Published:Updated:

மேடம் ஷகிலா - 36 | ஆன்லைன் ஷாப்பிங் ஏன் மன அழுத்தத்தையும், குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது?!

ஆன்லைன் ஷாப்பிங்
News
ஆன்லைன் ஷாப்பிங்

ஒரு பொருளை கையில் தொட்டுப் பார்த்து வாங்கும்போது எடுத்துக்கொள்ளும் நேரம் நமக்கு அந்தப் பொருள் தேவையா இல்லையா என்பதை உணர்த்துவது போல ஆன்லைன் ஷாப்பிங் உணர்த்துவது இல்லை.

Published:Updated:

மேடம் ஷகிலா - 36 | ஆன்லைன் ஷாப்பிங் ஏன் மன அழுத்தத்தையும், குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது?!

ஒரு பொருளை கையில் தொட்டுப் பார்த்து வாங்கும்போது எடுத்துக்கொள்ளும் நேரம் நமக்கு அந்தப் பொருள் தேவையா இல்லையா என்பதை உணர்த்துவது போல ஆன்லைன் ஷாப்பிங் உணர்த்துவது இல்லை.

ஆன்லைன் ஷாப்பிங்
News
ஆன்லைன் ஷாப்பிங்
தீபாவளிக்கு ஒன்று, பிறந்தநாளுக்கு ஒன்று என ஆண்டுக்கு இரண்டு புத்தாடைகள் மட்டுமே கிடைக்கப்பெற்று, புது ஆடைகள் வாங்கும் நாட்களை தனித் திருவிழாவாக கொண்டாடியவர்கள் 80s மற்றும் 90s கிட்ஸ். இன்று நாட்டில் பொருள்கள் வாங்குவது மூலம் செலுத்தப்படும் மறைமுக வரியின் பெரும் பங்குதாரர்களும் இவர்கள்தான்.

தீபாவளிக்கு அணியும் புத்தாடையை இரவு வரைக்கும் அணிந்து பிறகு அதை இரவோடு இரவாக துவைத்து, காயவைத்து மறுநாள் பள்ளிக்கு அணிந்து செல்வதும், பிறந்தநாளுக்கு அணியும் புத்தாடையுடன் இரவு தூங்கி, மறுநாள் காலைவரை அதனோடு இருக்குமளவு புது ஆடைகள் என்பது ஆண்டு முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வரம் போல் இருந்த காலமது. ஒரு பிறந்தநாளுக்கு வாங்கிய ஆடை நான்கைந்து பிறந்த நாள் கழித்து போடவே முடியாதளவு பிள்ளைகள் வளர்ந்துவிட்ட பிறகு உடன் பிறந்தவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ போய்ச் சேரும்.

1991-ல் பொருளாதார தாராளமயமாக்கல் இந்தியாவுக்கு அறிமுகமான காலகட்டத்தை இன்றைய புதிய நுகர்வு கலாசாரத்தின் தொடக்கமாக சொல்லலாம். தொலைக்காட்சி போன்ற பொருள்களின் விலை 90-களின் இறுதியில் குறைய ஆரம்பித்ததும் எல்லா வீடுகளிலும் மாதத் தவணையில் மின்னணு சாதனங்கள் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது.

டிவி
டிவி

2000-ல் வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. அதிக அளவு நடுத்தர குடும்பத்து மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த பிறகு நுகர்வு கலாசாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு பணம் சேர்த்து ஓய்வு காலத்துக்குள் ஒரு வீடு, பிள்ளைகள் திருமணம், முடிந்தால் தங்கத்தில் முதலீடு என்பதே பெரும்பான்மை மக்களின் கனவாக இருந்தது.

2000-த்தின் தொடங்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு கிரெடிட் கார்டும், அதில் செலவு செய்யும் பணத்தை மாதத் தவணையில் #EMI திருப்பி செலுத்தும் வசதியையும் தனியார் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கொடுக்க ஆரம்பித்தன. அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மட்டும் எளிதாக கிடைத்து வந்த வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான மாதத் தவணை வங்கிக் கடன்கள், பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் எளிதாக கிடைக்க ஆரம்பித்தன.

16 -17 வருடங்களுக்கு முன்பு பத்தாயிரம் ரூபாய் மாத வருமானம் உள்ளவர்கள்கூட 25 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் போன் வாங்க கிரெடிட் கார்ட் மாதத் தவணை முறை உதவியாக இருந்தது. இவ்வளவுக்கும் அப்போது சமூக வலைத்தளங்கள் கிடையாது. இன்றைய ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு போல அன்றைய இண்டர்நெட் போன்களில் கிடையாது. தேவையானது, தேவையில்லாத பொருள் என்றெல்லாம் யோசிக்காமல் பிடித்ததை வாங்கிக் குவிக்கும் பழக்கம் அப்போது தான் தொடங்கியது எனலாம்.

