சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

நிலாக்கல் வேட்டை!

நீல் ஆம்ஸ்ட்ராங்
பிரீமியம் ஸ்டோரி
News
நீல் ஆம்ஸ்ட்ராங்

அறிவியல்

`சந்திரயான்-2’ விண்கலம் விண்ணில் பறந்த அதே நேரத்தில், தங்கத்தின் விலையும் விண்ணை முட்டியது. எல்லாவற்றையும் கிண்டல்செய்யும் இணைய தலைமுறை, இதைப் பற்றியும் சமூக வலைதளங்களில் எள்ளி நகையாடியது. ‘பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான தங்கத்தை சந்திரயானில்வைத்து நிலாவுக்கு அனுப்பிவிட்டார். அதனால்தான் தங்கம் விலை உயர்கிறது. இதன் விளைவாக உலகமே அதிரப்போகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வந்து மோடியிடம் மண்டியிடும் நிலை வரும். அதன்பின் அந்தத் தங்கம் பூமிக்குத் திரும்பும்’ என்று ஒருவர் கிளப்பிவிட்டார்.

நிலாக்கல் வேட்டை!

சந்திரயான் ஒன்றும் தங்கத்தை எடுத்துப் போக வேண்டியதில்லை. ஒருவேளை நிலவிலிருந்து ஏதாவது கற்களை அதன் லேண்டர் எடுத்து வந்திருந்தால், அது மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருந்திருக்கும். ஆம், தங்கத்தைவிட, வைரத்தைவிட இந்த உலகில் மிகவும் விலை மதிப்புமிக்க பொருளாக இருக்கிறது நிலாக்கல். நிலாவின் தரைப்பரப்பிலிருந்து எடுத்து வரப்பட்ட குட்டிக் கற்கள்கூடப் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. ஒரு கிராமில் ஐந்தில் ஒரு பங்கு எடைகொண்ட, கடுகைவிடச் சற்றே பெரிதாக உள்ள மூன்று கற்கள், கடந்த ஆண்டு ஆறு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. அப்படியானால் ஒரு கிராம் என்ன விலை, ஒரு கிலோ என்ன விலை என கால்குலேட்டரைத் தட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏன் இந்த விலை? காரணம் சிம்பிளானது. `ஒரு பொருள் எவ்வளவு குறைவாகக் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் விலை அதிகமாக இருக்கும்’ என்ற நியதிதான். நிலாவுக்கு இதுவரை மனிதர்கள் அனுப்பிய விண்கலங்களில் ஒன்பது மட்டுமே பத்திரமாகத் திரும்பி வந்தன. இவற்றில் அமெரிக்கா அனுப்பிய அப்போலோ விண்கலங்கள் ஆறு. இந்த விண்கலங்களில் மனிதர்கள் போனதால், அங்கு பாறைகளைக் குடைந்து நிறைய கற்களை எடுத்துக்கொண்டு திரும்பினர். 1969 முதல் 1972 வரை இப்படி எடுத்து வரப்பட்ட நிலாக்கல் மொத்தம் 382 கிலோ. எடுத்துவந்த கற்களின் எண்ணிக்கை 2,200. இதில் `பிக் பெர்தா’ என்ற கல்லே மிகப் பெரியது. 9 கிலோ எடைகொண்டது. மற்றவை மிகச் சிறியவை.

`லூனா’ என்ற பெயரில் 1970-ம் ஆண்டு சோவியத் யூனியன் மூன்று விண்கலங்களை அனுப்பியது. இவற்றில் போன இயந்திர மனிதர்கள் எடுத்துவந்த நிலாக்கல், வெறும் 301 கிராம் மட்டுமே. இந்த பூமியிலிருக்கும் மொத்த நிலாக்கல் இவ்வளவுதான். இவற்றில் பெரும்பாலானவை நிலா பற்றிய ஆராய்ச்சிக்குப் பயன்படுவதால், அரசாங்கத்தின் சொத்தாகவே இருக்கின்றன. இதுவரை சட்டபூர்வமாக விற்பனைக்கு வந்தவை சோவியத் யூனியன் எடுத்துவந்த மூன்று கற்கள் மட்டுமே!

சோவியத் யூனியனின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கு விதை போட்டவர் செர்ஜி கொரலேவ். அமெரிக்காவை முந்திக்கொண்டு முதலில் விண்வெளிக்குச் சென்ற சோவியத் விண்கலங்கள் உருவாக்கத்தில் மகத்தான பங்களித்தவர் அவர். ஆனால், நிலாவில் வெற்றிகரமாக சோவியத் விண்கலங்கள் தரையிறங்கிக் கற்களை எடுத்து வருவதைப் பார்க்க அவர் உயிருடன் இல்லை. அவரை கௌரவிக்கும் விதமாக, அவரின் மனைவி நினா இவானோவ்னா வசம் மூன்று சிறிய கற்களை சோவியத் அரசு அளித்தது. பணக் கஷ்டத்தில் இருந்த இவர், அந்தக் கற்களை விற்க முடிவெடுத்தார். கடந்த ஆண்டு நவம்பரில் இவை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டன. ஒரு கிராமில் ஐந்தில் ஒரு பங்கு எடை கொண்ட இவை, அதாவது வெறும் 200 மில்லிகிராம் எடை கொண்ட கற்கள் ஆறு கோடி ரூபாய்க்கு விற்றன.

நீல் ஆம்ஸ்ட்ராங்
நீல் ஆம்ஸ்ட்ராங்

ஆனால், கள்ள மார்க்கெட்டில் இதைவிட அதிகமான விலைக்கு நிலாக்கற்கள் விற்கின்றன. மிகவும் மதிப்புமிக்க நிலாக்கற்கள் எப்படிக் கள்ள மார்க்கெட்டுக்குப் போயின? அது ஒரு சுவாரஸ்யமான கதை.

முதன்முதலில் நிலவில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று படித்திருக்கிறோம். நிலாவிலிருந்து முதலில் கல் எடுத்து வந்தவரும் அவர்தான். ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் நிலாவில் இறங்கும்போது, கையில் ஒரு பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டு போனார்கள். மண்வெட்டியை மடித்தது போன்ற ஒரு கருவியால், நிலாவின் தரைப் பரப்பிலிருந்து சிறியதும் பெரியதுமாகச் சில கற்களை அள்ளி அந்தப் பெட்டியில் போட்டார் ஆம்ஸ்ட்ராங். கற்களை எடுத்து வருமாறு அவருக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது.

பெட்டி நிறைய கற்களை அள்ளிப் போட்டுவிட்டு அதை மூடப் போனவருக்கு திடீர் யோசனை. பெட்டியில் கற்களுக்கு இடையே ஆங்காங்கே நிறைய இடைவெளி இருந்தது. ‘இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்துவிட்டால் என்ன செய்வது’ என யோசித்தவர், நிலாவின் தரையிலிருந்து ஒன்பது முறை மண்ணை அள்ளி அந்தப் பெட்டியில் போட்டார். பெட்டி நிரம்பியது. அவர்கள் சுமந்து வந்தது 21.5 கிலோ எடையுள்ள கற்களும் மண்ணும்!

அப்போலோ 11 விண்கலத்தில் அவர்கள் திரும்பி வந்தபோது உலகமே உற்சாக வரவேற்பு கொடுத்தது. ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு உள்ளூர நடுக்கம் இருந்தது. ‘நிலாவிலிருந்து எடுத்துவந்த கற்களிலும் மண்ணிலும் ஏதாவது ஆபத்தான உயிர்க்கொல்லி இருந்து, அது பூமியில் பேரழிவை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது’ என பயந்தார்கள். ‘நிலாவில் உயிர்கள் வாழ்கின்றனவா’ என ஆராய்ச்சி செய்ய முயன்ற இன்னொரு குழுவோ, ‘பூமியில் வாழும் நுண்ணுயிரிகள் இந்தக் கற்களிலும் மண்ணிலும் கலந்துவிட்டால் என்ன ஆவது’ எனக் கவலை கொண்டார்கள். எனவே நிலாவிலிருந்து திரும்பியவர்கள், அவர்கள் கொண்டுவந்த பொருள்களுடன் ஒரு தனிமைப் பிரதேசத்தில் பல வாரங்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அந்தக் கற்களிலும் மண்ணிலும் ஒரு பகுதியை எடுத்து, பாதுகாப்பான அறை ஒன்றில் கொட்டினர். எலிகள், பறவைகள், கரப்பான் பூச்சிகள், ஈக்கள், புழுக்கள், மீன்கள் என உயிரினங்களை அங்கு வாழவைத்தனர். சில தாவரங்களையும் வளர விட்டனர். நிலாக்கற்களிலிருந்து ஏதேனும் கதிர்வீச்சு தாக்கி, அவற்றுக்கு ஆபத்து ஏற்படுத்துகிறதா என ஆராய்ச்சி செய்தனர். இன்னொரு பக்கம் நிலா மண்ணில் தண்ணீர் ஊற்றி, ஏதேனும் தாவரங்கள் முளைக்கிறதா, நுண்ணுயிரிகள் வளர்கிறதா என்றும் சோதனை செய்தார்கள். எதுவும் அச்சமில்லை என உறுதி செய்த பிறகே, விண்வெளி வீரர்கள் வெளியில் வந்தனர். நிலாக்கற்களும் மண்ணும் சோதனைக்கூடங்களுக்குப் போயின.

