Published:Updated:

எக்ஸென்ட்.... வசதிகளில் எக்ஸெலன்ட்!

விகடன் விமர்சனக்குழு

தமிழ் படங்கள்: கே.கார்த்திகேயன்

செப்டம்பர் 23, 1998 அன்று ஹூண்டாய் நிறுவனம் சான்ட்ரோவுக்கு என்ட்ரி கொடுத்தபோது, ஹேட்ச்பேக் ரசிகர்கள் இந்தளவு சான்ட்ரோவைக் கொண்டாடுவார்கள் என ஹூண்டாய் எதிர்பார்த்திருக்காது. 14 அக்டோபர் 1999- ஆக்ஸென்ட்டை ரிலீஸ் செய்தபோதும், செடான் விரும்பிகள் ஆக்ஸென்ட்டை வெற்றிப் படியேற்றி, ஹூண்டாயைத் திக்குமுக்காட வைத்தார்கள். பின்பு, ஹூண்டாய் 'தொட்டது எல்லாம் துலங்கிவிடும்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஐ10, ஐ20, கிராண்ட் ஐ10 என வரிசையாக வெற்றி கார்கள் களம் இறங்கி, அதை நிரூபிக்கவும் செய்தன. அதே வேகத்தில் லேட்டாகாமல்... லேட்டஸ்ட்டாக, 4 மீட்டருக்குட்பட்ட 'எக்ஸென்ட்’ என்ட்ரி லெவல் செடான் மார்க்கெட்டுக்குள் நுழையத் தயாராகிவிட்டது. மாருதி ஸ்விஃப்ட் டிசையர், ஹோண்டா அமேஸ், வரவிருக்கும் டாடா ஜெஸ்ட் கார்களுக்குப் போட்டியாகப் புறப்பட்டிருக்கும் எக்ஸென்ட்டை, ஹைதராபாத் நெடுஞ்சாலைகளில் ஃபர்ஸ்ட் டிரைவ் செய்தோம்.

எக்ஸென்ட்.... வசதிகளில் எக்ஸெலன்ட்!

டிஸைன்

கிராண்ட் ஐ10 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதாலோ என்னவோ, முன் பக்கம் கிரில்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அச்சு அசலாக கிராண்ட் ஐ10-ன் எல்டர் பிரதர் போலவே இருக்கிறது எக்ஸென்ட். உங்களுக்குக் கழுகுப் பார்வை என்றால், கிரில்லைச் சுற்றியுள்ள சில்வர் க்ரோம் ரிங் எடுப்பாக இருப்பதைக் கவனிக்கலாம். ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், ஓகே ரகம். பார்க்கிங் செய்யும்போது, கீறல்களைத் தவிர்ப்பதற்காக காரின் இருபுறங்களிலும், பக்கவாட்டில் ரப்பர் பீடிங் கொடுத்திருப்பது, ஸ்போர்ட்டி லுக்காகவும் இருக்கிறது. காரின் ரூஃப் பகுதி, ஸ்மூத்தாக அருவி மாதிரி அப்படியே பின் பக்க பூட் வழியாக முடிவடைவது, சில நேரங்களில் புதிய டிசையரை நினைவூட்டுகிறது. டெயில் லைட்டுகள் எளிமையாகவும், இரவு நேரங்களில் ரிவர்ஸ் எடுக்கும்போது, நல்ல வெளிச்சத்தையும் அளிக்கின்றன. விலை குறைந்த வேரியன்ட்டைத் தவிர்த்து, மற்றவற்றில் ரியர்வியூ மிரர்களிலேயே இண்டிகேட்டர் விளக்குகள் ஒளிர்வது, பிரீமியம் செடான் கார்களில் இருக்கும் வசதி. எக்ஸென்ட்டின் டிஸைன் மனதில் தங்குவதற்கு முக்கியமான விஷயமாக, வீல்களைச் சொல்லலாம். 15 இன்ச் அலாய் வீல்கள், செம ஸ்போர்ட்டியாகவும், ஸ்டைலிஷ் ஆகவும் இருக்கின்றன. இதை 'டைமன்ட் கட் அலாய் வீல்கள்’ என்று அழைக்கச் சொல்கிறது ஹூண்டாய். எடையும் ஓரளவு ஓகே என்பதால், பில்டு குவாலிட்டியில் கிராண்ட் ஐ10-ஐவிட ஒரு படி மேலே இருக்கும். வெளியே வலப்பக்கம் VTVT பேட்ஜ் இருந்தால் பெட்ரோல்; CRDi பேட்ஜை வைத்து டீசல் என்று இனம் கண்டுகொள்ளலாம். எக்ஸென்ட்டின் வீல் பேஸ் - கிராண்ட் ஐ10-ன் அதே 2,425 மிமீ. மொத்தத்தில், ஹூண்டாய் டிஸைனர்கள், கிராண்ட் ஐ10 காரை வடிவமைக்கும்போதே, அடுத்த செடான் காருக்குத் திட்டம் தீட்டி, எக்ஸென்ட்டை வடிவமைத்து இருப்பார்கள்போலத் தெரிகிறது.

