Published:Updated:

சமூக வலைதளங்கள் பற்றிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - பெற்றோர்களுக்கு மனநல மருத்துவர் ஆலோசனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சமூக வலைதளங்கள் பற்றிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - பெற்றோர்களுக்கு மனநல மருத்துவர்  ஆலோசனை
சமூக வலைதளங்கள் பற்றிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - பெற்றோர்களுக்கு மனநல மருத்துவர் ஆலோசனை

உலகம் முழுவதும் 150 நாடுகளில், 50 கோடி பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்திவருகின்றனர். 80 கோடி பேர் தரவிறக்கம் செய்து வைத்திருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 24 கோடி பேர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  

டிக் டாக்... மிகக் குறுகிய காலத்தில், பல பிரபலங்களை உருவாக்கிய ஒரு செயலி. இளைஞர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி பாட்டு, டான்ஸ், வசன உச்சரிப்புகள் எனத் தங்களின் தனித்திறன்களை உலகறியச் செய்தனர். இங்கே யாரிடமும் வாய்ப்பு கேட்டு காத்திருக்கத் தேவையில்லை, முறையான பயிற்சியும் தேவையில்லை. தான் விரும்பியவற்றை, விரும்பிய இடத்திலிருந்து செய்துகொள்ள இந்தச் செயலி மிகவும் வசதியாக இருந்தது. அது மற்றவர்களுக்குப் பிடித்தால் பாராட்டு மழையில் நனையலாம். பிடிக்காவிட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை, வீண் மன உளைச்சலும் இல்லை. அதனாலேயே மக்களிடத்தில் இந்தச் செயலி பிரபலமடைந்தது.

'டௌயின்' என்ற பெயரில்தான் முதன்முதலில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் உள்ள  'பைட் டான்ஸ்' என்ற நிறுவனத்தால் 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில், `டிக் டாக்' ஆகப் பரிணமித்தது. `டிக் டாக்'கும் `மியூசிக்கலி'யும் இணைந்து கலக்க ஆரம்பித்தது 2018 ஆகஸ்டு மாதத்திலிருந்துதான். இன்று உலகம் முழுவதும் 150 நாடுகளில், 50 கோடி பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்திவருகின்றனர். 80 கோடி பேர் தரவிறக்கம் செய்து வைத்திருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 24 கோடி பேர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  

இந்தச் செயலியில் நாளொன்றுக்கு 1.3 கோடி காணொலிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சிறிய அளவிலான காணொலிகளில், ஆசியாவிலேயே முதன்மையானதாக இந்தச் செயலியைப் பயன்படுத்தி வெளியாகும் காணொலிகள்தான் இருக்கின்றன. `டிக்டாக்' மூலம் மாதம் 10 கோடி ரூபாய் அந்த நிறுவனத்துக்கு வருமானமாகக் கிடைக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களைத் திறந்தாலும் `டிக்டாக்' காணொலிகள்தான் வரிசை கட்டி நிற்கின்றன. அந்தளவுக்கு சமூக வலைதளங்களில், `டிக் டாக்' செயலி தனிப்பெரும் ஆளுமை செலுத்தி வந்தது. ஆனால், தொடக்கத்தில் தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தச் செயலி, நாளடைவில் ஆடைக் குறைப்பு, ஆபாச வசன உச்சரிப்பு, பிறரைப் பழித்தல் எனத் தடம் மாறிச் செல்ல ஆரம்பித்தது. அதனாலேயே ஏகப்பட்ட எதிர்ப்புகளை எதிர்நோக்க வேண்டியதாயிற்று.

இதையடுத்து `டிக் டாக்' செயலியைத் தடை செய்ய வேண்டுமெனச் சட்டமன்றத்திலேயே சில எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனும் தமிழகத்தில் `டிக் டாக்' தடை செய்யப்படும் என்று அறிவித்தார். 
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த எஸ்.முத்துக்குமார் என்ற வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் `டிக்டாக்' செயலிக்குத் தடை விதிக்க வேண்டும்' என வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், `டிக் டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அதன் பதிவிறக்கத்தை முடக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், `டிக் டாக்' செயலி வீடியோக்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்றும், இதுகுறித்து மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, `இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்பட மாட்டாது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, ஏராளமான வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது `டிக் டாக்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே, தடையை விலக்க  உத்தரவிட வேண்டும்' என்று `டிக் டாக்' செயலி நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், `டிக் டாக்' செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறி விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதேவேளையில், இந்தச் செயலியை கூகுள் நிறுவனம் நீக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டதால், இந்தியாவில் `ப்ளே ஸ்டோர்'-லிருந்து கூகுள் நீக்கியுள்ளது. 

`தடை செய்யப்படும் அளவுக்கு ஆபத்தானதா இந்தச் செயலி, ஒரு செயலியைத் தடை செய்தால் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திவிட முடியுமா?' என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எனவே, இதுகுறித்து மனநல மருத்துவர் குறிஞ்சியிடம் கேட்டோம்.

