உலகத்துல மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தோட நிறுவனர், உலகத்துல டாப் 10 பத்திரிகைகள்ல ஒன்னான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையோட உரிமையாளர், உலகத்துல முதன்மையா இருக்கிற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள்ல ஒன்னான ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தோட நிறுவனர், இப்படி அவருக்கு பல அடையாளங்களை சொல்லிட்டே போகலாம். வேற யாரு, ஜெஃப் பஸாஸைத் தான் சொல்றோம். மேல சொன்ன மாதிரி பல அடையாளங்களைக் கொண்ட அவருக்கு இன்னைக்கு பிறந்தநாள். அவரோட வாழக்கைய கொஞ்சம் ரீவைண்டு செஞ்சு பார்க்கலாமா?
நியூ மெக்ஸிகோ நகரத்துல இருக்க ஆல்பகர்க்கிங்கிற இடத்துல 1964-ல பிறந்து ஹவுஸ்டன் மற்றும் மியாமில வளர்றாரு ஜெஃப்ரி ப்ரஸ்டன் ஜார்கென்சன். ஆமாம், அவர் பிறக்கும் போது அவரோட பேர் இதுதான். ஜெஃப்ரி பிறந்தப்போ அவங்க அம்மாவான ஜாக்லின்னுக்கு 17 வயசு தான். 1965-ல் ஜெஃப்ரியோட அப்பாவான தியோடோர் ஜார்கென்சனை விவாகரத்து பன்னிட்டு மிகுல் மைக் பஸாஸ் அப்படிங்கிறவர திருமணம் செஞ்சுக்குறாங்க. ஜெஃப்ரி ப்ரஸ்டன் ஜார்கென்சன்-க்கு 4 வயசு இருக்கும் போது மைக் அவரை அதிகாரப்பூர்வமா தத்தெடுத்துக்கிறாரு. அதன் பிறகு தன் அவரோட பெயரும் ஜெஃப் பஸாஸா மாறுது. இயல்புலேயே ரொம்பு சுட்டித்தனமும், கத்துக்குறதுல நிறைய ஆர்வமும் கொண்டவராவே இருந்திருக்காரு பஸாஸ்.

பஸாஸ் இருந்த மியாமில, மியாமி ஹெரால்டு அப்படிங்கிற பத்திரிகை இயங்கி வந்துச்சு. அந்த பத்திரிகையில 'சில்வர் நைட் விருதுகள்' அப்படிங்கிற ஒரு விருது கொடுத்துட்டு வந்தாங்க. கல்லூரிகள்ல சிறப்பா செயல்படுர மாணவர்களுக்கு இந்த விருதைக் கொடுப்பாங்களாம். 1982-ல இந்த விருதை பஸாஸ் வாங்கியிருக்காரு. 1986-ல பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துல தன்னோட கல்லூரிப் படிப்பை முடிக்கிறாரு பஸாஸ். பஸாஸ் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல பொறியியல் பட்டப்படிப்பை முடிச்சிருக்காரு. கல்லூரி முடிச்சதுக்கு அப்புறம் இன்டெல், பெல் லேப்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள்ல இருந்து வேலைக்காக பஸாஸைக் கூப்படுறாங்க. அவங்களையெல்லாம் விட்டுட்டு Fitel அப்படிங்கிற ஒரு ஃபின்டெக் ஸ்டார்ட்-அப்ல வேலைக்கு சேர்றாரு பஸாஸ். அதன் பிறகு பேங்க்கரஸ் ட்ரஸ்ட் நிறுவனத்துலயும் ரெண்டு வருஷம் வேலை பாக்குறாரு. 1990-ல D.E.Shaw & co அப்படிங்கிற ஒரு முதலீட்டு நிறுவனத்துல சேர்ந்து தன்னோட 30-வது வயசுலயே மூத்த துணை-தலைவர் பதவிய அடையிறாரு பஸாஸ். 1994 வரைக்கு தான் அந்த நிறுவனத்துலயும் வேலை பார்த்திருக்காரு.