எக்ஸென்ட்.... வசதிகளில் எக்ஸெலன்ட்!

உள்ளே

உங்களுக்கு கிராண்ட் ஐ10-ன் இன்டீரியர் பிடித்திருந்தால், நிச்சயம் எக்ஸென்ட்டின் உள்பக்கமும் பிடிக்கும். காரின் உள்ளே நுழைந்ததுமே, நாம் ஏற்கெனவே சொன்னதுபோல் கிராண்ட் ஐ10 காருக்குள்ளே வந்துவிட்டோமோ என்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஸ்டீயரிங்கை நமக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்த உடனேயே, காரைக் கிளப்ப வேண்டும்போல் தோன்றுகிறது. கீ-லெஸ் என்ட்ரி ஆப்ஷனோடு, பட்டன் ஸ்டார்ட் வசதியும் எக்ஸென்ட்டில் உண்டு. ஒரு ஹேட்ச்பேக் காரின் வீல்பேஸ்தான் என்பதால், பேனட் முன்புறம் நீளாமல், சாலை நன்றாகத் தெரிகிறது. உயரம் குறைவானவர்களும் ஓட்டும் வகையில் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதியும் இருப்பதால், கவலைப்பட வேண்டியது இல்லை.

ஏ.சி-யை ஆன் செய்ததும், சில்லென்று ஆகிவிடுகிறது கேபின். ரியர் ஏ.சி வென்ட் ஆப்ஷன் உண்டு என்பதால், பின் பக்கம் உள்ளவர்கள், கோடைக் காலத்திலும்கூட ஓரளவு ஜிலுஜிலுவெனப் பயணிக்கலாம். ஆனால், இது அவ்வளவு பவர்ஃபுல்லாக இல்லை. மேலும், ஏ.சி டனல் நீண்டிருப்பதால், பின் பக்க சீட்டில் மூன்று பேர் அமர்ந்தால், நடுப் பயணி கொஞ்சம் திணறித்தான் பயணிக்க வேண்டும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், லக்ஸ¨ரி லுக்கில் இருக்கிறது. பெட்ரோல் வேரியன்ட்டில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் உண்டு. டீசல் வேரியன்ட் என்றால், ரிவர்ஸ் கியர் மேல்நோக்கியும், பெட்ரோல் என்றால், சாதாரண கார்களில் உள்ளதுபோலவும் இருக்கிறது. கதவுகள் பெரிதாக இருப்பதால், பருமனானவர்கள்கூட எளிதாக உள்ளே போய்வர முடிகிறது.

எக்ஸென்ட்.... வசதிகளில் எக்ஸெலன்ட்!

