Published:Updated:

முதல் சீஸனிலேயே எரிந்த எலெக்ட்ரிக் பைக்குகள்... நடைபெறுமா `மோட்டோ E’ பந்தயம்?

முதல் சீஸனிலேயே எரிந்த எலெக்ட்ரிக் பைக்குகள்... நடைபெறுமா `மோட்டோ E’ பந்தயம்?
முதல் சீஸனிலேயே எரிந்த எலெக்ட்ரிக் பைக்குகள்... நடைபெறுமா `மோட்டோ E’ பந்தயம்?

மோட்டோ E எனும் உலகின் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் பைக் ரேஸ் போட்டிக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 18 பைக்குகள் ரேஸ் டிராக்கில் எரிந்து நாசமாகிவிட்டன. தற்போது மோட்டோ E போட்டிகள் நடைபெறுமா என்று பைக் ரேஸ் ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

அதிவேக பைக் ரேஸான மோட்டோ ஜிபி-யின் ஒரு பகுதியாக மோட்டோ E எனும் எலெக்ட்ரிக் பைக் ரேஸை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டிருந்தது FIM. இதற்கான முன்னோட்டமாகக் கடந்த ஆண்டே ஒவ்வொரு ரேஸ் டிராக்கிலும் ஓர் ஓய்வு பெற்ற ஜிபி ரைடர் இந்த பைக்கை டெஸ்ட் செய்தார். 2019, மே 5-ம் தேதி ஸ்பெயினின் ஜெரஸ் ரேஸ் சர்க்யுட்டில் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தார்கள் ஒருங்கிணைப்பாளர்கள். 

மோட்டோ E பைக்குகளுக்காக தனி பிட் அமைத்திருந்தார்கள். பிட்டில் நடந்த பெரும் தீ விபத்தால் அன்று டெஸ்ட்டிங்கில் பங்கெடுத்த 18 பைக்குகள் முழுவதுமாக எரிந்துவிட்டன. பிட்டில் இருந்த 4 சப்போர்ட் பைக்குகளையும் சேர்த்து மொத்தம் 22 பைக்குகளும், சார்ஜிங் ஸ்டேஷனும் மற்ற அனைத்து ரேஸ் கருவிகளும் நாசமாகிவிட்டதாக இந்தப் போட்டியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தத் தீவிபத்தில் யாரும் காயமடையவில்லை. தீ பற்றிய நேரத்தில் எந்த பைக்குகளும் சார்ஜில் இல்லை. சார்ட் சர்க்யுட்டினால் லேசாக தீ பிடித்துள்ளது. எல்லா பைக்குகளிலும் வேகமாக சார்ஜ் ஏறுவதற்கான High density பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தால் பேட்டரிகள் வேகமாக எரிந்து நெருப்பு பிட் முழுவதும் பரவிவிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.

மோட்டோ E எலெக்ட்ரிக் பைக்குகள் மோட்டோ ஜிபி பைக்கின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. மோட்டோ ஜிபி-யில் பயன்படுத்தப்படுவது போல எலெக்ட்ரிக் பைக்குகளில் பரவலாக்கப்படாத பல உயர் தொழில்நுட்பங்களை கொண்டு இந்த பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. எரிந்துபோன பைக்குகளுக்கு பதிலாக புதிய பைக்குகளை தயாரித்துக் கொடுக்க Enel நிறுவனத்திடம் கேட்டுள்ளது மோட்டோ E. மொத்தம் 12 டீம்கள் இந்தப் போட்டியில் பங்கெடுக்க இருந்தன. போட்டிபோட இருந்த மொத்த பைக்குகளும் எரிந்துவிட்டதால் தற்போது போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நிச்சயம் மோட்டோ E போட்டி நடைபெறும். புதிய கால அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இந்த ஆண்டு ஜெரஸ் சர்க்யுட்டில் போட்டி இருக்காது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்கள்.