Published:Updated:

லேண்ட்ரோவரின் ப்ளாட்ஃபார்மில் டாடாவின் எலக்ட்ரிக் கார் இ- விஷன்! #Evision

லேண்ட்ரோவரின்  ப்ளாட்ஃபார்மில் டாடாவின் எலக்ட்ரிக் கார் இ- விஷன்! #Evision
லேண்ட்ரோவரின் ப்ளாட்ஃபார்மில் டாடாவின் எலக்ட்ரிக் கார் இ- விஷன்! #Evision

ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போக்களில் தனது இருப்பு மற்றும் வளர்ச்சியை எப்படி காட்ட வேண்டும் என்பதை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆம், கடந்த காலத்தில் நடைபெற்ற 1998 ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாகக் கலந்துகொண்ட டாடா, அங்கேதான் இண்டிகா காரைக் காட்சிப்படுத்தியது. தற்போது நடைபெற்ற 2018 ஜெனிவா மோட்டார் ஷோவில் 20-வது முறையாகப் பங்கேற்ற டாடா, EVision என்னும் செடான் கான்செப்ட் காரை அதிரடியாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

Omega எனும் புதிய பிளாட்பாரத்தில் இந்த கார் கட்டமைக்கப்பட இருக்கிறது. இது லேண்ட்ரோவரின் பிளாட்பாரம் என்பது கூடுதல் ஸ்பெஷல். முதற்கட்டமாக டிசைன் படிப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட், Omega பிளாட்பாரத்தை எலெக்ட்ரிக் கார்களுக்கு ஏற்ப மாற்றியமைத்த பிறகு உற்பத்திப் பணிகள் தொடங்கும் என நம்பலாம்.

ஐரோப்பிய டிசைன்

2018-ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட H5X மற்றும் 45X கார்களைத் தொடர்ந்து, Impact 2.0 டிசைன் பாணியைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது கார்தான் EVision செடான் கான்செப்ட். இதில் 45X ஹேட்ச்பேக், டாடாவின் AMP அல்லது Alfa பிளாட்பாரத்தில் தயாரிக்கப்படும் என்பது கொசுறு செய்தி. எனவே, முன்பு சொன்ன கார்களைப்போலவே, தற்போது விற்பனையில் இருக்கும் எந்த டாடா கார்களிலும் காணாத வடிவமைப்பு முறை இங்கே இருக்கிறது.

பெரிய கிரில்லின் இருபுறங்களிலும் இருக்கும் மெல்லிதான LED ஹெட்லைட்ஸ், அசப்பில் 45X ஹேட்ச்பேக்கை நினைவுபடுத்துகின்றன. கிரில் மற்றும் ஹெட்லைட் இரண்டையும் இணைக்கும் அலுமினியப் பட்டையை, `Humanity Line’ என அழைக்கிறது டாடா. சுருங்கச் சொல்வதென்றால், 45X ஹேட்ச்பேக்கின் செடான் வெர்ஷன்போல செம மாடர்னாக ஈர்க்கிறது EVision செடான் கான்செப்ட். L வடிவ முன்பக்க பம்பர், அலுமினிய வேலைப்பாடுகள் ஆகியவை இதற்கான சிறந்த உதாரணங்கள்.

இது ஒரு `3-பாக்ஸ்' கார் (இன்ஜின் - கேபின் - டிக்கி) என்றாலும், ஸ்டைலான Fastback போன்ற தோற்றத்தைக்கொண்டிருப்பது பெரிய ப்ளஸ். இதில் ஒரு துளிதான், நாம் டிகோர் காரின் பூட் வடிவமைப்பில் பார்த்தது. பெரிய 21 இன்ச் வீல்கள், அகலமான சி-பில்லர், தடிமனான பாடிலைன் என இந்த கான்செப்ட்டில் பல அம்சங்கள் அசத்தலாக இருக்கின்றன. அதுவும் ரூஃப் பகுதி, காரின் பின்பகுதியுடன் இணையும்விதம் வெகு அழகு. கதவைத் திறக்கும் கைப்பிடி மற்றும் பக்கவாட்டு மிரர்கள் செம.

மேலும் கிரில்லைத் தொடர்ந்து கதவின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதி, பின்பக்க பம்பரின் அடிப்பகுதியிலும் அலுமினியம் இடம்பெற்றுள்ளது. டெயில் லைட் சற்றே உயரத்தில் இருந்தாலும், அது பார்வைக்குக் கவர்ச்சியாகவே இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஐரோப்பிய கார் ஒன்றுக்கு நிகரான டிசைன் மற்றும் தரத்தைக்கொண்டிருக்கிறது EVision செடான் கான்செப்ட். 

லக்ஸூரி கேபின்

Impact 2.0 டிசைனைக்கொண்டிருக்கும் கார்களின் கேபினும், வேற லெவலில் இருக்கும் என டாடா தெரிவித்திருந்தது. அதற்கேற்ப உயர்தர மர வேலைப்பாடுகள் மற்றும் மெட்டீரியல்களால் இன்டீரியர் நிறைந்திருக்கிறது. பீஜ் நிறத்தில் இருக்கும் டேஷ்போர்டில், சென்டர் கன்சோல் மற்றும் கியர்பாக்ஸ் டனல் கிடையாது. அதற்கு பதிலாக இரண்டு Floating ஸ்க்ரீன்கள் இருக்கின்றன! இதில் ஒன்று டேஷ்போர்டின் இடதுபுறத்திலும், மற்றொன்று டேஷ்போர்ட்டின் நடுப்புறத்திலும் இருக்கின்றன. இவை இரண்டும் தேவைப்படும்போது மட்டுமே மேலெழும்பிவரும்.

இதனால் ஒரே பாடியைக்கொண்டிருந்தாலும், வழக்கமான கார்களிலிருந்து எலெக்ட்ரிக் கார்களை வேறுபடுத்திக் காட்டவும், எலெக்ட்ரிக் கார்களில் பிரச்னையாக இருக்கும் கேபின் இடவசதியை அதிகரிப்பதற்கான தீர்வாகவும் இதைப் பார்க்கிறது டாடா. மேலும், பின்பக்க இருக்கையை முழுவதுமாக அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்பதால், ஹெட்ரூம் மற்றும் லெக்ரூமில் எந்தக் குறையும் இருக்காது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

``லேண்ட்ரோவரின் D8 பிளாட்பாரம்தான், எங்களின் Omega பிளாட்பாரத்துக்கான ஆரம்பப்புள்ளி. சென்டர் கன்சோல் மற்றும் கியர்பாக்ஸ் டனலை நீக்கினால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கான பதில்தான், நீங்கள் இங்கே பார்ப்பது. எனவே, தேவைக்கு ஏற்ப முன்பக்கத்தில் இரண்டு தனித்தனி இருக்கை அல்லது ஒரே பெஞ்ச் சீட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Omega பிளாட்பாரத்தில் பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஒருசேரத் தயாரிக்கும்போது, இரண்டுமே ஒரே பாடியைத்தான்கொண்டிருக்கும். ஆனால், கேபினை முழுவதுமாக மாற்றியமைக்கவேண்டியிருக்கும். இது 45X ஹேட்ச்பேக் தயாரிக்கப்படும் Alfa பிளாட்பாரத்துக்கும் பொருந்தும்'' என்கிறார், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Guenter Butschek. 

எதிர்காலத் தொழில்நுட்பம்

ஆக, Omega பிளாட்பாரம், பலவிதமான கார்களைத் தயாரிக்கும் திறனைக்கொண்டிருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. EVision செடான் கான்செப்ட்டின் பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் நேரம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், 0-100 கி.மீ வேகத்தை, 7 விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டிப்பிடிக்கும் என்றும், அதிகபட்சமாக 200 கி.மீ வேகம் வரை செல்லும் எனவும் கூறியிருக்கிறது டாடா. மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் எனத் தெரிகிறது.

விலை உயர்ந்த கார்களில் காணப்படும் ADAS (Advanced Driver Assist System) - பிரதான பாகங்களின் செயல்பாட்டைக் கண்காணித்து, தேவைபட்டால் சர்வீஸ் செய்யச்சொல்லும் இண்டிகேட்டர் - டிராஃபிக்குக்கு ஏற்ப காரின் ரேஞ்சை அளக்கும் வசதி -  Cloud Computing - Analytics and Geospatial Mapping எனத் தொழில்நுட்பத்திலும் எகிறி அடித்திருக்கிறது டாடா. குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனமாக, EVision செடான் கான்செப்ட்டை, இந்த நிறுவனம் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியம் அதிகம்.