Published:Updated:

டிசையர், அமேஸ், ஆஸ்பயர்... எந்த செடான் யாருக்கு செட்டாகும்?

டிசையர், அமேஸ், ஆஸ்பயர்... எந்த செடான் யாருக்கு செட்டாகும்?
டிசையர், அமேஸ், ஆஸ்பயர்... எந்த செடான் யாருக்கு செட்டாகும்?

ஹேட்ச்பேக் காருக்கு டிக்கி வைத்தால் அதுதான் செடான் என்ற நிலைமை மாறிவிட்டது. அமேஸ் இப்போது ப்ரியோவை அடிப்படையாகக் கொண்ட கார் இல்லை. ஸ்விஃப்ட் டிசையர் ஸ்விஃப்ட்டைவிட சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. புது இன்ஜின், புது கியர்பாக்ஸ், குறைவான விலை என அப்கிரேட் ஆகிவிட்டது ஃபிகோ ஆஸ்பயர். மூன்றும் ஒவ்வொரு ரகம். இந்த மூன்றில் எந்த செடான் எனக்குச் சரியாக இருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. அந்தக் குழப்பத்தைப் போக்கத்தான் இந்த ஒப்பீடு. காம்பாக்ட் செடான் செக்மென்ட்டில் பெட்ரோல் கார்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன என்பதால் பெட்ரோல் - மேனுவல் வேரியன்ட் வைத்தே இந்த ஒப்பீடு.

ஹோண்டா அமேஸ் 

தனித்துவமான பாக்ஸ் டிசைனும் பளிச் நிறங்களும் அமேஸை திரும்பிப்பார்க்க வைக்கிறது. காரின் தோற்றத்துக்கு 175/65 R15 டயர்கள் சிறிதாகத் தெரிகின்றன. தடிமனான க்ரில்லும், C வடிவ டெயில் லைட்டும் இந்தக் காருக்கு சிவிக் போன்ற அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறது. 

அமேஸின் இன்டீரியர் தூரத்தில் இருந்து பார்க்க கிளாசிக் டிசைன். அருகே சென்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பில்டு குவாலிட்டி சுமார். சில பட்டன்களைத் தொட்ட உடனேயே விலை குறைவான பிளாஸ்டிக் என்று தெரிந்துவிடுகிறது. டச் ஸ்க்ரீன், இன்னும் தரமானதாக இருந்திருக்கலாம். சீட்டில் தொடைகளுக்கான சப்போர்ட் இன்னும் தேவை. சீட் செம சாஃப்ட்டாக இருக்கிறது. முன்பக்கம் அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட் திருப்தி தருகிறது. ஆனால், பின் பக்கம் இல்லை என்பது ஏமாற்றம். உயரமானவர்களுக்குத் தலை இடிக்கலாம். பிராக்டிக்காலிட்டி எனும் ஒரு விஷயத்தில் அமேஸை அடித்துக்கொள்ள முடியவில்லை. `இதை எங்க வைக்கிறது’ என யோசிக்கவே முடியாத அளவு ஸ்டோரேஜ் ஸ்பேஸ். 420 லிட்டர் பூட் செக்மென்ட்டிலேயே பெரியது.

ஹோண்டாவின் மைலேஜ் விரும்பி iVtech இன்ஜின் லாங் டிரைவுக்கு செம. 5,000rpm தாண்டிவிட்டால் ஓடவில்லை... பறக்கிறது. ஆனால், ஓவர் டேக்கிங்கின்போது, டவுன்ஷிஃப்ட் செய்யச் சொல்லித் திணறுகிறது. குறைந்த வேகங்களில், டிராஃபிக்கில் பன்ச் போதவில்லை. 0 - 100 கி.மீ வேகம் தொட ஆஸ்பயரைவிட 1.2 நொடிகள் குறைவாகவே எடுத்துக்கொண்டது. வேகமாக ஓட்டுவதற்கான கார் இல்லை, சொகுசாக ஓட்டுவதற்கான கார்தான் அமேஸ். 170 மி.மீ கிரவுண்டு க்ளியரன்ஸ் இருந்தாலும் பெரிய பள்ளங்களில் தரை தட்டுகிறது. ஸ்டீரிங் அவ்வளவு நம்பிக்கை கொடுக்கவில்லை. சொகுசுக்காகவே சஸ்பென்ஷன் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. பள்ளம் மேடுகள் காருக்குள் கடத்தப்படுவதில்லை. 