நிலாக்கல், ரஷ்யா விற்ற நிலாக்கல், நிலவில் மண்ணை அள்ளியபோது...
நிலாக்கல், ரஷ்யா விற்ற நிலாக்கல், நிலவில் மண்ணை அள்ளியபோது...

நிலவில் கல் எடுத்த முதல் விண்கலம், `அப்போலோ 11.’ கடைசி விண்கலம், `அப்போலோ 17.’ இந்தப் பயணம் முடிந்ததும், அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்ஸன் ஒரு முடிவெடுத்தார். ‘நிலவை வசப்படுத்தியது மனிதகுலத்தின் மகத்தான சாதனை. இந்தப் பெருமையில் எல்லா நாடுகளும் பங்கெடுக்க வேண்டும்’ என விரும்பினார். எனவே, `அப்போலோ 11’ எடுத்து வந்த கற்களில் சிலவற்றையும், `அப்போலோ 17’ எடுத்துவந்த கற்களில் சிலவற்றையும் உலக நாடுகளுக்குப் பரிசாகத் தந்தார். அமெரிக்கக் கொடி, பரிசு பெறும் நாட்டின் கொடி, இரண்டுக்கும் இடையில் பத்திரமாக நிலாக்கல்லைப் பதித்து நினைவுப் பரிசுகள் தயாரிக்கப்பட்டன. சிறிய நாடு என்றால் சிறிய கல், பெரிய நாடு என்றால் பெரிய கல் அல்லது இரண்டு மூன்று கல் என வைத்தார்கள். இப்படி 135 நாடுகளுக்கு மொத்தம் 270 நிலாக்கல் பரிசுகள் தரப்பட்டன. இவைதவிர அமெரிக்காவின் 50 மாகாணங்களுக்கும் இதேபோல நிலாக்கற்கள் தரப்பட்டன. அதோடு, 15 நாடுகளிலிருக்கும் ஆய்வுக்கூடங்களுக்கு சுமார் ஏழு கிலோ அளவுள்ள கற்கள் தரப்பட்டன.

இப்படிப் பல நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் தரப்பட்ட நிலாக்கற்களில் பெரும்பாலானவை, நல்லெண்ணம் இல்லாத ஆசாமிகள் கைகளுக்குப் போய்விட்டன. சுமார் 180 நிலாக்கல் நினைவுப்பரிசுகள் என்ன ஆகின என்றே தெரியவில்லை.

நினைவுப் பரிசு-நிலாக்கல், ஜோசப் குதெய்ன்ஸ், கரும்புள்ளிகள்தான் நிலாக்கற்கள்...
நினைவுப் பரிசு-நிலாக்கல், ஜோசப் குதெய்ன்ஸ், கரும்புள்ளிகள்தான் நிலாக்கற்கள்...

நம் ஊரில் மண்ணுளிப் பாம்பு, இரிடியம் மோசடி நடப்பதுபோல, அமெரிக்காவில் நிலாக்கல் மோசடி சர்வ சாதாரணம். ஏதாவது ஒரு கல்லை ‘நிலாக்கல்’ எனக் கொடுத்து ஏமாற்றி, ஆர்வக்கோளாறு பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பிடுங்கிவிடுவார்கள். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவில் சிறப்பு அதிகாரியாகப் பணிபுரிந்த ஜோசப் குதெய்ன்ஸ், இப்படிப்பட்ட மோசடி கும்பலைப் பொறிவைத்துப் பிடிக்கத் தீர்மானித்தார். 1998-ம் ஆண்டு ‘நிலாக்கல் தேவை’ என ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார். அநாமதேய ஆசாமி ஒருவன் அவரைத் தொடர்புகொண்டு, ‘என்னிடம் நிலாக்கல் இருக்கிறது. விலை 20 கோடி ரூபாய்’ என்றான். அந்தக் கல்லைப் பார்த்த குதெய்ன்ஸ் ஆடிப் போய்விட்டார். அவர் நினைத்ததுபோல அது போலி அல்ல! நிஜ நிலாக்கல். ஹோண்டுராஸ் என்ற குட்டி நாட்டுக்கு அமெரிக்கா பரிசாகக் கொடுத்தது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடந்து, அந்தக் கற்கள் மறுபடியும் ஹோண்டுராஸ் நாட்டுக்குப் போயின.

