Published:Updated:

130bhp பவர், டீசல்-CVT, ஹைப்ரிட் தொழில்நுட்பம்!- வரப்போகுது புது ஹோண்டா சிட்டி

130bhp பவர், டீசல்-CVT, ஹைப்ரிட் தொழில்நுட்பம்!- வரப்போகுது புது ஹோண்டா சிட்டி
130bhp பவர், டீசல்-CVT, ஹைப்ரிட் தொழில்நுட்பம்!- வரப்போகுது புது ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டியின் அடுத்த தலைமுறை இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்த கார் நவம்பர் அல்லது டிசம்பர் 2019-ல் வெளியிடப்பட்டு 2020-ல் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரியவந்துள்ளது. ஹோண்டா என்ற நிறுவனம் இந்தியாவில் வலுவாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த மாடல்தான். தற்போது விற்பனையில் இருக்கும் சிட்டி 2014-ல் வெளியிடப்பட்ட காரின் ஃபேஸ்லிஃப்ட்.

மிட் சைஸ் செடான் செக்மென்டிலேயே தற்போது பெரிய கார் சிட்டிதான். வரப்போகும் 5-ம் தலைமுறை கார் இதைவிடப் பெரிதாக இருக்கும். பின்பக்க லெக்ரூம் சொகுசுக் கார்களுக்கு இணையாக இருக்கப்போகிறது. வெளி மற்றும் உட்புற மாறுதல்களோடு இன்ஜினும் மாறப்போகிறது. தற்போது இருப்பதைவிட அதிக பவர் மற்றும் டார்க் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் வருகிறது. இந்த ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கும் ஹோண்டா ஜாஸ் காரிலும் இந்த 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின்தான் வரப்போகிறது.

ஹோண்டா அக்கார்ட் கார் போல இல்லாமல் சிட்டியில் விலை குறைவான மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்தான் வரப்போகிறது. தற்போது ஹோண்டா சிட்டி 17 கி.மீ மைலேஜ் தருகிறது. ஹைப்ரிட் தொழில்நுட்பம் வரும்போது 25 கி.மீ வரை மைலேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. 

1.5 லிட்டர் BS-VI டீசல் இன்ஜின் மட்டுமில்லாமல், புது சிவிக் காரில் இருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்டும் சிட்டியில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த இன்ஜின் 130bhp பவர் மற்றும் 200Nm டார்க் உருவாக்கக்கூடியது. டீசல் இன்ஜின் உடன் CVT கியர்பாக்ஸ் வேரியன்ட் வரப்போகிறது.