Published:Updated:

சாதனைப் பாதையில் சந்திரயான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாதனைப் பாதையில் சந்திரயான்!
சாதனைப் பாதையில் சந்திரயான்!

சாதனைப் பாதையில் சந்திரயான்!

பிரீமியம் ஸ்டோரி

ரண்டாவது முறையாக மீண்டும் நிலவுக்குச் செல்ல தயாராகிவிட்டது இந்தியா. தற்போது, இஸ்ரோ கையிலெடுத்திருக்கும் ‘சந்திரயான் 2’ திட்டத்தின் மூலம் நிலவில் கால் பதிப்பதுடன், இதுவரை உலகில் யாருமே செய்யாத ஒரு சாதனையையும் படைக்க தயாராவிட்டது. அது என்ன?

இதுவரை விண்ணில் எத்தனையோ செயற்கைக்கோள்களை ஏவியிருக்கிறோம். அனைத்துமே தேசத்தின் பாதுகாப்புக்கு உதவுபவை. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுபவை. மக்களின் தேவைகளுக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுடன், விண்வெளி அறிவியலில் பங்களிப்பதும், புதுப்புது ஆராய்ச்சிகளுக்குப் பங்களிப்பதும் இஸ்ரோவின் இலக்குதான். அதற்காக மேற்கொள்ளும் பயணங்களே,  ‘Deep Space Mission’ எனப்படும் வேற்றுக்கிரக ஆராய்ச்சிகள்.

காரணம், எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளியில் அல்லது வேறு கோள்களில் குடியேறி வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்தக் கிரகங்கள் பற்றிய புரிதல் நமக்குத் தேவை. அதற்காகத்தான் உலக நாடுகள் அனைத்தும் நிலா, செவ்வாய் என வேற்றுக்கிரகங்களைக் குறிவைத்து  செயற்கைக்கோள்களை அனுப்புகின்றன.

சாதனைப் பாதையில் சந்திரயான்!

இஸ்ரோவின் சாதனையாகச் சொல்லவேண்டும் என்றால், விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் எந்த நாடுமே உறுதிசெய்யாமல் தவித்துவந்த, நிலவில் தண்ணீர் இருக்கும் விஷயத்தை முதன்முதலில் இஸ்ரோதான் உறுதிசெய்தது. எந்த நாட்டினாலும் முதல் முயற்சியில் செவ்வாயை நெருங்க முடியாதபோது, மங்கள்யான் மூலம் அதை சாதித்தது. தற்போது மீண்டும் உலகில் எந்த நாடுமே இதுவரை செல்லாத நிலவின் தென் துருவத்துக்கு செல்லவிருக்கிறது  சந்திரயான் 2.

இந்தியாவின் முதல் நிலவுப் பயணமான சந்திரயான் 1, நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்ததோடு தன் பணியை முடித்துக்கொண்டது. அந்தப் பணியைத் தொடரவிருக்கிறது சந்திரயான் 2. நிலவில் எந்தளவுக்கு நீர் இருக்கிறது, என்னென்ன கனிம வளங்கள் இருக்கின்றன, நிலவின் நிலப் பகுதியின் தன்மை என்ன என்பது போன்ற ஆராய்ச்சிகளை சந்திரயான் 2 செய்யும்.

ஜூலை 15 அன்று அதிகாலை 2:51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பும் இது, செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி நிலவில் கால் பாதித்துவிடும். இப்படி நிலவில் இறங்குவதற்கு ‘Soft Landing’ என்று பெயர். இதுவரை மூன்று நாடுகள்தான் இந்த Soft Landing-ஐ வெற்றிகரமாகச் செய்துள்ளன. நான்காவது நாடாக இணையவுள்ளது இந்தியா.

சந்திரயான் 1, நிலவில் இறங்காமல் அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து தகவல் சேகரிக்கும் முயற்சி. அதற்குள் இருந்த ஒரே ஒரு கருவி மட்டும் நிலவில் தூக்கிவீசப்பட்டு, ஆராய்ச்சி செய்தது. இதற்கு Crash Landing எனப் பெயர். சந்திரயான் 2 அப்படியல்ல. மொத்தம் மூன்று பாகங்களைக் கொண்டது இது. நிலவை ஒரு வருடத்துக்குச் சுற்றிவந்து ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்பிட்டர், நிலவில் களமிறங்குவதற்கான விக்ரம் என்னும் லேண்டர், நிலவில் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்வதற்கான பிரக்யான் என்னும் ரோவர் ஆகியவை இணைந்ததுதான் சந்திராயன் 2.

இந்திய விண்வெளித்துறையின் தந்தையான விக்ரம் சாராபாயின் நினைவாகத்தான் லேண்டருக்கு விக்ரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரோவரின் பெயரான பிரக்யானுக்கு, ஞானம் என்று பொருள். இந்த சந்திரயான் 2, பூமியிலிருந்து சுமந்துசெல்வது GSLV மார்க் III ராக்கெட். இந்தத் திட்டத்தின் மொத்த செலவு 978 கோடி ரூபாய்.

இந்தப் பயணம் மட்டும் முழுமையாக வெற்றியடைந்துவிட்டால், இதுவரை யாருமே செல்லாத நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த பெருமையை இந்தியா பெறும். மேலும், அங்கிருந்து பெறப்படும் தகவல்கள் அறிவியல் உலகில் புதிய ஆராய்ச்சிகளுக்கும் வழிவகுக்கும். நிலவு குறித்து நாம் இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளவும் முடியும்.

தடைகள் பல உடைத்து, இதுவரை இஸ்ரோ எப்படி சாதனைகள் பல புரிந்திருக்கிறதோ, அதேபோல இந்தமுறையும் புதிய மைல்கல்லை எட்டும்.

- ஞா.சுதாகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு