Published:Updated:

பறக்கும்படைத் தீமில் ராயல் என்ஃபீல்டு #Pegasus

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட Pegasus பைக்கைப்போல உருவாகியிருக்கும் கிளாசிக் 500. மொத்தம் 1,000 பைக்குகள் மட்டுமே விற்பனைக்கு.

பறக்கும்படைத் தீமில் ராயல் என்ஃபீல்டு #Pegasus
பறக்கும்படைத் தீமில் ராயல் என்ஃபீல்டு #Pegasus

ராயல் என்ஃபீல்டு தனது Pegasus 500 பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் மொத்தம் 1,000 பைக்குகளை மட்டுமே தயாரிக்கப்போகிறது இந்நிறுவனம். இதில் இந்தியாவுக்கு 250 பைக்குகள்தான் கிடைக்கும். ராயல் என்ஃபீல்டின் ஷோரூம்களில் இந்தப் பைக் கிடைக்காது. ஆன்லைனில் மட்டுமே பதிவுசெய்து வாங்க முடியும். இதன் ஆன்ரோடு (மும்பை) விலை ரூ.2.49 லட்சம்.  

நவீன தொழில்நுட்பம், நேர்த்தியான டிசைனும் இல்லையென்றாலும் ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனையாவதற்கு அதன் வரலாறுதான் காரணம். Pegasus 500 பைக்குக்கு பின்னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது பாராட்ரூப் என்று ஒரு குரூப் பாராஷூட்டில் நேராக எதிரிகளின் ஏரியாவுக்குள் குதிப்பார்களாம். இவர்கள் வேகமாக முன்னேறுவதற்காக முதுகில் ராணுவ பொருள்களுடன் சைக்கிளையும் மாட்டிக்கொண்டு குதிப்பார்களாம். இப்போது இருப்பதைப் போன்று ஷாக் அப்சார்பர், பெரிய டையர் கொண்ட சைக்கிள் எல்லாம் அப்போது இல்லை. சைக்கிளில் மேடு பள்ளங்களை ஏறிப் போவதற்கு நேரமாகிறது என்று பேரீச்சம்பழக் கடைக்கு சைக்கிளைப் போட்டுவிட்டு நடந்தே சென்றுவிடுவார்களாம் ராணுவ வீரர்கள். பொருள் செலவும் நேரமும் விரயமாவதைத் தடுக்க அப்போது பைக் தயாரித்துக்கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு ஒரு வழியைக் கண்டுபிடித்தது அதுதான் pegasus.

அப்போது இருந்த RE/WD 125 பைக் வெறும் 59 கிலோதான் என்பதால், எல்லைக்குப் பறக்கும் வீரர்கள் பைக்கோடு பாராஷூட்டிலிருந்து குதிப்பார்கள். நடுவில் எல்லைகள் வந்தால் வேலிகளைத் தாண்டி பைக்கைத் தூக்கிப்போட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்று எடுத்துக் கொள்வார்களாம். இந்தப் பைக்கில் இருந்த 125cc இன்ஜின் எந்த எரிபொருள் ஊற்றினாலும் போகும் என்பது கூடுதல் சிறப்பு. இது 70 கி.மீ வேகம் வரை செல்லும் என்பதால் போரில் துப்பாக்கிகளுக்கு இறையாகாமல் எஸ்கேப் ஆக வசதியாக இருந்துள்ளது. எடை குறைவு, எல்லா இடங்களிலுமே செல்லலாம் என்பதால் போர் முடிந்த பிறகு, பைக்கை வாங்கப் பலபேர் காத்திருந்தனர். போரில் மிச்சமாக இருந்த சில பைக்குகளுக்கு பெயின்ட்டை மாற்றி 1940 வரை விற்பனை செய்துவந்தார்கள்.

இப்போது Flying Flea படையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராயல் என்பீல்டூ கிளாசிக் 500 பைக்கில் pegasus எடிஷனை கொண்டுவந்துள்ளது. Olive Drab Green மற்றும் Service Brown என்று இரண்டு நிறங்களில் வரும் இந்தப் பைக்கின் டேங்கில் வழக்கமாக டிசைன் இல்லாமல் pegasus லோகோ வருகிறது. பக்கவாட்டில் இரண்டு பைகள், கிக் ஸ்டார்டருக்கு அருகே லெதர் ஸ்டிராப், பிரவுன் ஹேண்டல்பார் கிரிப்புகள் மற்றும் Flying flea பைக்கில் இருப்பது போலவே டேங்கில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜும் வருகிறது. இதுமட்டுமல்ல ஒவ்வொரு பைக்குக்கும் டேங்கின்மீது ஒரு யுனிக் நம்பர் அச்சடிக்கப்படுகிறது. தயாராகும் முதல் 250 பைக்குகள் இந்தியாவுக்கு வருவதால், C50001 முதல்  C50250 வரை உள்ள நம்பர்கள் அச்சடிக்கப்படும். பைக்குக்கு கொஞ்சம் மாடர்ன் டச் கொடுக்க ஹேண்டல்பார், எக்ஸாஸ்ட், இன்ஜின், வீல் ரிம், ஹெட்லைட் போன்ற இடங்களுக்குக் கறுப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.

மெக்கானிக்கலாக பைக்கில் எந்த மாற்றமும் இல்லை. கிளாசிக் 500 பைக்கில் இருக்கும் அதே 499 cc இன்ஜின்தான். 27.6 bhp பவரும், 41.3 Nm டார்க்கும் தரக்கூடியது. எடையும் அதே 194 கிலோதான். இந்தியாவில் பச்சை நிறம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டது என்பதால், பிரவுன் நிற பைக் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு மேட்சிங்காக ஹெல்மெட், ஜக்கெட், பூட்ஸ் எனப் பல ஆக்சஸரிகளும் வந்துள்ளன. ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்குடன் வாழ வேண்டும் என்றால் அதன்மீது கொஞ்சமாவது காதல் வேண்டும். சாதாரண கிளாசிக் 500 பைக்கை விட 30,000 கூடுதல் விலைகொண்ட pegasus பைக்கை வாங்க வேண்டும் என்றால் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மீது வெறித்தனமாகக் காதல் வேண்டும். இதன் ஆன்ரோடு (மும்பை) விலை ரூ.2.49 லட்சம்.