2007-ல் வீடு தேடி வந்து பொருள்களை டெலிவரி செய்யும் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஒரு பொருளை கையிலிருக்கும் செல்போனிலேயே நான்கு கடைகளில் விலை விசாரிக்கலாம், அந்தப் பொருள் பற்றி ஏற்கெனவே வாங்கியவர்களின் ரெவ்யூவை தெரிந்து கொள்ளலாம், பொருள்கள் கைக்கு வந்ததும் பணம் கொடுக்கலாம், பொருள்களுக்கான பணத்தை 0% வட்டியில் மாதத் தவணையில் செலுத்தலாம், பொருள் கைக்கு வந்தபிறகு பிடிக்கவில்லை என்றால் 10 முதல் 15 நாட்களுக்குள் திருப்பி அனுப்பிவிட்டு பணம் அல்லது வேறு பொருள் வாங்கிக் கொள்ளலாம், என்று ஏகப்பட்ட சலுகைகள் ஆன்லைன் நிறுவனங்கள் தருவதன் மூலம் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் மக்களுக்கு ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது தினசரி கடமைகளில் ஒன்று என்பதுபோல் ஆகவிட்டது.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த ஒன்றரை ஆண்டுகால கொரோனா லாக்டெளனில் ஆன்லைனில் வாங்கும் பழக்கம் மிகவும் அதிகரித்திருக்கிறது. இது ஒருவகையில் வசதியாகவும், எளிதாகவும் இருக்கின்றது. ஆனால் நம்மை அறியாமலேயே தேவைக்கு அதிகமான பொருள்களை வாங்கும் பழக்கத்தை ஆன்லைன் ஷாப்பிங் உருவாக்கியிருக்கிறது.

பொருள்கள் வாங்க கடைக்கு சென்று, அவற்றை நேரில் பார்த்து, அதன் பயன்பாட்டை சோதித்து, முடிவும் செய்யும்போது உண்மையில் அந்த பொருள் தேவையா, இல்லையா என்று யோசிக்க அவகாசம் இருக்கும். ஆன்லைனில் பொருள்கள் வாங்கும்போது மனம் ஒருவித மயக்க நிலையில் இருக்கின்றது. மனதுக்குள் இருந்து ஒரு குரல் இந்த பொருள் இல்லை என்றால் நாளையிலிருந்து எந்த வேலையும் ஓடாது, உடனே வாங்கிவிடு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆன்லைனில் பொருள்கள் வாங்கும்போது நாம் அதுபற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்வது கிடையாது. பொருள்களை பார்க்கிறோம். விலை ஒத்து வந்தால் மனதின் பேச்சைக் கேட்டு ஆர்டர் செய்து விடுகிறோம்.

ஒரு பொருளை கையில் தொட்டுப் பார்த்து வாங்கும்போது எடுத்துக்கொள்ளும் நேரம் நமக்கு அந்தப் பொருள் தேவையா இல்லையா என்பதை உணர்த்துவது போல ஆன்லைனில் வாங்குவது உணர்த்துவது இல்லை. ஏனெனில் தேவையான ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதுபோல இருக்கும் 10 பொருள்களை அதே திரையின் கீழ் பார்க்கிறோம். தேர்வு செய்திருக்கும் பொருள் வேறு ஒரு பிராண்டு/விற்பனையாளரிடம் இருந்து சற்று குறைந்த விலைக்கு அதே திரையில் காட்டப்படும்போது நமது மனம் இன்னும் கொஞ்சம் இளகி அதை உடனே வாங்கிவிடு என்று நச்சரிக்கிறது. கூடவே பாசிட்டிவான ரெவ்யூக்கள் சிறிது ப்ரொமோஷன் வேலை செய்கின்றன.

உதாரணத்துக்கு ஒரு பொருளை கடையில் ஆயிரம் ரூபாய்க்கு பார்த்திருப்போம். அதே பொருள் சில மாறுதல்களுடன் வேறு பிராண்டுகளில் 800 ரூபாய்க்கு ஆன்லைனில் வாங்க முடியும். 800 ரூபாய் பொருள் மேலும் சில மாறுதல்களுடன் 700 ரூபாய்க்கு அதே திரையில் “பரிந்துரைகளில்” பட்டியிலடப்படும். 1000 ரூபாய் பொருள் தேவையில்லை என்று கடையில் வைத்துவிட்டு வந்திருக்கலாம். ஆனால் அதற்கு இணையான ஒன்று 700 ரூபாய்க்கு பார்த்ததும் அது மிக அத்தியாவசியமான பொருள் என்று எண்ணத் தோன்றும். இந்த எண்ணம் அந்த பொருள் வாங்கி முடிந்தபின் தான் ஓயும். இதுதான் கடந்த வாரம் நான் சைக்கிளில் மாட்டும் Cell Phone Pouch வாங்கிய கதை.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்

