற்றிவரப்போகிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இவற்றின் காரணமாக ஹப்பிளால் இதுவரை காணமுடியாத அம்சங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் தெளிவாகப் பார்க்க முடியும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஹப்பிள் தொலைநோக்கியால் 1,340 கோடி ஒளி ஆண்டுகள் தூரம் வரை பார்க்கமுடியும்.

நம் கடந்த காலத்தை நமக்குக் காட்டும் கால இயந்திரம்

இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் 1,360 கோடி ஒளி ஆண்டுகள் தூரம் வரை பார்க்க முடியும். பெருவெடிப்பு (Big Bang) 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதிலிருந்து 10 கோடி ஆண்டுகளுக்குப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களோ, அண்டங்களோ உருவாகவில்லை. ஒளியே இல்லாத அந்தக் காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ (Dark Age) என அழைக்கின்றனர். அதன்பின் நட்சத்திரங்கள், அண்டங்கள் என ஒவ்வொன்றாக உருவாகின.

சமீபத்திய அண்டங்கள் பற்றிய தகவல்கள் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பெருமளவில் நமக்குக் கிடைத்தது. ஆனால், காலத்தின் தொடக்கத்தில் உருவான நட்சத்திரங்கள், அண்டங்கள் பற்றி நமக்கு இன்னும் எதுவுமே தெரியாது. அதைத்தான் நமக்குச் சொல்லப்போகிறது இந்தத் தொலைநோக்கி.

1,360 கோடி ஒளி ஆண்டுகள் தூரம் பார்க்க முடியும் என்றால், 1,360 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தை இப்போது பார்க்க முடியும் என்று அர்த்தம். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒளி ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிக்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஆகும். உதாரணத்திற்கு, சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும். அதாவது 8 நிமிடங்களுக்கு முந்தைய சூரியனைத்தான் அந்தச் சமயத்தில் பார்த்துக்கொண்டிருப்போம். அதே போலத்தான் 1,360 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தை இந்தத் தொலைநோக்கியின் மூலம் நம்மால் காணமுடியும்.

நம் கடந்த காலத்தை நமக்குக் காட்டும் கால இயந்திரம்

சூரியக்குடும்பம் அல்லாமல் பிற அண்டங்களில் இருக்கும் கிரகங்களில் (Exoplanets) உயிர்கள் இருக்கின்றனவா, இருந்த தடங்கள் இருக்கின்றனவா என்ற தேடலிலும் ஈடுபடும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற புதிரில் முக்கிய முடிச்சுகளை இந்தத் தொலைநோக்கி அவிழ்க்கும் என எதிர்பார்க்கலாம். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெறும் தொலைநோக்கி அல்ல, நம் கடந்த காலத்தை நமக்கே காட்டப்போகும் கால இயந்திரம்.