ஃபோர்டு ஆஸ்பயர்

மூன்று கார்களையும் நிறுத்தி வைத்தால் முதலில் ஆஸ்பயர் பக்கம்தான் அதிக கண்கள் போகும். ஆஸ்டான் மார்ட்டின் இன்ஸ்பிரேஷன் அப்படியே தொடர்கிறது. ஆஸ்பயர் இளமை துள்ளலோடு இருக்கக் காரணம் இதன் மல்ட்டி ஸ்போக் அலாய் வீல். இன்டீரியர் ரிச் லுக் கொடுக்கிறது. டச் ஸ்கிரீன் சிறியது (6.5 இன்ச்) ஆனால், பயன்படுத்துவதற்கு பிரமாதமாக உள்ளது. முன்பக்கம் இருக்கும் அளவு ஸ்டோரேஜ் வசதி பின்பக்கம் இல்லை. ஆஸ்பயர் வீல் பேஸில் பெருசு அதனால் பின்பக்கம் அதிக இடம் இருக்கும் என்று நினைத்தால்... மற்ற இரண்டு கார்களைவிட லெக்ரூம் இதில் குறைவு. டோரில் ஸ்டோரேஜ் என்று எதுவும் இல்லை. முன்சீட்டுக்கும் சீட் பாக்கெட்டுக்கும் இடையே ஒரே ஒரு பாட்டில் வைக்க இடம் உண்டு. பின்பக்கம் ஏசி வென்ட்டும் கிடையாது.

ஆஸ்பயரின் டிராகன் இன்ஜின் புதுசு. பழைய ஆஸ்பயரின் 88bhp 4 சிலிண்டர் இன்ஜின் வரும். இப்போது 98bhp 3 சிலிண்டர் இன்ஜின் வருகிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது அதிக பவர் கொண்ட இன்ஜின் இதுதான். ஆனால், டிசையர் அளவுக்கு டிராகன் சீறவில்லை. மந்தமாகவும் இல்லை. 2000rpm கடந்ததும் ஓட்டுவதற்கு உற்சாகமாம் தருகிறது. அதுவும் 7000rpm வரைதான். அதற்குமேல் பவர், டாரக் எதுவும் கிடையாது.

ஸ்டீரிங் லேசாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. 195மி.மீ டயரின் க்ரிப் வேற லெவல். சஸ்பென்ஷன் சாலையின் அதிர்வுகள் எல்லாவற்றையும் உள்வாங்கிவிடுகிறது. பிரேக் ஷார்ப்பாக் இருக்கிறது. விரட்டி ஓட்டுவதற்கு நம்பிக்கை கொடுக்கிறது. இந்த மூன்று கார்களில் டிரைவிங் என்றால் அது ஃபோர்டுதான்.

மாருதி சுஸூகி டிசையர்

ஷார்ப்பான பாடி பேனல்களோடு டிசையர் ஸ்விஃப்ட்டை காட்டிலும் தனித்துத் தெரிகிறது. இந்த செக்மென்ட்டில் LED ப்ரொஜக்டர் ஹெட்லைட் இருப்பது டிசையரில் மட்டும்தான். இன்டீரியரின் தரம் ஓகேதான். ஃபோர்டு அளவுக்கு இல்லை. ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் காரில் உட்கார்ட்ந்த உடனேயே ஸ்போர்ட் ஃபீலை தருகிறது. சொகுசில் டிசையருக்குதான் அதிக லைக்ஸ். பின் சீட் அகலமாக இருப்பதால் மூன்று பேர் சௌகர்யமாக உட்கார இடம் உண்டு. இந்த மூன்று கார்களில் டிசையரில் மட்டும்தான் ரியர் ஏசி வென்ட் உள்ளது. 

