Published:Updated:

கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்!

என்ஜின் இளமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்றால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்

கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாத 5  தவறுகள்!
கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்!

``நண்பனின் அப்பா எப்போதும் இளைமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். காலை எழுந்ததும் வாக்கிங், பிறகு யோகா, தியானம் செய்பவர். மொட்டை மாடியில் பார்பெல் (barbell) கூட வைத்திருப்பார். வீடியோ கேம் கார் ரேஸ் விளையாடுவார். ஒரு நாள் அவருக்கு உடம்பு சரியில்லை என்று அழைப்பு வர ஹார்லிக்ஸ் பாட்டிலுடன் நண்பன் வீட்டுக்குச் சென்றோம். கையை அசைக்கமுடியாமல் மெத்தையில் படுத்திருந்தார்.

``என்னடா ஆச்சு...அங்கிள் ரொம்ப ஹெல்த்தியா இருப்பாரே, யோகா எல்லாம் பண்ணுவாரே எப்படிடா’’ என்றேன்.

``இவரு இத்தனை வருஷமா யோகாவ தப்பா பண்ணிருக்கார்டா... நரம்பு எக்குத்தப்பா முறுக்கிட்டு இருக்குனு ஃபிசியோ தெரபிஸ்ட் திட்டிட்டுப் போறாரு’’ எனக் கடிந்துகொண்டான்.

எதுவும் செய்யாமல் இருந்தால் கூட பிரச்னை இல்லை, செய்யும் விஷயத்தைத் தவறாகச் செய்தால் பிரச்னை எந்த ரூபத்தில் வரும் என்றே சொல்லமுடியாது. அங்கிள் அன்றோடு யோகாவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.

மோசமான டிரைவர்களை பார்த்தால் இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும். ஒரு வாகனத்துக்கு எது முக்கியம் என்று கேட்டால் என்ஜின் என்றுதான் முதலில் சொல்வோம். அவ்வளவு முக்கியமான என்ஜினைப் பாதிக்கும் தவறுகளை பலர் தெரிந்தும் தெரியாமலும் செய்கிறார்கள். என்ஜின் இளமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்றால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்.

குளிர்காலத்தில் என்ஜினை விரட்டக்கூடாது

குளிர்காலத்தில் என்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன் ஐடிலிங்கில் என்ஜினை ஓடவிடாமல் எடுத்த எடுப்பிலேயே த்ராட்டிலை அழுத்திக்கொண்டு கிளம்பிவிடக் கூடாது. பெட்ரோல் காராக இருந்தாலும் சரி, டீசல் காராக இருந்தாலும் சரி, காலையில் காரை ஸ்டார்ட் செய்ததும், குறைந்தது 5 நிமிடங்களுக்காவது ஐடிலிங்கில் ஓடவிடுங்கள். இரவு முழுவதும் என்ஜின் ஓடாமல் இருக்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக, என்ஜினுக்குள் ஆயில் வழிந்து கீழிறங்கி இருக்கும். காரை ஸ்டார்ட் செய்த பிறகுதான் இந்த ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக என்ஜின் முழுக்கப் பரவ ஆரம்பிக்கும். அதற்கு முன்பு, என்ஜினை ரெவ் செய்தால் என்ஜினில் உராய்வு அதிகரிக்கும்.

மேலும், தோராயமாக 195 முதல் 220 டிகிரி டெம்ப்ரேச்சர் இருக்கும்போதுதான் என்ஜின் ஸ்மூத்தாக இயங்கும். குளிர் காலங்களில் வாகனத்தை ஸ்டார்ட் செய்த உடனேயே மொத்த பர்ஃபாமென்ஸையும் காட்டினால், என்ஜினில் தேய்மானம் அதிகரித்துப் பல பாகங்களைச் சீக்கிரமே மாற்றவேண்டியது வரும்.

டார்க் இல்லாமல் திணறடிக்கக் கூடாது

நன்றாக கார் ஓட்டத்தெரிந்த டிரைவர்களும் அவ்வப்போது கியரை மாற்றுவதில் தவறு செய்வார்கள். ஒவ்வொரு கியருக்கும் ஒரு பவர் தேவை. அந்த கியரை சரியான என்ஜின் RPM-ல் ஓட்டும்போதுதான் காரின் திறன் அதிகமாக இருக்கும். 2-ம் கியரில் போகவேண்டிய இடத்தில் 4-ம் கியரை போட்டுவிட்டு கார் நகரவில்லை என்று த்ராட்டிலை அழுத்தி என்ஜினைத் திணறடிப்பதால் என்ஜின் திறன் குறைகிறது. மைலேஜ் அடிவாங்குவது மட்டுமல்ல என்ஜினின் வெப்பம் அதிகரித்து அதிக தேய்மானத்தை உருவாக்குகிறது. இதனால் அவ்வப்போது என்ஜின் டைமிங் பாதிக்கும். காலப்போக்கில் என்ஜினில் அதிக வைப்ரேஷன் உருவாகும்.