இந்த ஆன்லைன் ஷாப்பிங் தற்போது பதற்றத்தை உருவாக்கும் anxiety நோயாக மாறி இருக்கிறது. ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதற்கு முன்பு உருவாகும் பதற்றத்தை போலவே வாங்கிய பின்பும் ஒருவித பதற்றம் உண்டாகிறது. அது பொருள்கள் வாங்கியதற்காக வருத்தப்பட செய்கிறது. நமது வருத்தம் பொருள்கள் வாங்கியதற்காகவா அல்லது பணம் செலவழித்ததற்காகவா என்றும் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். பொருள்கள் வாங்குவதால் வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதும் ஒருவகையில் மன பதற்றம் அல்லது வருத்தத்துக்கு காரணமாக இருக்கலாம்.

வாங்க ஆசைப்படும் பொருள்களை பற்றி முதலில் ஒன்றுக்கு இரண்டு முறை அந்த பொருள் நிச்சயம் தேவையா என்று யோசித்துக் கொள்ள வேண்டும். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். நிச்சயமாக ‘தேவை’ என்று தான் மனதில் தோன்றும்.

சமூகவலைதளங்களில் ஒரு பொருளின் பயன்பாடு அல்லது சிறப்பு பற்றி ஏற்கெனவே வாங்கி இருப்பவர்களிடம் அனுபவம் கேட்பதற்கு முன்பு நம் குடும்பம் அல்லது நம்முடைய பொருளாதார நிலை தெரிந்த நண்பர்களிடத்தில் வாங்குவது பற்றி பேச வேண்டும்.

இதில் இரண்டு விதமான கருத்துக்கள் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் ’இது தேவையா... இருப்பதை வைத்து சமாளிக்க முடியாதா?’ என்று கேட்கலாம். நண்பர்கள் வாங்க சொல்லி ஊக்கப்படுத்தலாம். அல்லது இப்போதிருக்கும் பொருளாதார சூழ்நிலைக்கு இது தேவையா எனலாம். ஆனால் இதுவெல்லாம் விலை அதிகமான பொருள்கள் வாங்குவதற்குதான் பயன்படும்.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்
Buying anxiety இருப்பவர்கள் குறைவான விலையில் இருக்கும் பொருள்களை வாங்கி தங்களுடைய பதற்றத்தை குறைத்துக் கொள்வார்கள். இது வெறும் நூறு, இருநூறு ரூபாய் பொருள் தானே என்று ஆரம்பத்தில் தோன்றும். பிறகு தொடர்ந்து ஒரு போதை பழக்கமாகி மாதம் முழுவதும் வாங்கிக் கொண்டே இருப்பது போல் ஆகிவிடும்.

முன்பு இரவில் தூக்கம் வராத சமயங்களில் பேஸ்புக் அல்லது ட்விட்டர் பார்ப்பதைவிட ஆன்லைனில் பொருள்கள் பார்ப்பதும், வாங்குவதும் மன அழுத்தத்தை குறைப்பதாக இருந்திருக்கிறது. புத்தகங்கள் மற்றும் சமையலறைக்கு தேவையான பொருள்கள் பார்ப்பதில் விருப்பம். வெவ்வேறு தளங்களில் விலையை ஒப்பிட்டு, ரெவ்யூ படித்து, தேர்வு செய்து கார்ட்டுக்கு #Cart நகர்த்திவிட்டு காலையில் முடிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று தூங்க சென்றுவிடுவேன்.

இரவு ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் ஆப்களில் சுற்றிக் கொண்டிருக்கும்போது, ’அந்தப் பொருள்கள் இல்லையேல் நாளை விடிந்தவுடன் எந்த காரியமும் நடக்காது’ என்பது போல தோன்றும். ஆனால் பெரும்பாலும் மறுநாள் காலையில் இந்த சம்பவமே மறந்து போயிருக்கும். அப்படியும் நினைவிருந்தால் அந்த பொருள்கள் இப்போதைக்கு தேவைப்படாது என்று தோன்றும். இவற்றையும் மீறி சில ஆர்டர் செய்தவைகள் புத்தகங்களாக இருக்கும். பிறகு மற்றவர்களிடம் இதுபற்றி பேசும்போதுதான் இந்த பழக்கம் பலருக்கும் இருக்கிறது என்று தெரியவந்தது.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்
pixabay