இப்படி ஒரு நிழல் வியாபாரம் நடக்கிறது என்பது அப்போதுதான் வெளியில் தெரிந்தது. அதன்பின் பல நாடுகளுக்கும் அமெரிக்க மாகாணங்களுக்கும் கொடுக்கப்பட்ட நிலாக்கல் பரிசுகளைத் தேடுவதாகவே குதெய்ன்ஸின் வாழ்க்கை மாறியது. பல நாடுகளில் இவற்றை முறையாகப் பதிவுசெய்து எங்கும் காட்சிக்கு வைக்கவே இல்லை. இன்னும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் அப்போது தெரியவந்தன.

  •  அயர்லாந்து நாட்டில் ஒரு தொலைநோக்கி மையத்தில் இந்தக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு தீப்பிடித்தபோது பல பொருள்களை மொத்தமாக அள்ளிக் குப்பையில் கொட்டினார்கள். அந்தக் குப்பையோடு நிலாக்கற்களும் போய்விட்டன. இன்னமும் அந்தக் குப்பையில் கற்களைத் தேடுகிறார்கள்.

  •  சைப்ரஸ் நாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட கற்களை, அந்த நாட்டில் அப்போது இருந்த அமெரிக்கத் தூதர் ஒப்படைக்கவே இல்லை. தூதரின் மகன் அவற்றைத் தனது பொக்கிஷமாக வைத்துக்கொண்டார். குதெய்ன்ஸ் இதைக் கண்டுபிடித்து, பேச்சுவார்த்தை நடத்தி சைப்ரஸ் அரசுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுத்தார்.

  •  `மால்டா’ என்ற குட்டி நாட்டில் மியூசியத்தில் இருந்த கற்களை யாரோ திருடிவிட்டனர். நினைவுச் சின்னத்திலிருந்த கொடிகளை விட்டுவிட்டு, வெறும் கல்லை மட்டும் திருடிப் போயிருக்கிறார்கள். ‘தனியாக அதை விற்றால் யாரும் வாங்க மாட்டார்கள். திரும்பக் கொடுத்துவிடுங்கள்’ என அறிவிப்பு செய்தும், இன்னமும் அது திரும்ப வரவில்லை.

  •  ருமேனியா நாட்டை ஆண்ட சர்வாதிகாரியான நிகோல் சீயசஸ்கு என்பவரின் குடும்பம், மதிப்புமிக்கப் பல பொருள்களை விற்றுப் பணமாக்கியது. அப்படி இதுவும் கள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்டுவிட்டது.

சரி, இந்தியாவில் நிலைமை என்ன? இந்தியாவுக்குப் பரிசாகத் தரப்பட்ட, `அப்போலோ 17’ நிலாக்கல் நினைவுப் பரிசு, பத்திரமாக டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மியூசியத்தில் இருக்கிறது. 1973-ம் ஆண்டு, அப்போதைய மக்களவை சபாநாயகர் ஜி.எஸ்.தில்லானிடம் இது பரிசாகத் தரப்பட்டதால் அங்கு இருக்கிறது. ஆனால், `அப்போலோ 11’ நிலாக்கல் நினைவுப்பரிசு எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆராய்ச்சிக்காக என அமெரிக்காவும் ரஷ்யாவும் கொடுத்த சில கற்கள், இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ வசம் பாதுகாப்பாக உள்ளன. அகமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் இன்னமும்கூட இவற்றின்மீது ஆய்வுகள் நடக்கின்றன.

பல நாடுகளில் தனியார் நிறுவனங்கள் பலவும் நிலவுக்குச் செல்வதற்கு விண்கலம் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் நிலாக்கல் சட்டபூர்வமாகவே விற்பனைக்கு வரக்கூடும். நகாசு வேலைப்பாடு கொண்ட நிலாக்கல் நெக்லஸ், பெண்களின் விருப்ப அணிகலனாக அப்போது மாறலாம். தி.நகரில் இதற்கெனவே பிரத்யேக ஷோரூம்கள் உருவாகலாம். நிலாக்கல் நகைகளின் செய்கூலி, சேதாரம் பற்றி பிரபல நடிகர்களும் நகைக்கடை அதிபர்களும் டி.வி விளம்பரங்களில் வகுப்பெடுக்கலாம்.

நிலாக்கல் போன்ற பொக்கிஷங்களே, விண்வெளியை வசப்படுத்தும் கனவைக் குழந்தைகள் மனதில் விதைப்பவை. அவை பாதுகாக்கப்பட வேண்டும்.