ஆயுளை கூட்ட ஆயில் தேவை

எல்லா இயந்திரங்களுக்கும் தொடர் பராமரிப்பு தேவை. என்ஜின் அதிக வெப்பத்தில் இயங்கக்கூடிய இயந்திரம். அதனால், என்ஜினுக்கு கூடுதல் கவனிப்பு தேவை. ஆர்வத்தில் கார் வாங்குகிற பலர் சரியான இடைவெளியில் சர்வீஸ் விடாமல், ஆயில் மாற்றாமல் விட்டுவிடுவது உண்டு. நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்படாத பூட்டு இருக்கிறது. வெயிலில், மழையில் துருப்பிடித்துப் போய், சாவியைப் போட்டு எவ்வளவு திருகினாலும் அவ்வளவு எளிதில் திறக்காது, சாவியிலும் பூட்டு துவாரத்திலும் லேசாக எண்ணெய் விட்டால் திறந்து விடும். இதே டெக்னிக்தான் என்ஜினுக்கும். என்ஜினில் பிஸ்டன்கள் இயங்கும்போது ஏற்படும் உராய்வுத் தன்மையைச் சீராக்க, இந்த என்ஜின் ஆயில் மிக முக்கியம்.

நாளாக நாளாக ஆயிலின் மசகுத் தன்மை குறைந்துவிடும். அதனால் குறிப்பிட்ட சில கி.மீ கடந்ததும் ஆயில் மாற்றவேண்டும். வாகனத்தின் மேனுவலில் பரிந்துரைக்கும் கிரேடை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். நிறைய போலி என்ஜின் ஆயில்கள் விற்கப்படுகின்றன. அதனால், ஆயில் வாங்கும்போது, கேன்களில் சீல் அல்லது ஹாலோகிராம் உள்ளதா என்பதைப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிராண்ட் என்ஜின் ஆயில் பயன்படுத்த வேண்டாம். என்ஜினில் ஏதாவது சின்ன குறை தென்பட்டாலும், அதை உடனே சரிசெய்துவிடுங்கள். நாளடைவில் அது பெரிதாகி நம் பாக்கெட்டுக்கு வேட்டு வைத்துவிடும்.

கிளட்சுக்கு ஏன் இந்த சோதனை

லாங் டிரைவ் பேர்வழிகள் பலரைப் பார்த்திருக்கிறேன். கிளட்சிலிருந்து காலை எடுக்கவே மாட்டார்கள். நெடுஞ்சாலையில் போகும்போதும் கூட கிளட்சில் கால் வைத்துக்கொண்டே இருப்பார்கள். சின்னச் சின்ன குண்டு குழிகளில் எல்லாம் ஏற்றி இறக்கும்போது கிளட்ச் மிதிக்கப்படும். சிட்டியில் ஓட்டும் சிலர் ஒவ்வொரு ஸ்பீடு பிரேக்கர் வரும்போதும் கிளட்சையும், பிரேக்கையும் பயன்படுத்துவார்கள். கிளட்ச் என்பது என்ஜினில் இருக்கும் காஸ்ட்லியான பாகங்களில் ஒன்று. பல கார் ஓட்டிகள் காசை கரியாக்குவது கிளட்ச் வழியாகத்தான். தேவையில்லாமல் கிளட்ச்சை மிதித்துக்கொண்டே ஓட்டுவதைக் குறைத்தால் நிறைய எரிபொருள் சேமிக்கலாம். கிளட்ச் பிளேட்டும் தேவையில்லாத தேய்மானத்திலிருந்து தப்பிக்கும். என்ஜின் பிரேக்கிங்குக்குப் பழகிக்கொள்வது நல்லது.

டர்போ சார்ஜர் இருந்தால் எக்ஸ்ட்ரா கேர் தேவை

சின்ன என்ஜினிலிருந்து அதிக திறன் வேண்டுமென்றால் டர்போ சார்ஜர்தான் சிறந்த வழி. இதனால்தான் பல டீசல் கார்களிலும், பர்ஃபாமன்ஸ் கார்களிலும் டர்போ சார்ஜர் பயன்படுத்துகிறார்கள். உங்கள் என்ஜினில் டர்போசார்ஜர் இருக்கிறது என்றால் அதிக நேரம் பயணித்த பிறகு உடனே என்ஜினை ஆஃப் செய்யக் கூடாது.

சிறிது நேரம் என்ஜினை ஐடிலிங்கில் ஓடவிடவேண்டும். டர்போ சார்ஜரின் வெப்பம் என்ஜின் வெப்பத்தை விட அதிகமாக இருக்கும். என்ஜினை வேகமாக ஓட்டிவிட்டு உடனே ஆஃப் செய்தால் டர்போ சார்ஜரில் இருக்கும் பியரிங், சீல் போன்றவற்றில் பிரஷர் ஏற்படும். இது டர்போ சார்ஜரின் ஆயுளை குறைக்கும். மேலும், தொடர்ந்து வரும் என்ஜின் ஆயில் உடனடியாக நிறுத்தப்படுவதால் டர்போ சார்ஜரில் இருக்கும் ஆயில் எரிந்து ஸ்லட்ஜ் ஆகி ஆயில் பைப்பில் அடைப்பு ஏற்படும். இதனால், டர்போ சார்ஜர் பாதிக்கப்பட்டு சீக்கிரமே மாற்றவேண்டியது வரும்.