Published:Updated:

வணக்கம்!

Vikatan Correspondent

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

நம் நாட்டில் தரமான கார்கள் கிடைக்கும் அளவுக்கு, தரமான டிரைவர்கள் கிடைப்பது இல்லை. இதற்கு முக்கியக் காரணம், இங்கே கார் ஓட்டுவதைப் பலர் சீரியஸாக எடுத்துக்கொள்வது இல்லை. முறையாக கார் ஓட்டக் கற்றுக்கொண்டவர்களும் குறைவு. முறையாக கார் ஓட்டத் தெரிந்தவர்களும் எல்லா நேரங்களிலும் சாலை விதிகளைக் கடைப்பிடித்து, முறையாக கார் ஓட்டுவார்கள் என்று சொல்ல முடியாது. இதனோடு அவசரம், சோர்வு, தூக்கமின்மை, செல்போன் அழைப்பு, கவனச் சிதறல் போன்றவையும் சேர்ந்தால் என்னவாகும் என்பதை, தினம் தினம் சாலைகளில் பார்க்கிறோம்.

இந்தப் பிரச்னைக்கு, தன்னாலான சீரிய முயற்சி ஒன்றை ஹூண்டாய் எடுத்திருக்கிறது. ஆம், அது டிரைவிங் அகாடமி ஒன்றை, இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ரோடு டிரான்ஸ்போர்ட்டுடன் இணைந்து சென்னையில் ஆரம்பித்திருக்கிறது. இதில், முதல்கட்டமாக 100 மாணவர்களுக்கும், நலிவடைந்த பிரிவினரில் 100 இளைஞர்களுக்கும் டிரைவிங் பயிற்சி கொடுக்க இருக்கிறது. ஏற்கெனவே இதே போன்ற ஒரு முயற்சியை மாருதியும் செய்துவருகிறது. சின்ன அளவில் இந்த கார் நிறுவனங்கள் செய்யும் முயற்சி, பெரிய அளவில் தொடரும்போதுதான் இதன் பலன் சமூகத்துக்குத் தெரியவரும்.

நல்ல கார் டிரைவர்கள் இருந்தால்தான், நல்ல கார்களின் அருமை எல்லோருக்கும் தெரியும். சமூகக் காரணங்களுடன் சுயநலக் காரணங்களுக்காகவும் மாருதி, ஹூண்டாயைப் பின்பற்றி, மற்ற கார் நிறுவனங்களும், ஆட்டோமொபைல் தொழிலோடு தொடர்புடைய நிறுவனங்களும் தரமான டிரைவர்களை உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

புதிய ஆண்டு பிறக்கவிருக்கிறது. புத்தாண்டு பூக்கும் காலம் மோட்டார் விகடன் விருதுகளும் பூக்கும். இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க, வழக்கம் போல மோட்டார் விகடன் உங்களைத்தான் அன்புடன் அழைக்கிறது. 2013-ம் ஆண்டு வெளிவந்த சிறந்த கார் மற்றும் சிறந்த பைக் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க, உங்கள் உதவி மிக மிக அவசியம். ஆகவே, இந்த இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் கூப்பனில் உங்கள் தேர்வை எழுதி, வழக்கம் போல எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்