எக்ஸென்ட்டில் எக்ஸெலன்ட்டான விஷயம் - வசதிகள்தான். இதன் டாப் வேரியன்ட்டான SX-ல் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்ஸார், ரியர் ஏ.சி வென்ட், ரியர்வியூ கேமரா, கீ-லெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப், சென்ட்ரல் லாக்கிங், எலெக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர்ஸ், காரைச் சுற்றிலும் ஆங்காங்கே பாட்டில் ஹோல்டர்கள், ஸ்டோரேஜ் பாக்ஸ்கள், சென்டர் ஆர்ம் ரெஸ்ட்டிலேயே கப் ஹோல்டர்கள், ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல் என்று வசதிகளை அள்ளி இறைத்திருக்கிறார்கள். மேலும், 1 ஜிபி மெமரிகொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம் நல்ல இசை அனுபவத்தைக் கொடுக்கிறது. இதில் ப்ளூ-டூத் வசதியும் உண்டு. பூட் ஸ்பேஸ் - முறையே அமேஸிலும், டிசையரிலும் 400 மற்றும் 316 லிட்டர் இடவசதியுடன் ஒப்பிடும்போது, எக்ஸென்ட்டில் 407 லிட்டர் இடவசதி இருக்கிறது. இது, இந்த செக்மென்ட்டில் அதிகம். ஃபைனலாக வசதிகள் மற்றும் இன்டீரியரில் ஏரியாவில், தேர்தல் நேரத்து அரசியல்வாதிகள் மாதிரி வசதிகளை வாரி வழங்குகிறது எக்ஸென்ட்.

இன்ஜின்

1.1 லிட்டர் 3 சிலிண்டர்கொண்ட CRDi டீசல் இன்ஜின், 12. கப்பா கொண்ட VTVT பெட்ரோல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்களில் வருகிறது எக்ஸென்ட். 'நான் அப்படித்தான் வைப்ரேஷன் ஆவேன்’ என்று ஆரம்பத்தில் அடம்பிடிக்கிறது CRDi டீசல். ஆனால், கொஞ்சூண்டு ஆர்பிஎம் தாண்டிய பிறகு அதிர்வுகள் அரவமற்றுப் போகின்றன. அமேஸின் 1.5 லிட்டரைவிடவும், டிசையரின் 1.3 லிட்டரைவிடவும் சிசி குறைவாக இருந்தாலும், லோ ரேஞ்சில் எக்ஸென்ட்டின் திராட்டில் ரெஸ்பான்ஸ் இரண்டு கார்களுக்கும் இணையானதாகவே இருக்கிறது. காரணம் - எக்ஸ்ட்ரா டார்க். 18.4 kgm கொண்ட டார்க், சிட்டி டிராஃபிக்கில் புதுந்து விளையாட உதவுகிறது. கிராண்ட் ஐ10-ல் இருக்கும் அதே இன்ஜினை செடான் காருக்காக கொஞ்சம் ரிஃபைன் செய்திருக்கிறது ஹூண்டாய். அதாவது, 70 bhp-யும் 16.3 kgm டார்க்கும்கொண்ட கிராண்டைவிட 1 bhp அதிகமாகவும், 2.1 kgmடார்க்கும் எக்ஸ்ட்ராவாக வெளிப்படுவதால், பிக்-அப் பிரமாதம். ஆனால், மிட் ரேஞ்சில் பெரிதாக 'வ்வ்ர்ர்ரூம்’ பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்க முடியவில்லை. ஆளரவமற்ற ஹைதராபாத் சாலைகளில், எக்ஸென்ட்டை கொஞ்சம் அதிர்வுகளோடு, கிட்டத்தட்ட மணிக்கு 170 கி.மீ வேகம் வரை விரட்ட முடிந்தது.

