கடந்த சில வாரங்களாகவே டெலிகாம் வட்டாரத்தில் IUC கட்டணங்கள் குறித்த விவாதங்கள்தான் பெருமளவில் நடந்து வருகின்றன. ஏர்டெல், வோடஃபோன், ஜியோ என டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே இதுகுறித்து பல்வேறு கருத்துவேறுபாடுகள் நிகழ்ந்துள்ளன.
அது என்ன IUC கட்டணம்?
இந்த Interconnect Usage Charge என்பது ஒரு டெலிகாம் நிறுவனத்திலிருந்து மற்றொரு டெலிகாம் நிறுவனத்திற்குச் செல்லும் அழைப்புகளுக்கு முதல் டெலிகாம் நிறுவனம் செலுத்தவேண்டிய தொகை.
அதாவது, ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தால் ஜியோ நிறுவனத்திடமிருந்துவரும் காலை, ஏர்டெல் தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைக்க சிறிய தொகை ஒன்றை வசூலிக்கும். இதை ஜியோவிடமிருந்தே பெற்றுக்கொள்ளும். இந்த விதி, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த முறைக்கு Calling Party Pays என்று பெயர். இதை முற்றிலுமாக எதிர்க்கிறது ஜியோ.
அதாவது, கால்களை கனெக்ட் செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதே அவர்களின் கட்டமைப்பிற்கான முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை, இதுவரை பெற்ற லாபம் மூலம் திரும்பப்பெற்றுவிட்டன. எனவே, இந்த IUC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என டிராயிடம் சொன்னது ஜியோ. மற்ற நிறுவனங்களோ இப்போது IUC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவிலிருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்றன.
ஏனென்றால் இதில் ஜியோ பெருமளவில் கொடுக்கும் தரப்பாகவும் மற்ற நிறுவனங்கள் வாங்கும் தரப்பாகவும் இருந்தன. இதெல்லாம் நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. இறுதியில் இதுதொடர்பாக புது அறிவிப்பை வெளியிட்ட டிராய், MTC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இதுதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இதையும் நீக்கவேண்டும் என்பதே ஜியோவின் ஆசை.

13,500 கோடி ரூபாயை இப்படி மூன்று ஆண்டுகளில் IUC தொகையாக மற்ற நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கிறது ஜியோ.
இதனால் ரிங் டைம்மை குறைத்தது ஜியோ. அதாவது ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்குச் செல்லும் அழைப்புகளுக்கு ரிங் 20 விநாடிகள்தான் அடிக்கும். இதனால் அவர் அழைப்புகளை எடுக்கும் வாய்ப்புகள் குறையும். ஜியோவின் இந்தச் செயல் மற்ற நிறுவனங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டிராயிடம் புகார் செய்ததற்குப்பின் 25 விநாடிகளாக ரிங் டைம்மை உயர்த்தியது ஜியோ. மற்ற ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களும் ஜியோ அழைப்புகளுக்கான ரிங் டைம்மை குறைத்தன.
இது பெரும் சர்ச்சையாக வெடிக்க இறுதியாக இந்தத் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறலாம் என முடிவுசெய்துள்ளது ஜியோ. அதனால் இனி நிமிடத்திற்கு 6 பைசா என்கிற தொகையை ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவன சந்தாதாரரை அழைக்கும்போது கட்டவேண்டியது இருக்கும். இந்தத் தொகைக்கும் நிகரான டேட்டா கொடுத்துவிடுவோம் என்கிறது ஜியோ. அதற்கான திட்டங்களையும் அறிவித்திருக்கிறது.

10 ரூபாய்- 124 IUC நிமிடங்கள், 1 GB டேட்டா
20 ரூபாய்- 249 IUC நிமிடங்கள், 2 GB டேட்டா
50 ரூபாய்- 656 IUC நிமிடங்கள், 5 GB டேட்டா
100 ரூபாய்- 1,362 IUC நிமிடங்கள், 10 GB டேட்டா
"எங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்குமான விலை மிகவும் வித்தியாசப்படுவதால் மற்ற நிறுவனங்களின் 2G வாடிக்கையாளர்கள் பலரும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு காலே கொடுக்கின்றன. ஜியோ வாடிக்கையாளர்தான் திருப்பி அழைக்கிறார். ஜியோவில் நாள் ஒன்றுக்கு 25-30 மிஸ்டு கால் வருகிறது"ஜியோ
லேண்ட்லைன் மற்றும் ஜியோ அழைப்புகளில் இதனால் எந்த மாற்றமும் இல்லையென்றும், இதுவும் தற்காலிகமானதுதான் என்றும் அறிக்கையில் ஜியோ தெரிவித்திருக்கிறது. ஆம் IUC கட்டணங்களை டிராய் ஜனவரி 2020-க்குள் முற்றிலுமாக நீக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
Also Read
மற்ற நிறுவனங்கள் இது குறித்து என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.