Published:Updated:

கோடைக்கால வெப்பத்திலிருந்து கார்களைப் பாதுகாக்க 7 வழிகள்!

கோடைக்கால வெப்பத்திலிருந்து கார்களைப் பாதுகாக்க 7 வழிகள்!
கோடைக்கால வெப்பத்திலிருந்து கார்களைப் பாதுகாக்க 7 வழிகள்!

கோடை வெப்பத்தில் வறண்டுபோய் வலிமையை இழப்பது நாம் மட்டுமல்ல நம் வாகனங்களும்தான். நம்மைத் பாதுகாத்துக்கொள்ள பருத்தி ஆடை அணிவது, இளநீர், நார்ச் சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது எனப் பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். அதே போல கோடைக்காலத்தின் வெப்பத்திலிருந்து நம் கார்களைப் பாதுகாக்க 7 வழிகள் இதோ.

1. டயர்

காரில் அதிகம் கவனிக்கப்படாத பாகங்களில் டயரும் ஒன்று. பலபேருக்குத் தங்கள் காரின் மேனுவலில் கொடுக்கப்பட்டுள்ள டயர் பிரஷர் என்ன என்பதே தெரியாது. கோடைக்காலத்தில் டயரில் காற்று குறைவாக இருந்தால் டயரின் தேய்மானம் அதிகமாக இருக்கும். குறைந்த பிரஷருடன் கொதிக்கும் சாலையில் சென்றால் சாஃப்ட்டான பக்கவாட்டுப்பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டு டயர் வெடிக்கும் சூழலும் ஏற்படும். பிரஷர் அதிகமாக இருந்தால் டயரின் நடுப்பகுதி தேய்ந்து கிரிப் குறையும். 

காற்று, வெப்பம் அதிகரிக்கும்போது விரிவடையும் தன்மை கொண்டது. இதனால், வெயிலில் காரை ஓட்டிவிட்டு டயர் பிரஷரை செக் செய்யக் கூடாது. காலை வேளையில் டயர் பிரஷரை சரிபார்ப்பது நல்லது. வீல் அலைன்மென்ட்டிலும் ஒரு கண் தேவை. வீல் அலைன்மென்ட் சரியில்லை என்றால் டயர் அதன் இஷ்டம்போல் தேயும்.

2. ஏசி

கோடைக்காலத்தில் காரில் அதிகம் வேலைசெய்யும் பாகம் ஏசி. ஏசியை சரிவரப் பராமரிக்கவில்லை என்றால் கோடைக்காலத்தில் கார் இருந்தும் பயன் இல்லை. கம்ப்ரஸர் ஆயிலை அவ்வப்போது டாப்அப் செய்ய வேண்டும். கூலன்ட் கசிவு, தூசு ஆகியவை ஏசியைப் பாதிக்கும் விஷயங்கள். சித்திரை வெயில் அடிப்பதற்கு முன் ஏசியை ஒரு சர்விஸ் விடுவது நல்லது. கோடைக்கால பராமரிப்பு எனப் பல கார் நிறுவனங்கள் ஏசிக்காக இலவச செக்அப் கேம்ப் நடத்துவார்கள். 

பொதுவாக, கோடைக்காலத்தில் ஏசியில் அதிகம் வரும் புகார், குளிராக அதிக நேரம் எடுக்கிறது என்பதுதான். எவ்வளவு சக்திவாய்ந்த ஏசியாக இருந்தாலும் காரின் உள்ளே சூடான காற்று இருந்தால் ஏசி பொறுமையாகத்தான் குளிரூட்டும். அதனால், காரில் ஏறிய உடன் ஜன்னல்களை லேசாகத் திறந்துவையுங்கள். சிறிது நேரம் ப்ளோயரை வேகமாக ஓடவிட்டு காரின் உள்ளே இருக்கும் உஷ்ணம் குறைந்தவுடன் ஜன்னல்களை அடைத்துவிட்டு ஏசியைப் போடுங்கள். 

3. ரேடியேட்டர்

கோடைக்காலத்தில் நமக்கு மோர், இளநீர், ஜூஸ் என நீர்ச் சத்து தேவைப்படுவதுபோல காருக்கு கூலன்ட் ஆயில் முக்கியம். "கூலன்ட் ஆயில் வேகமா குறைகிறது. இரண்டு வாரத்துக்கு ஒரு முறை டாப் அப் செய்ய வேண்டியுள்ளது, சர்வீஸ் சென்டரில் இன்ஜினை சோதித்துப் பார்த்துவிட்டேன் எங்கேயும் கூலன்ட் லீக் இல்லை. தேவையென்றால் இன்ஜினை பிரித்துப் பார்ப்போம் என்று சொல்கிறார்கள். என்ன பிரச்னையாக இருக்கும்'' என ஒரு வாசகர் நம்மைத் தொடர்புகொண்டார். `இன்ஜினை பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை சர்வீஸ் சென்டர் செல்லாமல் கூலன்ட் ஆயிலை நீங்களே வாங்கி டாப்அப் செய்யுங்கள்’ என்று கூறினோம். ஒரு மாதம் கழித்து அவர் தொலைபேசி மூலம் அழைத்து, `எந்தப் பிரச்னையும் இல்லை, கூலன்ட் ஆயில் குறைவது நின்றுவிட்டது’ என்றார்.

பிரச்னை காரில் இல்லை, சர்வீஸ் சென்டர் செய்த கோல்மால்தான் இதற்குக் காரணம். சில சர்வீஸ் சென்டர்கள் கூலன்ட் ஆயிலோடு தண்ணீர் கலந்து வைத்துவிடுவார்கள். இதனால் வேகமாகக் கூலன்ட் ஆவியாகிவிடும். அவ்வப்போது டாப் அப் தேவைப்படும். சர்வீஸ் சென்டரில் கேள்வி கேட்டால் கோடைக்காலம் என்பார்கள், இல்லையென்றால் இன்ஜினை பிரித்துப் பார்ப்போம் என்று சொல்வார்கள். நாமே கூலன்ட்டை மாற்றுவது சிறந்த வழி. கூலன்ட் ஆயில் குறைந்தால் இன்ஜின் அதீத வெப்பமடைந்து பிரேக்டவுனாக வாய்ப்புள்ளது. கூலன்ட் அளவிலும் டேஷ்போர்டில் இருக்கும் இன்ஜின் டெம்ப்ரேச்சரிலும் கவனம் தேவை. மூன்று ஆண்டு பழைய காராக இருந்தால் சர்வீஸ் விடும்போது ரேடியேட்டரை மறக்காமல் சுத்தப்படுத்திவிட்டு லீக் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள். 

4. இன்ஜின் ஆயில்

இன்ஜினில் ஆயில் சரியான அளவில் இருந்தால் மட்டும் போதாது; சரியான கிரேடு ஆயில் பயன்படுத்த வேண்டும். சரியான கால இடைவெளியில் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். காலம் கடந்த இன்ஜின் ஆயிலில், மசகுத் தன்மை குறைந்து இன்ஜின் பாகங்கள் விரைவாகத் தேய்ந்துபோகும். சரியான கிரேட் இன்ஜின் ஆயிலைப் பயன்படுத்துங்கள். இன்ஜின் ஆயிலுக்கு டாப்அப் தேவையா என்று பார்த்துக்கொள்ளுங்கள். பவர் ஸ்டியரிங், பிரேக், கியர்பாக்ஸ் போன்றவற்றிலும் ஆயில் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பராமரித்திடுங்கள்.

5. பேட்டரி

அதிக வெப்பத்தால் பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்டு வாட்டர் வேகமாக ஆவியாகிவிடும். பேட்டரியில் சரியான அளவு நீர் இருக்கிறதா என மாதம் ஒருமுறை பார்ப்பது நல்லது. தற்போது பல கார்களில் பராமரிப்பு தேவையில்லாத சீல்டு பேட்டரிகள் வருவதால் பிரச்னையில்லை. பேட்டரி டெர்மினலை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதில் படர்ந்திருக்கும் தூசு மின்சாரத்தைக் கடத்த ஆரம்பித்துவிடும். இதனால், சார்ஜ் வீணாகும். அதேபோல், டெர்மினல்களில் துருப்பிடித்திருந்தால், அவை ‘இன்சுலேட்டர்’ ஆக மாறிவிடும். இதனால், மின்சாரம் கடத்தப்படும் திறன் குறைந்துவிடும்.

6. பாலிஷ்

வாக்ஸ் கோட்டிங் மற்றும் பாலிஷ் போடுவது காரை பளபளப்பாக்க மட்டுமல்ல காரின் பெயின்ட்டை பாதுகாக்கவும் செய்யும். வெயிலின் தாக்கத்தால் காரின் பெயின்ட் அதிக வெப்பமடைந்து வெளிறிப்போகும். வாக்ஸ் கோட்டிங் அல்லது பாலிஷ் பயன்படுத்தினால் பெயின்ட்டுக்கு மேல் ஒரு லேயரை உருவாக்கி, இது கார் பாடியின் மீது நேரடியாக விழும் சூரிய கதிர்களைத் தடுக்கிறது. இதனால் பெயின்ட்டின் ஆயுள்காலம் அதிகரிக்கிறது.

7. பெட்ரோல்

எளிதில் ஆவியாகக்கூடியது என்பதால், கோடைக்காலத்தில் பெரும்பாலும் இரவு நேரங்களில் எரிபொருள் நிரப்புங்கள். காலை நேரத்தில் பெட்ரோல் நிரப்புவதால் கார் வெயிலில் நிற்கும் சூழல் வரும்போது பெட்ரோல் வேகமாக ஆவியாகும்.

கோடைக்கால டிப்ஸை பயன்படுத்தி காருக்கு ஆகும் செலவுகளைக் குறைத்திடுங்கள். கோடைக்கால சர்வீஸ் கேம்ப் உங்கள் காரை செக் செய்ய சிறந்த வழி... தவறவிடாதீர்கள்...வெப்பம் தடுப்போம், வாகனத்தின் ஆயுள்காலத்தை அதிகரிப்போம்!