Published:Updated:

டீசல் சிட்டி!

Vikatan Correspondent
டீசல் சிட்டி!
 ##~##

சிட்டிக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது ஹோண்டா. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதிய தலைமுறை சிட்டியைக் கொண்டுவருவது ஹோண்டாவின் வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு துவக்கத்திலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட புதிய சிட்டி காரை, இப்போதுதான் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய ஹோண்டா சிட்டி, டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. ஹூண்டாய் வெர்னாவை அடித்து வீழ்த்தும் என ஆருடம் சொல்லப்படும் புதிய சிட்டியில், அப்படி என்ன ஸ்பெஷல்?

 டிசைன்

இந்தியாவில்தான் முதலில் விற்பனைக்கு வருகிறது புதிய சிட்டி. புதிய ஜாஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், ஜாஸின் சாயல் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. காருக்குள்ளே இட வசதியை அதிகரிப்பதற்காக, காரின் நீளம் மற்றும் வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீளத்தில் 20 மிமீ, வீல்பேஸில் 50 மிமீ அதிகமாகி உள்ளது. வீல்பேஸில் ஹூண்டாய் வெர்னாவைவிட புதிய சிட்டி 30 மிமீ அதிகம். எண்களில் மட்டும் அல்ல, உண்மையிலேயே இந்த செக்மென்ட்டிலேயே அதிக இட வசதிகொண்ட காராக, புதிய சிட்டியை வடிவமைத்திருக்கிறது ஹோண்டா. டிக்கியிலும் இட வசதி அதிகம்.

உள்ளே

முழுக்க முழுக்க கறுப்பு வண்ண டேஷ்போர்டு மற்றும் பழுப்பு வண்ண இருக்கைகளுடன், புதிய சிட்டியின் உள்பக்கம் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. ஹூண்டாய் வெர்னாவை வீழ்த்த வேண்டும் என்றால், ஏகப்பட்ட சிறப்பம்சங்களைக் கொடுத்தால் மட்டுமே முடியும் என்பது ஹோண்டாவுக்குப் புரிந்துவிட்டது. டிரைவர் கை வைத்துக்கொள்ள ஆர்ம் ரெஸ்ட், பின் பக்கப் பயணிகளுக்கு ஏ.சி வென்ட், டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், ப்ளூ-டூத், கீ-லெஸ் பட்டன் ஸ்டார்ட், சன் ரூஃப், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோமேட்டிக் மிரர் அட்ஜஸ்ட், ஏபிஎஸ், இரண்டு காற்றுப் பைகள்... என முக்கியமான எல்லா சிறப்பம்சங்களையும் கொடுத்துவிட்டது ஹோண்டா.

டீசல் சிட்டி!

இன்ஜின்

முதன்முறையாக, உலகம் முழுக்க பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வெளிவருகிறது புதிய ஹோண்டா சிட்டி. பெட்ரோல் மாடலைப் பொருத்தவரை பழைய ஹோண்டா சிட்டியில் இருந்த அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் என்றாலும் உராய்வுகளைக் குறைக்க, இன்ஜினில் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் இன்ஜினின் அதிகபட்ச சக்தி எவ்வளவு என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. டீசல் இன்ஜினைப் பொறுத்தவரை, அமேஸில் இருக்கும் அதே 1.5 லிட்டர், 100bhpஇன்ஜின்தான். கியர்பாக்ஸ், டீசல் மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே. பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு.

விலை

புதிய ஹோண்டா சிட்டிக்கான புக்கிங் துவங்கிவிட்ட நிலையில், ஹூண்டாய் வெர்னாவைவிட விலை குறைவாக புதிய சிட்டி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. டீசல் மாடல்தான் அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதால், பெட்ரோல் மாடலைவிட டீசல் மாடலின் விலை ரூபாய் ஒரு லட்சம் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. புதிய சிட்டியின் விலை 9 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும்.

டீசல் சிட்டி!