மாருதியின் 1.2 லிட்டர் k series இன்ஜின் வெறும் 83bhp பவர்தான் தருகிறது. ஆனால், எடைக் குறைவு என்பதால் பெர்ஃபாமென்ஸில் அசத்துகிறது டிசையர். ஆக்ஸிலரேஷனில் மற்ற இரண்டு கார்களையும் 2 நொடி வித்தியாசத்தில் முந்திவிடுகிறது. கிளட்ச் லேசாகவும் கியர்பாக்ஸ் ஸ்மூத்தாகவும் இருப்பதால் சிட்டியில் ஓட்டுவதற்கு டிசையர்தான் பெஸ்ட்.

நெடுஞ்சாலையில் ஆஸ்பயர் போன்று வேகமாக ஓட்டுவதற்கு நம்பிக்கை தரவில்லை. ஸ்டீரிங்கும், வீல்களும் தூரத்து சொந்தம் போல. சாலையின் ஃபீல், ஃபீட்பேக் என எதுவுமே கிடைப்பதில்லை. U turn அடித்துவிட்டால் மீண்டும் அதே இடத்துக்கு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது ஸ்டீரிங். ஸ்டீரிங்கை ஒவ்வொரு முறையும் ரிவர்ஸில் சுழற்ற வேண்டியுள்ளது. 

எந்த கார் யாருக்கு?

ஹோண்டா அமேஸ் குடும்பத்துக்கு ஏற்ற கார். அதிர்வுகள் இல்லாத இன்ஜின், பின்பக்க இடவசதி, அதிக பூட் ஸ்பேஸ் மற்றும் கேபினில் நிறைய இடவசதி இருக்கிறது. சஸ்பென்ஷன் சொகுசான டிரைவிங்கை கொடுக்கிறது. குறைந்த வேகங்களிலும், மிட் ரேஞ்சில் ஃபன் கிடைக்காது. சிட்டியில் கொஞ்சம் சமாளித்துவிட்டு குடும்பத்துடன் ஒரு வீக் எண்ட்டை கொண்டாடத் தரமான கார்.

ஃபோர்டு ஆஸ்பயர் VFM விரும்பிகளுக்கும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் ஏற்ற கார். இந்த செக்மென்ட்டிலேயே 6 ஏர்பேக் கொண்ட கார் இதுதான். மற்ற இரண்டு காரையும்விட 1.5 லட்சம் விலைக் குறைவு. இன்ஜின் பெஸ்ட் இல்லை. ஆனால், நெடுஞ்சாலையில் ஃபன்னானை டிரைவ் கிடைக்கும். முதல் கார் எடுக்கும் இளைஞர்களுக்கு ஏற்றது.

மாருதி சுஸூகி டிசையர் செக்மெனட்டின் பெஸ்ட் இன்ஜின் கொண்ட கார். சிட்டி டிராஃபிக்குக்கு ஏற்றது. இடவசதி தாராளம். பெரிய கார் போன்ற ஃபீல் கிடைக்கும். போட்டியாளர்களைவிட விலை அதிகம். இருந்தும் மாருதியின் சர்வீஸ் காஸ்ட், எங்கு சென்றாலும் கிடைக்கும் ஸ்பேர்ஸ், ஊருக்கு ஊர் இருக்கும் டீலர்ஷிப் - சர்வீஸ் போன்றவற்றையும் சேர்த்துப் பார்த்தால் விலையைச் சகித்துக்கொள்ளலாம். ஆல்ட்டோ, க்விட், சான்ட்ரோ போன்ற என்ட்ரி லெவர் காரிலிருந்து அடுத்த கார், அதுவும் 10 லட்ச ரூபாய்க்குள் செடான் வாங்கப்போகிறேன் என்பவர்களுக்கு டிசையர் பெஸ்ட்.