தற்போதைய டிஜிட்டல் உலகில் செல்போன் பயன்படுத்தாமல் யாரும் இல்லை. நம் அருகில் கூட 99 சதவிகிதம் பேர் செல்போனில் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பர். கிராமம், நகரம் என வித்தியாசம் இல்லை. எல்லா இடங்களிலும் இதுதான் நிலை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடும் விதத்தில் லட்சக்கணக்கான வீடியோ கேம்ஸ் செல்போனில் வந்துவிட்டன. உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் 3 பில்லியன் மணி நேரத்தை கேம் விளையாடுவதற்குச் செலவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 1.2 பில்லியன் பேர் தொடர்ச்சியாக விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. இதில் 98 சதவிகிதம் ஆண்கள், 94 சதவிகிதம் பெண்கள். ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக ஆயிரக்கணக்கான கேம்கள் வெளிவருகின்றன. அதற்கு ஏற்றவாறு எளிதாக விளையாட கன்சோல்களும் (PC, Xbox, Playstation, Mobile) குறைந்த விளையிலேயே விற்கப்படுகின்றன. குறிப்பிட்ட கேம் விளையாட எளிதாக இருந்ததாலோ, கண்ட்ரோல்கள் வசதியாக இருந்துவிட்டாலோ நமக்கு நேரம் போவதே தெரியாது.

பல பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடைபெறும் துறைகளில் கேமிங் துறையும் ஒன்று. வீடியோ கேம்கள் ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி, வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாகத் திரைப்படங்களின் வெற்றியைப் பொறுத்து, பல்வேறு கேம்கள் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கேம்களின் மூலம் வெகு சுலபமாக மில்லியன் கணக்கான டாலர்களை அள்ளிவிடுகின்றனர். 2018-ல் உலகளவில் வீடியோ கேம் மூலம் அதிக வருமானத்தைப் பெற்ற டாப் 10 கேம் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சீனாவை மையமாகக் கொண்டுள்ள டென்சென்ட் நிறுவனம்தான். 1998-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் மொபைல் விளையாட்டுகள் மட்டுமல்லாமல் சமூக வலைதளம், வெப் போர்ட்டல்ஸ், இ-காமர்ஸ் போன்ற பல்வேறு துறைகளிலும் இயங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன் போகிமான் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் தற்போது பப்ஜி விளையாடிக்கொண்டிருக்க இந்த டென்சென்ட் நிறுவனம்தான் காரணம். பப்ஜி, ஹானர் ஆப் கிங்க்ஸ், ஹாப்பி லேண்ட்லார்டு, ஜே எக்ஸ் ஆன்லைன் போன்ற பல்வேறு மொபைல் விளையாட்டுகள் உலகளவில் அதிகமாக விளையாடப்பட்டவை. கேம்கள் தயாரித்ததன் மூலமாக 2018-ல் 1,38,131 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலின் இரண்டாவது இடத்தில் இருக்கும் சோனி 2018-ல் 99,526 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஸ்டார் பிளாஸ்டர், அலிபாபா, ரிங் கிங், காட் ஆப் வார் போன்ற உலகளவில் பிரபலமான ஆக்ஷன் கேம்களைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் கேம்களையும் தயாரித்து வருகிறது. ஸ்டேட் ஆப் டீகே, ஹெல்பிளேடு, ஹலோ இன்ஃபினிட்டி போன்ற பல்வேறு கேம்களைத் தயாரித்த இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் 68,278 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்று டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து 66,171 கோடி ரூபாயைப் பெற்ற ஆப்பிள் நான்காவது இடத்திலும், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்டிவிஷன் பிளிஷார்ட்ஸ் 48,244 கோடி ரூபாயுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்த நிறுவனம் முதலில் தயாரித்தது கால் ஆப் டுயூட்டி என்ற கேம். இதையடுத்து உலகளவில் பிரபலமான வார்கிராப்ட், கேண்டி கிரஷ் சாகா போன்றவற்றையும் தயாரித்துள்ளது.

ஆறாது இடத்தில் இருக்கும் கூகுள், கேம்கள் மூலமாக 45,479 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது. சீனாவைச் சேர்ந்த நெட்ஈஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய பேண்டஸி வெஸ்ட் வேர்டு, குங் பூ பாண்டா, தி எக்ஸ் வேர்ல்டு, ஹீரோஸ் ஆப் வார் கிராப்ட் போன்ற விளையாட்டுகள் மிகப் பிரபலம். இந்த நிறுவனம் 43,239 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்று டாப் 10 பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் என்று கூறப்படும் நிறுவனம் இஏ. 1982-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆர்மி ஆப் வார்ஸ் என்ற வீடியோ விளையாட்டை 2008-ல் அறிமுகப்படுத்தியது. ஸ்டார் வார்ஸ், பிபா சீரிஸ், டெட் ஸ்பேஸ் சீரிஸ், NFS(Need for Speed™ No Limits) போன்றவை மிகவும் பிரபலமானவை. 2018-ல் 37,058 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது.

உலக பிரபலமான போகிமான் கேமை அறிமுகப்படுத்திய நிண்டென்டோ 30,016 கோடி ரூபாயுடன் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த சூப்பர் மேரியோ ரன் மிகவும் பிரபலம். டாப் 10 பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது பண்டாய் நாம்கோ என்ற நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்த ஏஸ் கம்போட் ஜீரோ: தி பெலிகன் வார் என்ற கேம் உலகம் முழுவதும் பிரபலம். 100-க்கும் அதிகமான ஆக்ஷன் கேம்களைத் தயாரித்துள்ள இந்த நிறுவனம் 19,187 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது. வீடியோகேமை விளையாடுபவர்கள் அதிகம் பயன்படுத்திய கருவி என்னவென்றால் செல்போன்தான். உலகம் முழுவதும் 45% பேர் செல்போனைப் பயன்படுத்துகின்றனர். மேலும் ஜாய்ஸ்டிக்கை 38% பேரும், கணினியை 17 சதவிகிதம் பேரும் பயன்படுத்துகின்றனர்.
கேம் மட்டுமின்றி பல்வேறு தேவைக்காகவும், பொழுது போக்குக்காகவும் பிள்ளைகளை விட பெற்றோர்களே அதிகம் செல்போனைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது தற்போதைய ஆண்டில் இதுவரை பெற்றோர்கள் 52 சதவிகிதமும், பிள்ளைகள் 39 சதவிகிதமும் பயன்படுத்தியுள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை வரவேற்கலாம். வீடியோ கேம் விளையாடுவது ஒரு பொழுதுபோக்காக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை அதுவே அடிமைப்படுத்துவதும் நிலைக்குச் செல்லும்போதுதான் மிகவும் ஆபத்து.