பேஸ்புக் மற்றும் கூகுள் நம்முடைய உரையாடல்களை எப்போதும் ஒட்டு கேட்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. முதலில் நாம் இணையத்தில் தேடும் பொருள்கள் அல்லது வார்த்தைகளை வைத்து நமக்கு பேஸ்புக் மற்றும் கூகுள் விளம்பரங்கள் வரும். ஆனால் இப்போதெல்லாம் அருகில் இருப்பவர்களிடம் பேசும்போது போனை கையில் வைத்திருந்தால் போதும், பேஸ்புக் இந்த உரையாடல்களை ஒட்டுக் கேட்டு அது தொடர்பான விளம்பரங்களை காட்டுகின்றது. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பேசுவதையும் பேஸ்புக் உளவு பார்க்கிறது.

‘தனி ஒருவன்’ திரைப்படத்தில் உடலில் ‘சிப்’ பொருத்தப்பட்ட கதாநாயகன் ஜெயம் ரவி, தான் பேசும் விஷயங்களை வில்லன் அரவிந்த்சாமி ஒட்டுக்கேட்பதால், நயன்தாராவிடம் சொல்ல நினைப்பவற்றை எழுதிக் காட்டுவார். இன்று ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் நம் எல்லோரோரையும் ஒட்டுக்கேட்கும் பிக்பாஸ் வில்லன்களாக கூகுள், சமூக வலைதளங்கள் இருக்கின்றன. யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

நாம் ஆசைப்படும் பொருள்களை விளம்பரத்தில் பார்க்கும்போது மனம் தடுமாறுவது இயல்பு. அதுவும் கண்டதும் வாங்கிவிடும் எண்ணத்தை உறுதியாக்கும் வல்லமை விலை குறைப்பு #Offer வார்த்தைகளுக்கு உண்டு. நாம் ஒன்றை அடைய முழுமனதாக ஆசைப்பட்டால் இந்த உலகமே ஒன்றுசேர்ந்து அதற்கு உறுதுணையாக நிற்கும் என்று அல்கெமிஸ்ட் புத்தகத்தில் பாவ்லோ கோலோ சொன்னது ஆன்லைன் ஷாப்பிங்குக்கு முற்றிலும் பொருந்தும். ஆஃபர் விளம்பரத்தை 5 விநாடிகள் உற்றுப்பார்த்தால் உடனடியாக கிரெடிட் கார்ட் EMI சலுகையை மனம் நினைவூட்டும். தேவை / தேவையில்லாத பொருள்களை வாங்குவது இப்படித்தான்.

Facebook | Google
Facebook | Google

ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதை நம்மால் முற்றிலும் நிறுத்த முடியாது. ஆனால் ஓரளவு சுயத்தணிக்கை செய்யலாம். பொருள்களைத் தேர்வு செய்து கார்ட்டுக்கு நகர்த்திய பிறகு இரண்டு அல்லது மூன்றாக அவற்றை பிரித்து உடனடியாக தேவை இருப்பவற்றை மட்டும் ஆர்டர் செய்துவிட்டு மீதம் இருப்பவற்றை save for later அல்லது wishlist-ல் சேமித்துக் கொள்ளலாம். இப்படி சேமிக்கப்படும் 90% பொருள்களை வாங்கியதே இல்லை என்பது தனிப்பட்ட அனுபவம்.

இவையெல்லாம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் புலம்பல். இன்னொருபுறம் ’இந்த வாழ்க்கை மிகச்சறியது, ஒவ்வொரு நாளும் ஒரு வரம், இதில் நமது தேவைகளை சுருக்கிக்கொண்டு எதையும் அனுபவிக்காமல் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. அந்தந்த வேலைக்கு ஏற்ற சரியான பொருள்களை வாங்கி பயன்படுத்தும் வசதி இருக்கும்போது அதை செய்வதே புத்திசாலித்தனம். மிச்சப்படுத்தும் நேரத்தை பிடித்ததற்கு செலவழிக்கலாம், போன தலைமுறையை போல கஷ்டப்பட்டு மிச்சம் பிடித்து பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கத் தேவையில்லை’ என்பது இன்றைய இளம் தலைமுறையினரின் வாதம்.

அத்தியாவசியம், அவசியம் இல்லை என்பது அவரவர் வாழும் சூழலையும், தேவையையும் பொருத்து மாறுபடும். நமக்கு ஆடம்பரமாக தெரிகிற பொருள் மற்றவருக்கு அத்தியாவசியமாக இருக்கலாம். எதுவானாலும் சிந்தித்து முடிவு எடுத்தல் மனதுக்கும், பேங்க் பேலன்ஸுக்கும் நல்லது.