அந்த நிறுவனத்துல் இருந்து வெளிய வர்ரதுக்கு முன்னையே சுயமா ஒரு தொழில் தொடங்கனும்னு பஸாஸோட மனசுல ஒரு எண்ணம் தோன்றியிருக்கு. 1990-கள்ல தான் இணையம் சார்ந்த ஸ்டார்ட்-அப்களும் தொழில்நிறுவனங்களும் நிறைய தோன்ற ஆரம்பிச்சது. அந்த நேரத்துல தான் இணையவழி வணிகம் 2,300 சதவிகிதம் அதிகரிச்சிருக்குன்னு ஒரு தரவுல படிச்சிருக்காரு. இதைத் தொடர்ந்து இணையவழியில விற்பனை செய்யிற மாதிரி 20 பொருட்களைப் பட்டியலிடுறாரு பஸாஸ். அதை 5 பொருட்களா குறைச்சு, கடைசியில ஒரே ஒரு பொருளை தேர்ந்தெடுக்குறாரு. அது தான் புத்தகம். இணையவழியில புத்தகம் விற்க ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்யிறாரு பஸாஸ். ஜூலை 5, 1994-ல Cadabra-ங்கிர பேர்ல ஒரு நிறுவனத்தைத் தொடங்குறாரு. அந்த பேர் உச்சரிக்கக் கொஞ்சம் கஷ்டமா இருக்கிற மாதிரி இருக்கு, இது நிறைய பேரே நிறுவனத்தோட பெயர் சென்றடையுரதையும் பாதிக்கும்னு, நினைச்சு கொஞ்ச நாள்லையே அமேசான்.காம்-னு நிறுவனத்தோட பெயர மாத்துனாரு. தொடக்கத்துல பஸாஸ் அவரோட நிறுவனத்தைத் தொடங்குறதுக்கு அவரோட பெற்றோர்கள் 2,50,000 டாலரை முதலீடு செய்றாங்க.

1995-ல ஒரு இணையவழி புத்தகம் விக்கிற நிறுவனமா அமேசான் தொடங்கப்பட்டுச்சு. உலகத்தோட எந்த மூலையில இருந்தும் இணையசேவை இருந்தா, அமேசான்ல புத்தகங்களை வாங்கலாம். அமேசான்ல முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கிட்ட, அமேசான் நிறுவனம் வெற்றியடையாம போறதுக்கு 70 சதவிகித வாய்ப்புகள் இருக்குன்னு தான் பஸாஸ் சொன்னாரு. தொடங்கி ரெண்டு மாதத்துலேயே உலகமெங்கும் 45 நாடுகள்ல புத்தகங்களை வித்துச்சு அமேசான். அமேசானோட விற்பனையும் வாரத்துக்கு 2,000 டாலர்கள் அளவுக்கு முதல் ரெண்டு வாரங்கள்லயே கூடுச்சு. இதுக்கு அப்புறம் பஸாஸ் தொட்டதெல்லாம் வெற்றினு தான் சொல்லனும். ஜூலைல தொடங்கப்பட்ட அமேசான், அக்டோபர் மாதமே ஒரு பொது நிறுவனமா மாறுச்சு. அடுத்து ரெண்டே வருஷத்துல 1997-ல AMZN-ங்கிர குறியீடோட அமெரிக்காவோட நாஷ்டாக் பங்குச்சந்தையில 18 அமெரிக்கன் டாலர்க்கு பட்டிலிடப்படுது அமேசானோட பங்குகள். இணையதளத்தோட வளர்ச்சியும் பஸாஸுக்கு கைகொடுத்துச்சு. இணையதளம் வளர்ச்சி அடைஞ்சு அதிக மக்கள் கிட்ட போகப் போக, அமேசானும் அதிக மக்களை சென்றடைஞ்சது. அமெரிக்காவுல இருந்த பெரிய புத்தக நிறுவனங்களான பார்டர்ஸ் அப்புறம் பார்ன்ஸ் & நோபிள்ஸ் நிறுவனங்களை விடவும் பஸாஸோட அமேசான் பெரிய அளவுல வளர்ந்துச்சு.
