Published:Updated:

இருட்டு மெக்கானிக்!

புகழ் திலீபன் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

செய்யும் தொழிலின் மீதான ஆர்வமும் ஈடுபாடும்தான், அடுத்தகட்டத்துக்கு நம்மை உயர்த்துகிறது. சமீபத்தில் சென்னை, பொன்னேரி அடுத்துள்ள உப்பளம் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் ராஜா, உதிரிபாகங்களாகப் பிரித்துப் போடப்பட்ட பைக்கின் இன்ஜினை, கண்ணைக் கட்டிக் கொண்டு இணைத்துள்ளார். லிம்கா புத்தக சாதனைக்காக செய்யப்பட்ட இந்த முயற்சியைக் கேள்விப்பட்டு, அவரைச் சந்தித்தோம்.

இருட்டு மெக்கானிக்!

''எட்டாவது வரைக்கும்தான் சார் படிச்சேன். அதுக்கு மேல படிப்பு ஏறலை. என் அண்ணன் ஒரு மெக்கானிக். தொழில் கத்துக்கலாம்னு 13 வயசுல ஸ்பேனரைக் கையில எடுத்தேன். பைக் மெக்கானிக் வேலையைத் தவிர, வேற எந்தத் தொழிலும் எனக்குத்  தெரியாது. 'வாலி’ படத்துல அஜித், யமஹா பைக் ஓட்டுவார். அது, அவரே ரெடி பண்ணின பைக். அதிலிருந்து யமஹா பைக் மேல தனிப் பாசம். யமஹா பற்றி 360 டிகிரி தெரிஞ்சுக்கணும்னு வெறியோட வேலை செஞ்சேன். இப்போ, கண்ணைக் கட்டிக்கிட்டு வேலை செய்யும் அளவுக்குக் கத்துக்கிட்டேன்.

இருட்டு மெக்கானிக்!

நம்ம தொழில்ல வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. கண்ணைக் கட்டிக்கிட்டு பைக் இன்ஜினை ஃபிட் பண்ணலாம்னு முடிவுசெய்தேன். ரெண்டு தடவை செஞ்சு பார்த்தேன். முடியும்னு தோணுச்சு. நண்பர்கள்கிட்ட சொன்னேன். 'இதுக்கு முன்னாடி யாரும் இந்த மாதிரி பண்ணின மாதிரி தெரியலை. லிம்கா ரெக்கார்டுக்கு அனுப்பலாம்’னு ஊக்கப்படுத்தினாங்க.

யமஹா RX100 பைக்கில்தான் இந்த முயற்சியை முதலில் பண்ணினேன். மற்ற பைக் இன்ஜினைவிட, யமஹா இன்ஜின் கொஞ்சம் கஷ்டமானது.

போன மார்ச் 11-ம் தேதி, பொன்னேரி அரசு கலைக் கல்லூரியில், அரசு அதிகாரிங்க முன்னாடி இந்த முயற்சியை ஆரம்பிச்சேன். கைக்கு எட்டும் தூரத்துல, எந்த இடத்துல என்ன பொருள் இருக்குன்னு நல்லா ஞாபகம் வெச்சிருந்தேன். யமஹாவுல 'கியர் ஷிஃப்டர்’ ஃபிட் பண்றது ரொம்ப சிரமம். சாதாரணமா செஞ்சாலே ரொம்ப நேரம் இழுக்கும். அதுல கியர் செலக்ட்டர் சரியா மாட்டுறது ரொம்ப சிரமம்; இதுக்கே ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. ஸ்க்ரூ, போல்ட், நட் எல்லாம் கொஞ்சம் ஈஸியா ஃபிட் பண்ணிட்டேன்.

கடைசியா இன்ஜின் சிலிண்டர் ஃபிட் பண்றதுக்குத்தான் ரொம்ப சிரமப்பட்டேன். ரொம்பக் கவனமா, நிதானமா செஞ்சேன். மூணு மணி நேரத்தில் முடிக்க வேண்டியதை, 2.45 மணி நேரத்துல முடிச்சிட்டு, பைக்கை ஸ்டார்ட் செஞ்சேன்... யமஹா RX100 பைக்கோட 'டுப் டுப்’ சவுண்ட் கேட்டதும்தான் உயிர் வந்தது. ஏன்னா, மெக்கானிசஸத்தைத் தவிர, வேற எதுவும் தெரியாது. அதுதான் என் உயிர்!'' என்று சிலிர்க்கவைக்கிறார் இருட்டு ராஜா.