Published:Updated:

திரும்பினால் திரும்பும் ஹெட்லைட்!

Dr.இந்திராதேவி

தி.ஜெயப்பிரகாஷ் படங்கள்: அ.ஜெஃப்ரி தேவ்

பொதுவாக, ஃபேரிங் வைத்துள்ள பைக்குகளில் ஹேண்டில்பாரை வளைக்கும்போது ஹெட்லைட் திரும்பாது. ஆகையால், இருட்டில் பயணிக்கும்போது வளைவு நெளிவான சாலைகளில், குறுகலான பாதைகளில் திண்டாட வேண்டும். இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், கோவை என்.ஜி.பி பொறியியல் கல்லூரியில், இ.சி.இ இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களான மணிபாரதி, தீபக் ராஜ்குமார், கண்ணன், மதன்குமார், அகிலன், கார்த்திக் ஆகியோர்.

திரும்பினால் திரும்பும் ஹெட்லைட்!

''இப்போதெல்லாம் சூப்பர் பைக் போன்ற ஃபேரிங் கொண்ட பைக்குகளை இளைஞர்கள் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். இது போன்ற ஃபேரிங் கொண்ட பைக்குகளில், ஹேண்டில் பாரைத் திருப்பும்போது, அதே திசையில் ஹெட்லைட் திரும்புவது இல்லை என்ற குறை அனைவருக்குமே இருக்கிறது. அதனால், இந்தக் குறையைப் போக்கும் வகையில், நம்முடைய புராஜெக்ட் இருக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்து களம் இறங்கினோம். பல்வேறுவிதமான யோசனைகள், செய்முறைகள் என அலசி ஆராய்ந்து, இறுதியாக மிகக் குறைவான விலையிலேயே இந்த அமைப்பை உருவாக்கிவிட்டோம்.

திரும்பினால் திரும்பும் ஹெட்லைட்!

பைக் சேஸியை பழைய இரும்புக் கடையில் வாங்கினோம். பைக்குக்குத் தேவையான ஃபேரிங், ஹெட்லைட் அசெம்ப்ளி போன்றவற்றை கோவை ஹீரோ டீலரான சுகுணா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் எங்களுக்கு வழங்கியது. அடாப்ட்டிவ் லைட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தி ஹெட்லைட்டை அட்ஜஸ்ட் செய்யும் வசதியை உருவாக்கினோம். 'பொடன்சியோ’ மீட்டரை ஹேண்டில்பாருடன் இணைத்திருக்கிறோம். இப்போது, ஹேண்டில்பார் திரும்பும் திசையில் ஹெட்லைட்டும் திரும்பி, ஒளியை அந்தத் திசையிலேயே பாய்ச்சும். மேலும், இரவில் தேவைக்கு ஏற்ப ஹெட்லைட் ஒளிவீசும் வசதி, ஆட்டோமேட்டிக்காக டிம்-டிப் செய்ய அல்ட்ரா சோனிக் சென்ஸார் போன்ற வசதிகளையும் இதில் சேர்த்துள்ளோம்!'' என்றவர், அதைச் செய்தும் காண்பித்தார் மணிபாரதி.

 இந்த புராஜெக்ட்டைச் செய்து முடிக்க இவர்களுக்கு ஆன மொத்தச் செலவு, 8,000 ரூபாய் மட்டுமே!