Published:Updated:

சோசியல் மீடியாவில் பெற்றோரின் ஷேரன்ட்டிங் சரியா... தவறா..?! #Sharenting

சமூக ஊடகங்களில் பிள்ளைகளை மிஞ்சும் பெற்றோர்... ஷேரன்ட்டிங் சரியா, தவறா? உளவியல் அலசல் #Sharenting #Parenting

அந்தக் குழந்தையின் கண்முன், இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, துரித உணவு போல பேக் செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவு. மற்றொன்று, மொபைல் போன். குழந்தைக்கு அருகில் அமர்ந்திருந்த தாய், மொபைலில் வீடியோவை ஆன் செய்துவிட்டு குழந்தையை சாப்பிடச் சொல்கிறார். குழந்தை, துரித உணவென நினைத்து ஆர்வமாக அந்த ஆரோக்கிய உணவைச் சாப்பிட்டுவிடுகிறது. `என் குழந்தையை எப்படிச் சாப்பிட வைத்துவிட்டேன் பார்த்தீர்களா?' என்பது போல அந்தத் தாய் வீடியோ பார்த்து கண்ணசைத்துப் புன்னகைக்கிறார்.

ஷேரன்ட்டிங்
ஷேரன்ட்டிங்

- இப்படி ஒரு வீடியோவை சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பார்க்க முடிந்தது. இது ஓர் எடுத்துக்காட்டுதான். இப்படி குழந்தைகள் சார்ந்த ஏராளமான வீடியோக்களை நம்மால் பார்க்க முடியும். `என் குழந்தை கால் மேல் கால் போட்டிருக்கும் அழகைப் பாருங்கள்' எனத் தொடங்கி, `என் குழந்தை சமர்த்தாகச் சாப்பிடுகிறது, சரளமாகப் பேசுகிறது, வேகமாக நடக்கிறது, அழகாகப் படம் வரைகிறது, ஆர்வமாகப் புத்தகம் வாசிக்கிறது' என ஒவ்வொரு விஷயத்தையும் சமூக வலைதளத்தில் பதிவுசெய்யும் பெற்றோர் ஏராளம். குழந்தை குறித்த விஷயத்தைப் பதிவுசெய்வதில் பெற்றோருக்கு தனிப்பெருமை! சமூக வலைதளம் சார்ந்து இயங்கும் குழந்தை வளர்ப்பு, `ஷேரன்ட்டிங்' (Sharenting) எனப்படுகிறது. இது குறித்து உளவியல் ஆலோசகர் லஷ்மி பாயிடம் கேட்டோம்.

அதென்ன ஷேரன்ட்டிங்?

"செல்போன் உபயோகம் குறித்து அமெரிக்காவின் `காமென் சென்ஸ் மீடியா’ என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வொன்றைச் செய்திருந்தது. அதில், `குழந்தைகளைவிட அதிகமாக செல்போனுக்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோர்கள்தாம்’ எனக் கூறியிருந்தது. அதிலும் 45 சதவிகிதம் பேருக்கு, தாங்கள் அதற்கு அடிமையாக உள்ளோம் என்பதே தெரிவதில்லை. அந்த அளவுக்கு செல்போனோடு ஒன்றிப்போயிருக்கின்றனர் பெற்றோர்.

குழந்தைகள் - வீடியோ
குழந்தைகள் - வீடியோ
Vikatan

இப்படி செல்போனோடு ஒன்றிப்போகும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் சார்ந்த விஷயங்களைத் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் பதிவுசெய்வதுதான் ஷேரன்ட்டிங். இது, பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். `சமூக வலைதளத்தில் பகிரப்படும் எந்தவொரு தகவலும் ரகசியமாகக் காக்கப்படாது' என்பதை டெக்னாலஜியை அதிகம் உபயோகிக்கும் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். பதிவுசெய்தால் செய்ததுதான். அதை அழிக்கவே முடியாது. எனவே, தகவல்களைப் பதிவுசெய்யும் முன், இதனால் பின்விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்பதைப் பெற்றோர் யோசிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன பின்விளைவுகள் வரலாம்?

* குழந்தைகள் சார்ந்து நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், சமூக வலைதளத்தில் குழந்தையின் விவரங்களைப் பகிர்வதென்பது, குற்றவாளிகளுக்கு நாமே நம் குழந்தை குறித்த குறிப்புச் சீட்டைத் தருவதற்குச் சமம். இப்படியான பின்விளைவுகளைத் தவிர்க்க, ஆன்லைன் டிராஃபிக்கிங் குறித்த விழிப்புணர்வு, அனைத்துப் பெற்றோர்களுக்கும் தேவை.

