Published:Updated:

ஹூண்டாயின் காம்பாக்ட் எஸ்யூவி வென்யூ நடுக்கடலில் அறிமுகம்!

ஹூண்டாயின் காம்பாக்ட் எஸ்யூவி வென்யூ நடுக்கடலில் அறிமுகம்!
ஹூண்டாயின் காம்பாக்ட் எஸ்யூவி வென்யூ நடுக்கடலில் அறிமுகம்!

இந்தியா, அமெரிக்கா இரண்டு நாடுகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகியுள்ளது ஹூண்டாயின் புதிய காம்பாக்ட் எஸ்யூவி வென்யூ. இந்தியாவில் அரபிக் கடலின் நடுவே வென்யூவை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். இந்த கார் பல கரைகளைத் தொடும் என்று சூசமாகச் சொல்கிறார்களோ என்னவோ! மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்ட் எக்கோஸ்போர்ட், மஹிந்திரா XUV300 கார்களுக்கு போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது வென்யூ. செக்மென்ட்டின் மற்ற கார்களைவிட இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

க்ரெட்டாவை சுருக்கியதுபோல தோற்றமளிக்கும் வென்யூவில் பெரிய க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. க்ரோம் பூசப்பட்டு, மெஷ் வடிவத்தில் இருக்கும் க்ரில்லில் ஹூண்டாயின் லோகோ வழக்கத்தைவிடப் பெரிதாக உள்ளது. டாடா ஹேரியர்போல வென்யூவில் ஸ்பிளிட் ஹெட்லைட்டுகள் உள்ளன. மேலே LED DRL ஸ்டிரிப் உள்ளது. கீழே புரொஜக்டர் ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட காரைவிட, இந்திய காரில் ஏகப்பட்ட பாடி கிளாடிங் உள்ளன. பெரிய வீல் ஆர்ச், 16 இன்ச் வீல், காருக்கு வலுவான தோற்றத்தைத் தரும் ஷோல்டர்லைன் ஈர்க்கிறது. பின்பக்கம் ஜீப் ரெனிகாடே போல சதுர வடிவ LED லைட்டுகள் இருக்கின்றன. பிரெஸ்ஸாவை போலவே வென்யூ 2500 மி.மீ வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆனால், 1590 மி.மீ உயரத்துடன் செக்மென்ட்டிலேயே உயரம் குறைவான காராக இருக்கிறது. 

வென்யூ, 69 சதவிகிதம் high strength ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்தக் காரில் 6 ஏர்பேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. இன்டீரியரை பொறுத்தவரை சீட்டை உயரமாகவும் செங்குத்தாகவும் வைத்து எஸ்யூவி பிரியர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். ப்ளூலிங்க் வசதியுடன் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தி டெக்னாலஜி ஃப்ரீக்குகளையும் கவர்ந்திருக்கிறார்கள். ப்ளூலின்க் என்பது வெறும் இன்ஃபோடெயின்மென்ட் சாஃப்ட்வேர் மட்டுமல்ல, இதில் காரின் பராமரிப்பு, டிரைவர் பாதுகாப்பு உட்பட மொத்தம் 33 வசதிகள் இருக்கின்றன. டேஷ்போர்டில் இருக்கும் பிளாஸ்டிக்குகள் தொடுவதற்கு நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் ஹார்ட் பிளாஸ்டிக் பளபளக்கிறது. 

ஹூண்டாயில் வசதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஏகப்பட்ட USB போர்ட் இருக்கிறது. டாப் வேரியன்ட் காரில் க்ரூஸ் கன்ட்ரோல், வையர்லெஸ் சார்ஜிங், வாய்ஸ் கன்ட்ரோல், ஆர்கேமிஸ் சவுண்டு சிஸ்டம், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ரியர் ஏசி வென்ட், சன்ரூஃப் ஆகிய வசதிகள் இருக்கின்றன. பின் சீட்டில் இருவர் மட்டும்தான் உட்கார முடியும். இடவசதி அவ்வளவு பெரிதாக இல்லை. உயரமான ஜன்னல்களும் கறுப்பு நிற கேபினும் அடைத்து வைத்த உணர்வைத் தரலாம். எல்லா கதவுகளிலும் 1 லிட்டர் பாட்டில் வைக்கும் அளவு பெரிய பாட்டில் ஹோல்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

வென்யூவில் மொத்தம் மூன்று இன்ஜின்கள். 83bhp பவர்/115Nm டார்க் தரும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 120bhp பவர்/172Nm டார்க் தரும் ஹை-டெக்கான 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 90bhp பவர்/220Nm டார்க் தரும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின். மூன்று இன்ஜினைப்போல மூன்று கியர்பாக்ஸ் உண்டு. 1.2லி இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வரும். 1.4லி இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் வரும். 1.0லி இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு. இந்த செக்மென்ட்டிலேயே டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் உடன் வரும் ஒரே கார் இதுதான்.

ஹூண்டாயின் வென்யூ 3 ஆண்டுகள், அன்லிமிட்டெட் கி.மீ வாரன்ட்டியுடன் வரும். மே, 21-ம் தேதி இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது. ரூ.10-15 லட்சம் வரை ஆன்ரோடு விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காம்பாக்ட் எஸ்யூவி வாங்கப்போகிறவர்கள் மே 21 வரை காத்திருப்பது நல்லது.