முதல்ல புத்தகங்களை மட்டும் வித்துட்டு இருந்த அமேசான் 1998-ல இசை மற்றும் காணொளிகளையும் விற்க ஆரம்பிச்சது. அந்த ஆண்டோட முடிவுக்குள்ளேய மற்ற நுகர்வோர் பொருட்களையும் அமேசான்ல விற்க ஆரம்பிச்சாரு பஸாஸ். 2002-ல அமேசான் வெப் சர்வீஸஸ்-ங்கிற கிளவுடு கம்ப்யூட்டிங் தளத்தையும் தொடங்குறாரு பஸாஸ். எல்லாருக்கும் பிரச்சினை வர்ர மாதிரி, அமேசானுக்கும் 2002-ல நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டுச்சு. ஆனால், 2003-ல் அதையெல்லாம் சமாளிச்சு வந்து 400 மில்லியன் டாலர் லாபம் ஈட்டுச்சு அமேசான். 2007-ல அமேசான் கிண்டிலை அறிமுகப்படுத்துறாரு. 2013-ல உலகின் மிகப்பெரிய இணையதள வர்த்தக நிறுவனமா மாறுது அமேசான். அதே ஆண்டுல தான் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள்ல ஒன்னான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைய நாஷ்ஹோல்டிங்ஸ் நிறுவனம் மூலமா வாங்குறாரு பஸாஸ். இதுக்கு அடுத்து தான் மற்ற துறைகள் மேல இருந்த தன்னோட கவனத்தை கொஞ்சம் விண்வெளித்துறைக்கு திருப்புராரு பஸாஸ். ஜனவரி 2018-ல தன்கிட்ட இருக்கிற அமேசான் பங்குகளை கொஞ்சம் வித்து ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தை மேம்படுத்துறதுக்காக நிதி திரட்டுராரு. அதே ஆண்டு மார்ச் மாதம் உலகத்தோட முன்னணி பணக்காரர்களையெல்லாம் பின்னால தள்ளி 112 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்போட உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியல்ல முதல் இடத்துல அமர்ராரு ஜெஃப் பஸாஸ்.

பிப்ரவரி 2021-ல அமேசானோட தலைமை செயல் அதிகாரி பதவியில இருந்து அதிகாரப்பூர்வமா விலகிட்டு தன்னோட இடத்துல ஆண்டி ஜாஸியை விட்டுட்டுப் போறாரு பஸாஸ். தலைமைப் பதவிய விட்டு கீழ இறங்குன பிறகு அமேசான் ஊழியர்களுக்கு ஒரு கடிதம் எழுதுறாரு பஸாஸ். அதுல, இனி ப்ளூ ஆரிஜின், வாஷிங்டன் போஸ்ட், பஸாஸ் எர்த் பண்டு உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள்ல கவனம் செலுத்தப்ப போறதா குறிப்பிட்டிருக்காரு. பஸாஸூக்கு சின்ன வயசுல இருந்தே விண்வெளிக்குப் போறதுக்கு அலாதி ஆர்வமாம். அவரோட கல்லூரி பட்டமளிப்பு விழாவுல பேசும் போதே, மனிதர்களை விண்வெளிக்கு கூட்டுட்டு போறது தன்னோட லட்சியம்னு சொல்லியிருக்காரு பஸாஸ். அவரோட அந்தக் கல்லூரி காலக் கனவு தான் 2000-ம் வரஷத்துலயே ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தை பஸாஸைத் தொடங்க வச்சிருக்கு. அப்போட கண்ட கனவு 2021-ல பஸாஸுக்கு நனவாயிருக்கு. ஜூலை 20, 2021-ல தன்னோட நியூ ஷெப்பர்டு விண்கலம் மூலமா தன்னோட சகோதரர் மார்க் பெஸாஸ், வாலி பங்க் மற்றும் ஆலிவர் டேமன்னோட விண்ணுக்கு சென்று திரும்பியிருக்காரு ஜெஃப்.
ஜெஃப் பஸாஸுக்கு யார் போட்டியாளர்னு கேட்டா, ஒருத்தரக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இணையதள வணிகத்துல, பத்திரிகைத் துறையில, வெப் சர்வீஸ் தளத்துல, விண்வெளித்துறையிலனு அவர் ஏகப்பட்ட பேருக்கு போட்டியாளர இருக்காரு. இப்படி பல்துறையிலையும் சாதிச்ச பஸாஸுக்கு இன்னைக்குப் பிறந்தநாள். அவருக்கு நாமளும் நம்மோட வாழ்த்துக்களை சொல்லிடலாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெஃப் பஸாஸ்.