Published:Updated:

பைக் பயணங்களில் ஃபாக் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஐந்து டிப்ஸ்!

பைக் பயணங்களில் ஃபாக் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஐந்து டிப்ஸ்!
பைக் பயணங்களில் ஃபாக் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஐந்து டிப்ஸ்!

பனி படர்ந்த மூணாறு சாலை வழியாக, முழு ரைடிங் சூட்டும், ஹெல்மெட்டும் போட்டுக்கொண்டு பைக்கில் டிராவல் சென்றால் எப்படியிருக்கும்! ஆனால், பனி கொட்டும் இடத்தில் பைக்கை ஓட்டுவது ஒரு பெரிய சவால். ஹெல்மெட்டைத் திறந்தால் பனி காதை அடைக்கும், திறக்கவில்லை என்றால் ஹெல்மெட் கண்ணாடி முழுவதும் ஃபாக் ஏற்பட்டு பார்வையை மறைத்துவிடும். இந்த ஹெல்மெட் ஃபாகில் இருந்து தப்பிக்க சில வழிகள் இருக்கின்றன.

EKSRX via Wikimedia Commons

1. செலவில்லாத வழி
ஒரு பக்கம் பனி நிறைந்த காற்று, இன்னொரு பக்கம் சூடான மூச்சுக் காற்று, இடையில் ஹெல்மெட் வைசர். உள்பக்கம் படும் சூடான மூச்சுக்காற்றால் ஹெல்மெட் வைசரில் ஃபாக் ஏற்படும். இந்த ஃபாக் ஏற்படாமல் தடுக்கச் செலவில்லாத சிறந்த வழி வென்டிலேஷன். ஹெல்மெட்டில் எங்கெங்கு வென்டிலேஷன் இருக்கிறதோ எல்லா இடங்களையும் திறந்துவிடவேண்டும். அப்போதும் ஃபாக் உருவாவது தடுக்கமுடியவில்லை என்றால் வைசரை லேசாகத் திறந்து குளிர்ந்த காற்றை ஹெல்மெட்டுக்குள் விடுங்கள். ஃபாக் ஏற்படாது.

2. பின்லாக் லென்ஸ்
வைசரை திறந்து பைக் ஓட்டினால் வீட்டுக்கு வரும் முன் பைக்கை மருத்துவமனைக்குக் கொண்டுபோக வேண்டியதுதான். ஃபாக் ஏற்படாமல் தடுக்க வென்டிலேஷனை விடச்  சிறந்த வழி பின்லாக் வைசர் லென்ஸ். ஹெல்மெட் கடைகளிலேயே இந்த பின்லாக் லென்ஸ் கிடைக்கும். ஹெல்மெட் வைசரில் சிறிய ஓட்டை போன்ற பில்லர் இரண்டு பக்கமும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள், அதுதான் உங்கள் ஹெல்மெட்டில் பின்லாக் வைசர்கள் பொருத்தமுடியும் என்பதற்கு அத்தாட்சி. இந்த பின்லாக் லென்ஸ் ஃபாக் ஏற்படாமல் தடுக்க இரண்டு வேலைகளைச் செய்கிறது. லென்ஸில் இருக்கும் சிலிகான் கேஸ்கெட் பின்லாக் லென்ஸ்க்கும், வைசருக்கும் இடையில் ஒரு சிறிய காற்று லேயரை உருவாக்குகிறது. இந்த லேயர் வைஸருக்குச் சூடான காற்று போகாமல் தடுக்கிறது. இதனால் ஃபாக் ஏற்படுவதில்லை. பருத்தியில் காணப்படும் ஹைட்ரோஃபைல் கோட்டிங் இதில் இருப்பதால், இது ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு பனி உருவாகாமல் பார்த்துக்கொள்கிறது. இந்த லென்ஸ் மழை, புயல், பனி என எல்லாப்  பருவநிலைக்கும் ஏற்றது. நாம் பயன்படுத்தும் ஹெல்மெட்டைப் பொறுத்து இதன் விலை மாறும். பின்லாக் லென்ஸ்கள் 1000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. 

3. வழக்கமான மாஸ்க் போதும்
ஹெல்மெட் போடும் முன்பு ஃபேஸ் மாஸ்க் போடும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கும். ஃபேஸ் மாஸ்க் போடுவதால் வைசரில் ஃபாக் உருவாவதைத் தடுக்கலாம். ஃபேஸ் மாஸ்க்கில் இருக்கும் Breather நம் மூச்சுக்காற்றைக் கீழ்நோக்கித் தள்ளிவிடும். இதனால், வைசர் கண்ணாடியின் உள்பக்கம் காற்று படாமல் ஃபாக் உருவாவது தடுக்கப்படுகிறது. Breather இருக்கும் எல்லா ஃபேஸ் மாஸ்க்கும் இதைச் செய்வதில்லை. ஃபேஸ் மாஸ்க் வாங்கும்போது அதை அணிந்து ஹெல்மெட்டைப் போட்டு வேகமாக மூச்சு விடுங்கள். வைசர் மீது மொத்தக் காற்றும் படவில்லை என்றால் அது பக்கா பீஸ்! 

4. உள்பக்கம்
மூக்குக் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படும் anti fog க்ளீனரை வைசரின் உள்பக்கம் பயன்படுத்தலாம். இந்த க்ளீனரில் மெழுகு அல்லது சிலிகான் பொருள்கள் இருக்கும். நம் சூடான மூச்சுக்காற்று குளிர்ந்த கண்ணாடியின் மீது படும்போது அந்தக் காற்றில் இருக்கும் ஈரப்பதம் சின்னச் சின்ன நீர் துகள்களாக மாறி கண்ணாடியின் மீது ஒட்டிக்கொள்ளும். அதைத்தான் ஃபாக் என்கிறோம்.  Anti-fog க்ளீனரை வைசரின் உள்பக்கம் பயன்படுத்தும்போது இது தண்ணீரை வைசர் மீது படரவிடாது. இதனால் ஃபாக் உருவாவது  குறையும்.

5. வெளிப்பக்கம்
இதுவரை பார்த்தது ஹெல்மெட்டுக்கு உள்ளே பயன்படுத்தப்படும் பொருள்கள். குளிர் நிறைந்த இடங்களில் இந்தப் பொருள்களைப் பயன்படுத்தலாம். அதுவே மழை நேரம் என்றால் முதலில் வைசர் மீது மழை நீர் நிற்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்குக் கண்ணாடியின் வெளிப்பக்கத்தில் கார் விண்ட்ஷீல்டில் பயன்படுத்தப்படும் Glass repellent, rain repellent போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வைசரை துடைத்தால் போதும். நம் பார்வை கெடாமல் பைக் ஓட்டலாம். அதிக மழை என்றால் பைக் ஓட்டுவதைத் தவிர்க்கலாம்.