உளவியல் ஆலோசகர் லஷ்மி பாய்
உளவியல் ஆலோசகர் லஷ்மி பாய்

* குழந்தையின் குறிப்பிட்ட ஏதேனுமொரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, சில வருடங்கள் கழித்து வேறு யாரேனும் அவர்களைக் கேலி செய்யலாம். குறிப்பாக உருவம் சார்ந்தோ, செய்கைகள் சார்ந்தோ வர்ணிப்பது, குழந்தையை சங்கடப்படுத்தும் வகையில் பேசுவது போன்றவற்றைச் செய்யும் வாய்ப்பு அதிகம். அப்படியான சூழல்களில் வளரும் குழந்தைகள், இரண்டு விதமாக ரியாக்ட் செய்வார்கள். ஒன்று, மனத்தளவில் மிகவும் பலவீனமான சூழலுக்குத் தள்ளப்படலாம். மற்றொன்று, தன்னை மிகப்பெரிய செலிபிரிட்டியாகவோ / சாதனையாளராகவோ நினைத்துக்கொண்டு, மனத்தளவில் கர்வத்தோடு செயல்படலாம். இவை இரண்டுமே, நடத்தை சார்ந்த பிரச்னைகள்தாம். இவற்றைச் சரிசெய்யாமல் விடும்பட்சத்தில், வருங்காலத்தில் குழந்தையிடம் நடத்தைக் கோளாறுகள் ஏற்படும். நடத்தை சார்ந்த எந்தவொரு பிரச்னையையும், டீன் ஏஜ் பருவத்திலேயே சரிசெய்தால்தான் சரியாகும். இல்லையெனில், சிக்கல்.

`என்ன ஆனாலும், எப்படி ஆனாலும் நாங்கள் உன்னை நம்புகிறோம்' என்ற நம்பிக்கையை குழந்தைக்குத் தர வேண்டும்.
நடிகை குஷ்பூ

* பெற்றோருக்கும் குழந்தைக்குமான அனைத்து எமோஷன்ஸும், ரீல் - ரியல் சினிமா வாழ்க்கை போல மாற்றம் பெறத்தொடங்கும். கேமராவை ஆன் செய்தால் சிரிப்பது, சேட்டை செய்வது - கேமராவை ஆஃப் செய்துவிட்டால் கோபமாகவோ தனிமையிலோ குழந்தை இருப்பது போன்ற சூழல்கள் உருவாகும். இது, பெற்றோர் குழந்தைக்கான உறவைக் கெடுக்கும்.

சமூக வலைதளத்தில் குழந்தைகள்
சமூக வலைதளத்தில் குழந்தைகள்

தீர்வு?

மேற்கூறியவற்றைத் தடுக்க சமூக வலைதளத்தில் புகைப்படங்களே ஷேர் செய்யக்கூடாதா என்ற கேள்வி எழலாம். அப்படி இல்லை. பெற்றோர் மத்தியில் ஒரே ஒரு கட்டுப்பாடு இருந்தால், புகைப்படங்கள் / வீடியோக்களைத் தாராளமாக ஷேர் செய்யலாம். பெற்றோர், எந்தச் சூழலிலும் மொபைலுக்கும் - சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகக் கூடாது. பல பெற்றோர், `தங்கள் குழந்தை சிறுவயதிலேயே வெளியுலகத்துக்குத் தெரிய வேண்டும். புகழ்பெற வேண்டும். பலரின் பாராட்டுகளைப் பெற வேண்டுமென' நினைத்து, அவர்களின் ஒவ்வோர் அசைவையும் பகிர்ந்துகொண்டே இருக்கின்றனர். இவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, `உங்கள் குழந்தையின் தேவை, நீங்கள்தானே தவிர வெளியுலகில் அவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்தித் தரப்போகும் விளம்பர உருவங்கள் இல்லை'. ஆகவே, குழந்தையோடு ஆஃப் தி கேமராவிலும் சிரியுங்கள், அவர்களின் சேட்டையை ரசியுங்கள், விளையாடுங்கள்... எல்லாம் செய்யுங்கள்.

சினிமா ஹீரோயிசக் கலாசாரம் சமூகத்தில் வன்முறையை ஊக்குவிக்கிறதா?- ஓர் உளவியல் பார்வை #NoMoreStress