இதுவே நான்கு சிலிண்டர்கள்கொண்ட 1.2 கப்பா பெட்ரோல் இன்ஜினில், ஒரு மென்மைத் தன்மை தெரிந்தது. நெடுஞ்சாலையில் 83 bhp, பரபரவென்று தன் வேலையைக் காட்டுகிறது. 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸும் இதற்கு ஏற்றவாறு இருக்கின்றன. நெடுஞ்சாலையில் இதன் டாப் ஸ்பீடைச் சோதனை செய்தபோது, அதிர்வுகளற்று 175 கி.மீ-யைக் கடந்து சென்றது எக்ஸென்ட்.

எக்ஸென்ட்.... வசதிகளில் எக்ஸெலன்ட்!

ஓட்டுதல் தரம், கையாளுமை

பொதுவாக ஃபோர்டு, ஃபியட், மாருதி அளவுக்கு ஹூண்டாயில் ஓட்டுதல் தரம் இருக்காது என்ற குற்றச்சாட்டை ஓரளவு பொய்யாக்கி இருக்கிறது எக்ஸென்ட். டாப் ஸ்பீடில் நம்பிக்கையுடன் பயணிக்க முடிகிறது. திராட்டில் ரெஸ்பான்ஸ் லேசாகவும் வேகமாகவும் இருப்பதால், நம் சொல்படி நகர்கிறது எக்ஸென்ட். கிராண்ட் ஐ10 போலவே ஓட்டுதவற்கு பெப்பியாகவும், ஓவர்டேக் செய்யும்போது கையாளுவதற்கு எளிமையாகவும் உள்ளது. நான்காவது கியரில்கூட 100 கி.மீ வேகம் வரை செல்ல முடியும்படி கியர்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டிருப்பதால், சிட்டி டிராஃபிக்கில் அடிக்கடி கியரை மாற்றச் சொல்லி தொந்தரவு கொடுக்கவில்லை எக்ஸென்ட். கிராண்ட் ஐ10-ல் இருக்கும் அதே சஸ்பென்ஷன் இங்கேயும் ஷிஃப்ட் ஆகியிருக்கிறது. முன் பக்கம் இண்டிபென்டன்ட் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட், பின் பக்கம் டார்ஷன் பீம் ஆக்ஸில், ஸ்பீடு பிரேக்கர்களில் அசால்ட்டாக எகிறிக் குதிக்க உதவுகிறது. ஏபிஎஸ் பிரேக்குகள் ஓகே ரகம். ஒரு செடான் காருக்கே உரிய டயர்கள், ஓரளவு கிரிப்பைத் தருகின்றன.

வடிவம் 

(நீளம் 3,995 மிமீ

(அகலம் 1,660 மிமீ

(உயரம் 1,520 மிமீ

(வீல் பேஸ் 2,425 மிமீ

(இன்ஜின்

(டிஸ்ப்ளேஸ்மென்ட்

1,197 சிசி (பெ)

1,120 சிசி (டீ)

(பவர்
83 bhp@6,000rpm (P)

(டார்க்

18.4 kgm@2,500rpm(D)

(கியர் பாக்ஸ் 5 ஸ்பீடு மேனுவல் (பெ/டீ) 4 ஸ்பீடு Auto (பெ)

பிரேக்: முன்/பின் வென்டிலேடட் டிஸ்க்/டிரம்

மைலேஜ்

கியர்பாக்ஸ் முதல் கிளட்ச் வரை கிட்டத்தட்ட எல்லாமே கிராண்ட் ஐ10-ன் காப்பிகேட் என்பதால், நிச்சயம் ஒரு ஹேட்ச்பேக் காரின் மைலேஜ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ARAI விதிமுறையின்படி எக்ஸென்ட் டீசல், மைலேஜ் 24.4 kmpl தரும் என்கிறது ஹூண்டாய். முழுமையான டெஸ்ட் டிரைவ் செய்யாததால், ஆட்டோமேட்டிக், பெட்ரோல் எக்ஸென்ட்டின் மைலேஜ் விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.