''கண்டிப்பாக முடியாது. மக்களிடம் இதுபோன்ற செயலிக்கான தேவை இருக்கும்வரை புதுப்புதுச் செயலிகள் வந்துகொண்டேதான் இருக்கும். இந்தச் செயலியைத் தடை செய்தால், இதுபோன்ற ஒரு செயலி, வேறொரு பெயரில் வரும். முறையான வழிகாட்டுதல் இல்லாவிட்டால், அப்போதும் இப்போது நடப்பதைப் போன்ற தவறான நடவடிக்கைகள் தொடரவே செய்யும். தடை உத்தரவு தற்காலிகத் தீர்வு மட்டுமே. சமூக வலைதளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனக் கற்பிப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்'' என்று சொல்லும் அவர் தொடர்ந்து பேசினார்.

''அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. இதுபோன்ற செயலிகளும் அப்படித்தான். இதன் மூலமாகப் பலருக்கு சீரியல், சினிமா போன்ற பல வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. ஸ்டேஜ் ஃபியர் உள்ளவர்கள், பிறரிடம் பேசத் தயங்குபவர்கள் (சோஷியல்போபியா) ஆகியோருக்கு சமூகத்துடன் உரையாடவும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் இந்தச் செயலி மிகப்பெரும் உறுதுணையாக இருந்துள்ளது. இதனால், திறமைசாலிகள் பலர் வெளி உலகுக்குத் தெரியவந்திருக்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் லைக், கமென்ட் பலருக்குத் தன்னம்பிக்கையை அதிகரிக்கத்திருக்கிறது. ஒருசிலர் தவறாகப் பயன்படுத்தியதுடன், நேரம் காலமில்லாமல் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால், அதற்காகத் தடை செய்வது என்பது சரியாக இருக்காது. 

உதாரணமாக, மின்சாரத்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதேநேரம், மின்விபத்தால் ஒரு சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதற்காக மின்சாரத்தைப் பயன்படுத்துவதை தவறென்று சொல்லிவிட முடியாது. அதுபோலத்தான் இத்தகைய சமூக வலைதளங்களும். இதில் தவறு நடக்கிறது என்றால் அதை முறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க வேண்டும். 

இதுபோன்ற செயலிகளை வரம்பு மீறிப் பயன்படுத்துவதால், ஒரு சிலரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பது உண்மையே. அதேபோல், ஒருசிலர் தங்களது அன்றாடக் கடமைகளை மறந்து அதில் மூழ்கிக் கிடக்கிறார்கள், அடிமையாகிறார்கள். எனவே, சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்தாவிட்டால், என்னென்ன மாதிரியான பாதிப்புகள் உண்டாகும் என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் உருவாக்க வேண்டும். 

அழும் குழந்தைகளைச் சரிசெய்ய, பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன்களைக் கொடுப்பார்கள். பின்னர் அது தொடர்கதையாகிவிடும். ஆனால், அது நல்லதல்ல. மிகப்பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதைப் பெற்றோர் முதலில் உணர வேண்டும்.

அதேபோல் வேலைக்குச் செல்பவர்கள், சிறிது நேரம் ரிலாக்ஸாக இருக்கலாமே எனச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவார்கள். அதில் கிடைக்கும் `லைக், கமென்ட்' போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு மணிக்கணக்கில் மூழ்கிவிடுவார்கள். அது அவர்களது தூக்கத்தைப் பாதிப்பதுடன் அன்றாட நடவடிக்கைகளில் மிகப்பெரிய தொய்வை உண்டாக்கிவிடும். குறிப்பிட்ட நேரம் பயன்படுத்திவிட்டு உடனடியாக வெளியே வந்துவிட வேண்டும்.

பணித் தேவைக்காக அல்லாமல், வாரத்துக்கு 20 மணி நேரத்துக்கும் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துவது, அதற்கு அடிமையானதன் வெளிப்பாடுதான். மது, புகை போன்ற பழக்கங்களுக்கு அடிமைப்பட்டால் அது வெளியே தெரிந்துவிடும். ஆனால், இதுபோன்ற இணையதளப் பயன்பாட்டுக்கு அடிமையாவது வெளியே தெரிவதில்லை. ஆனால், இதுவும் ஒருவகையான அடிமைத்தனமே. குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாகப் பயன்படுத்தினால், தங்களால் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாவிட்டால் அவர்களுக்கு முறையான சிகிச்சையும் கவுன்சலிங்கும் கண்டிப்பாகத் தேவை.

அதுபோல, சமூக வலைதளங்களில் என்ன மாதிரியான விஷயங்களைப் பதிவிடலாம், எதைப் பதிவிடக் கூடாது, எது எல்லை, எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் எனப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் அனைவருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். முறையான கட்டுப்பாடுகளை விதித்து அரசாங்கம் அதைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்'' என்கிறார் மருத்துவர் குறிஞ்சி.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு