Published:Updated:

சூப்பர் கார் டிசைன் செய்பவர்கள் லாரியை டிசைன் செய்தால் எப்படி இருக்கும்?! #Furio

சூப்பர் கார் டிசைன் செய்பவர்கள் லாரியை டிசைன் செய்தால் எப்படி இருக்கும்?! #Furio
சூப்பர் கார் டிசைன் செய்பவர்கள் லாரியை டிசைன் செய்தால் எப்படி இருக்கும்?! #Furio

காய்கறி, பண்ணைப் பொருள்கள், பார்சல் சர்வீஸ், பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் போன்ற சிறிய பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 6.5 டன் முதல் 16 டன் லாரிகளை, `இன்டர்மீடியேட் கமர்ஷியல் வெஹிக்கிள்' என்பார்கள். கமர்ஷியல் வாகனச் சந்தையில் மஹிந்திராவிடம் மூன்று சக்கர ஆல்ஃபா ஆட்டோ முதல் 49 டன் பிளாஸோ டிரக் வரை லாரிகள் இருந்தாலும், இடையில் இந்த இன்டர்மீடியேட் மட்டும் மிஸ்ஸிங். வெகுகாலமாக இருக்கும் இந்த இடைவெளியைப் பூர்த்திசெய்ய, தற்போது `ஃப்யூரியோ எனும் புதிய ரக லாரிகளைக் கொண்டுவந்துள்ளது மஹிந்திரா. செக்மென்டில் கடைசியாக வந்தாலும், ஃப்யூரியோ ஒரு மாஸ் என்ட்ரி எனலாம். காரணம், இந்த லாரி இத்தாலியில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஃப்யூரியோ லாரிகளைப் பொறுத்தவரை புது சேஸி, புது இன்ஜின், புது கேபின் என எல்லாமே புதுசு. எல்லா விதமான சைஸ் லாரிகளுக்கும் பொருந்தும் மாடுலார் சேஸியை, ஃப்யூரியோ டிரக் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். 4 டீசல் இன்ஜின் மற்றும் 1 சிஎன்ஜி இன்ஜினை புதிதாக அறிமுகப்படுத்துகிறார்கள். 80bhp பவர் மற்றும் 200Nm டார்க் தரும் இன்ஜின் முதல் 180bhp-850Nm இன்ஜின் வரை ஃப்யூரியோ குடும்பத்து லாரியில் வரப்போகிறது. மொத்தம் 21 லாரிகள் அறிமுகமாக உள்ளன. அதில், 6 முதல் 7.5 டன் LCV, 7.5 முதல் 16 டன் ICV மற்றும் 16.2 டன் MCV வாகனங்களை விற்பனைக்குக் கொண்டுவர உள்ளார்கள்.  

ஃப்யூரியோ வரிசையில், முதல் நான்கு லாரிகளை சக்கனில் உள்ள மஹிந்திரா தொழிற்சாலையில் முதல் முறை காட்சிப்படுத்தினார்கள். தற்போது இந்த செக்மென்டில் இருக்கும் டாடா, ஈச்சர், அசோக் லேலண்ட் டிரக்குகளை ஒப்பிடும்போது மஹிந்திரா ஃப்யூரியோ டிரக்குகளின் டிசைன் மட்டுமல்ல, கேபின் தரமும் சூப்பர். இத்தாலியில் வடிவமைக்கப்பட்டது என்பது, லாரியைப் பார்த்த உடனேயே தெரிந்தது. அவ்வளவு அழகு! பழைய லாரிகளைப்போல ஷார்ப் டிசைன் இல்லாமல் கார் போன்ற கொழுக் மொழுக் டிசைனில் இருந்தது.

 பின்னின்ஃபரினாவின் விண்டு டனலில் டெஸ்ட் செய்து, குறைந்த டிராக் இருக்கும்படி வடிவமைத்திருக்கிறார்களாம். டிராக் குறைவாக இருந்தால், மைலேஜ் அதிகம் கிடைக்கும். வெளியே மட்டுமல்ல உள்ளேயும், கார் கேபின் போல அதிக இடவசதியுடனும், அதிக ஏர் வென்டுகளுடனும் இருந்தது. ஃப்யூரியோவின் கேபினில் மொத்தம் 8 ஏர்வென்டுகள் இருந்தன. அதுமட்டுமல்ல, திரும்பும் கார் கேபின் போலவே கிளோவ் பாக்ஸ், கப் ஹோல்டர், சன் கிளாஸ் ஹோல்டர், டிரைவர் தலைக்குமேல் லாரியின் டாக்குமென்ட் வைக்க இடம் எனப் பல ஸ்டோரேஜ் வசதிகள் இருந்தன. சாதா லாரியைவிட ரோடு வியூ அதிகமாக இருந்தது. முன்பக்கம் ஃபிளாட்டாகவும் இருந்தது. ஏன் இந்த வித்தியாசம் என விசாரித்தோம். ``ஃப்யூரியோவின் rake angle மற்ற லாரிகளை விட குறைவு. அதனால்தான், அதிக ரோடு வியூ இருக்கிறது" என மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் டிவிஷனின் இயக்குநர் வினோத் சாஹே கூறினார்.

 ``குறைவான Rake angle என்றால், ஏரோ டயனமிக் எப்படி? என்ற கேள்விக்கு, ``எங்கள் டிரக்கின் விண்ட் ஹீல்டு முதற்கொண்டு முன்பக்கம் எல்லாமே பக்கவாட்டுப் பகுதியில் வளைந்திருப்பதைப் பார்க்கலாம். லாரியின் முன்பக்கம் ஏர்வென்டும் இருக்கும். இந்த டிசைன், லாரியின் முன்பக்கம் உராயும் காற்றை பக்கவாட்டுப் பகுதிகளுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகத்தான் விண்டு டனல் டெஸ்ட் செய்துள்ளோம்" என்றார்.  

பிளாஸோ போலவே, ஃப்யூரியோ லாரியிலும் மஹிந்திராவின் Fuel Smart தொழில்நுட்பம் வருகிறது. இதில், லோடுக்கு ஏற்றவாறு மூன்று விதமான டார்க் மற்றும் பவர் மோடுகளை செலெக்ட் செய்யலாம். கூடுதலாக ஆன்டிரோல் பார், 10 பார் பிரேக் சிஸ்டம், கார்னரிங் லைட்டுகள் எனப் பல அம்சங்கள் வருகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் ஃப்யூரியோ குடும்பத்திலிருந்து நான்கு லாரிகளையும், டிசம்பர் மாதம் மேலும் இரண்டு லாரிகளையும், அடுத்த ஆண்டு இரண்டு லாரிகளையும் விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளார்கள். மிச்சம் இருக்கும் 13 லாரிகள், பிஎஸ்-6 இன்ஜின் விதிமுறையின் கீழ் வரும் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். விலைகளைப் பொறுத்தவரை, ப்ரீமியம் விலைதான் எனச் சொல்லிவிட்டார்கள். தற்போது சந்தையில் இருக்கும் மற்ற லாரிகளைவிட விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும், டிரைவர்கள் இனி லாரியை அலுப்பில்லாமல் கார் போல சொகுசாக ஓட்டலாம்.