குழந்தை எந்தச் சூழலிலும் தனிமையை உணர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உடலளவில் மட்டுமல்லாமல் மனத்தளவிலும் குழந்தையுடனேயே இருங்கள். மொபைல் அதிகம் உபயோகிக்கும் பெற்றோர் குழந்தையுடன் இருக்கும்போது, கருவிகளை உங்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு குழந்தையை அதிக நேரம் இணைத்துக்கொள்ளுங்கள். மொபைல் இல்லாமல், லேப்டாப் - கேமரா எதுவுமில்லாமல் எவ்வளவு நேரம் உங்கள் குழந்தையுடன் நீங்கள் சகஜமாக இருக்கிறீர்கள் என்பதைக் கொண்டு, நீங்களே உங்களின் பேரன்டிங்கை மதிப்பீடு செய்துகொள்ளலாம்!" என்கிறார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், நடிகை குஷ்பூ. தன் வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு எடுக்கும் செல்ஃபி -க்கள், குழந்தைகளின் பழைய புகைப்படங்கள், தற்போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் செல்ஃபி-க்கள் என அனைத்தையும் ஷேர் செய்யும் மாடர்ன் அம்மாவாக வலம்வரும் குஷ்பூவிடம், ஷேரன்ட்டிங் குறித்துக் கேட்டோம்.

மகளுடன் நடிகை குஷ்பூ
மகளுடன் நடிகை குஷ்பூ

"வணிக அரசியல் - தகவல் பரிமாற்றம் - போலித் தகவல்கள் / செய்திகள் பகிர்வு போன்றவை அதிகமிருப்பதால், அனைவருமே சமூக வலைதள உபயோகத்தில் சுய கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மனநலம் சார்ந்த வல்லுநர்களின் வாதத்தில் நான் வேறுபடுகிறேன். சமூக வலைதளங்களில் பிள்ளைகளின் போட்டோ மற்றும் வீடியோக்களைப் பகிரும்போது, வருங்காலத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

`சமூக வலைதளங்களின் வழியே ஒரு குழந்தையின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்வதன் மூலமாக, அவர்களை எமோஷனலாக எளிதில் கேலி செய்துவிடலாம்' என்பது அவர்களின் கூற்று. ஆனால், யாரோ முகம் தெரியாத ஒருவர், என்றோ ஒருநாள் செய்யப்போகும் கேலிக்கும் கிண்டலுக்கும் பயந்துகொண்டு பெற்றோராகிய நாம் இன்றே பயப்பட வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

Vikatan

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உலகத்தை உருவாக்கித் தரவேண்டும் என்பதே என் கருத்தும். ஆனால், எது பாதுகாப்பான உலகம் என்பதில் நமக்குத் தெளிவு தேவை. `குற்றவாளிகள் அதிகமிருப்பதும், குற்றச்செயல் புரிபவர்களுக்குப் பயந்துகொண்டு நாம் நம் சுதந்திரத்தைச் சுருக்கிக்கொள்வதுமா பாதுகாப்பான உலகம்? சொல்லப்போனால், அப்படியான உலகம்தான் உண்மையில் பாதுகாப்பற்றது.

சரியான தீர்வு என்னவெனில், நம் குழந்தைக்கு நாம் நல்லதைக் கற்பிக்க வேண்டும். அடுத்தவரை காயப்படுத்தாத எந்தவொரு செயலும் நல்லதுதான் என்பதைக் குழந்தை உணர்ந்துகொண்டாலே போதும்.

முக்கியமாக, குழந்தைகளுக்கு தைரியத்தைக் கற்பிக்க வேண்டும். `யாரேனும் உன்னிடம் தவறாக நடந்துகொண்டால், உன் மனம் நோகும்படி செயல்பட்டால், உன்னைச் சங்கடப்படுத்தினால், எங்களிடம் (பெற்றோரிடம்) கூறு. அவர்களை எதிர்த்துப் போராடக் கற்றுக்கொள்' என அவர்களை எதிர்த்து நிற்க சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்படி நீ போராடும்போது, பெற்றோராகிய நாங்கள் எல்லா விதத்திலும் உனக்குத் துணையாக இருப்போம்' எனக்கூறி அவர்களை வளர்க்க வேண்டும்.
View this post on Instagram

My small world.. ❤❤

A post shared by Khush (@khushsundar) on

குழந்தையிடம் அதிக நேரம் பேச வேண்டும். நடத்தை சார்ந்த பிரச்னை ஏதும் குழந்தையிடம் தெரியவந்தால், உடனடியாக அவர்களிடம் அதுகுறித்து விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். `என்ன ஆனாலும், எப்படி ஆனாலும், நாங்கள் உன்னை நம்புகிறோம்' என்ற நம்பிக்கையைத் தர வேண்டும். அப்போதுதான் குழந்தை விஷயத்தை பகிர்ந்துகொள்ளும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக குழந்தையைக் குற்றவாளி ஆக்கிவிடாமல், ஏன்... எதனால் குழந்தை இப்படிச் செய்தது என்பதைப் புரிந்துகொண்டு பிரச்னையைச் சரிசெய்ய முயல வேண்டும். மற்றபடி ஷேரன்ட்டிங் தவறானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை'' என்கிறார் குஷ்பூ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு