Published:Updated:

``2020 -க்குப் பிறகு டீசல் இன்ஜின் கிடையாது..!" - மாருதியின் அதிரடி முடிவு

ரஞ்சித் ரூஸோ
``2020 -க்குப் பிறகு டீசல் இன்ஜின் கிடையாது..!" - மாருதியின் அதிரடி முடிவு
``2020 -க்குப் பிறகு டீசல் இன்ஜின் கிடையாது..!" - மாருதியின் அதிரடி முடிவு

'BSVI மாசு கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைக்கு வருவதால், 2020-க்குப் பிறகு டீசல் இன்ஜின்களைக் கைவிடப்போகிறோம்' என்று மாருதி சுஸூகி அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம், மாருதி சுஸூகி. இவர்களிடம் தற்போது 1.3 லிட்டர் ஃபியட் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் DDiS இன்ஜின் என்ற இரண்டு இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாருதியின் இம்முடிவால், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட, டிசையர், எர்டிகா, S கிராஸ், பெலினோ, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற கார்களில், ஏப்ரல் 2020-க்குப் பிறகு டீசல் இன்ஜின் வேரியன்ட்டுகள் விற்பனையாகாது.

மாருதி சுஸூகியின் மொத்த விற்பனையில் டீசல் கார்களின் பங்கு 30 சதவிகிதமாக இருக்கிறது. இந்நிலையில், மாருதியின் இந்த முடிவு, கார் விற்பனையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. 2020 தொடங்குவதற்குள், கையில் இருக்கும் 16 பெட்ரோல் இன்ஜின் மாடல்களை BSVI விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்; பெட்ரோல்-டீசல் விலை வித்தியாசம் மற்றும் டீசல் இன்ஜின்களை BSVI-க்கு மாற்றத் தேவைப்படும் செலவு எல்லாவற்றையும் கணக்கிட்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

'சியாஸ் மாடலில், சமீபத்தில்தான் டீசல் இன்ஜின் வேரியன்ட்டை கொண்டுவந்தது மாருதி. இந்த இன்ஜினை 1000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கியுள்ளது. இந்த இன்ஜினுக்கு இருக்கும் வரவேற்பையும், BSVI மாறுதலுக்குத் தேவைப்படும் செலவையும் வைத்து இந்த இன்ஜினை மற்ற நாடுகளில் விற்பனைசெய்யலாமா வேண்டாமா என்பதை முடிவுசெய்வோம்' என்று கூறியுள்ளார்கள்.

மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் S கிராஸ் கார்களில், வெறும் டீசல் இன்ஜின்கள் மட்டுமே விற்பனையாகும் நிலையில், இந்த மாடல்களுக்கு புதிய பெட்ரோல் இன்ஜின்கள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்கள். மாருதி, வேகன் R-ஐ அடிப்படையாகக்கொண்ட புதிய மின்சார காரை (வேகன் R EV) விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.