Published:Updated:

வருகிறது ஹோண்டா மொபிலியோ

Vikatan Correspondent

எர்டிகாவின் எதிரி தொகுப்பு: சார்லஸ்

டுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது ஹோண்டா. நியூ சிட்டி மற்றும் அமேஸ் கார்களைத் தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, இதுவரை இந்தியாவில் தான் கால் பதிக்காத எம்பிவி மார்க்கெட்டுக்குள் நுழைய இருக்கிறது ஹோண்டா. மொபிலியோ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் ஹோண்டாவின் புதிய எம்பிவி, ஜூலை மாதம் விற்பனைக்கு வருகிறது.

வருகிறது ஹோண்டா மொபிலியோ

மாருதி எர்டிகா காருடன் போட்டி போட இருக்கும் மொபிலியோ, ஹோண்டாவுக்கு வெற்றியைத் தேடித் தருமா? 

இந்தோனேசியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது மொபிலியோ.

டிஸைன்

பிரியோ, அமேஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் மொபிலியோவும் தயாரிக்கப்படுகிறது. அதனால், காரின் முன் பக்கத்தை சற்றுத் தொலைவில் இருந்து பார்த்தால் மொபிலியோ, அமேஸ் போலவே தெரிகிறது. ஆனால், அருகில் வந்தால் சின்னச் சின்ன மாற்றங்களைக் காண முடியும். ஹெட்லைட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதோடு, முன் பக்க கிரில்லில் பெரிய குரோம் பட்டை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. பனி விளக்குகள் அமைந்திருக்கும் ஏரியாவில் கறுப்பு வண்ண பிளாஸ்டிக் அலங்காரம் கவர்கிறது. மற்றபடி முன் பக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.

எம்பிவி காரான மொபிலியோவின் பின் பக்கத்தில்தான், ஹோண்டாவின் டிஸைனர்கள் தங்களின் அத்தனை திறமையையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். பின் பக்கம் ஒரு முழுமையான எம்பிவி காருக்கான தோற்றத்துடன் இருக்கிறது. பின் பக்க விளக்குகள் மிகவும் உயரமாக வைக்கப்பட்டிருப்பதோடு, வளைவு நெளிவுகளுடன் டிஸைன் செய்யப்பட்டிருக்கும் பின் பக்க விண்ட் ஸ்கிரீன் டிஸைன் கவர்கிறது. பெரிய 15 இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பது, பெரிய காருக்கான தோற்றத்தை இயல்பாகவே தந்துவிடுகிறது. பிரியோ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் மொபிலியோ, பிரியோவைவிட 776 மிமீ நீளமானது. அதேசமயம், ஹோண்டா அமேஸைவிட மொபிலியோவின் வீல்பேஸ் 245 மிமீ அதிகம். பொதுவாக, சின்ன கார்கள் தயாரிக்கப்படும் பிளாட்ஃபார்மில், அதிக வீல்பேஸ் கொண்ட கார்களைத் தயாரிக்கும்போது கட்டுமானத்தின் கடினத்தன்மை பாதிப்படையும். ஆனால், பில்டு குவாலிட்டியில் எந்தக் குறையும் இல்லாமல், அதற்கு ஏற்றதுபோல் டிஸைன் செய்திருப்பதாகச் சொல்கிறது ஹோண்டா.

மொபிலியோவை விட அதிக வீல்பேஸ் கொண்ட எர்டிகாவில் (2740 மிமீ), காரின் கட்டுமான கடினத்தன்மைக்கு ஏதுவாக, காரின் மேற்கூரையில் காரின் உறுதித்தன்மை குலையாமல் இருக்க, கூடுதல் பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், மொபிலியோவில் அதுபோல இல்லை. அதற்குப் பதில் ரோல் ரெசிஸ்டென்ட் சஸ்பென்ஷன் மற்றும் பவர்ஃபுல் பிரேக்குகளுடன் மொபிலியோவை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஹோண்டா. மொபிலியோவின் அனைத்து வேரியன்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக் கட்டாயமாக இருக்கும்.

வருகிறது ஹோண்டா மொபிலியோ

உள்ளே

அமேஸைவிட 245 மிமீ அதிக வீல்பேஸ் கொண்டிருப்பதால், காருக்குள் அதிக இடவசதி இருக்கிறது. 'மிஷின் மினிமம்; மேன் மேக்ஸிமம்’ என்ற கொள்கைப்படி, காருக்குள் இட வசதியை அதிகரிப்பதற்காக காரின் டேஷ் போர்டு, விண்ட் ஸ்கிரீனை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இருக்கைகளும் இடத்தை அடைக்காத வகையில், ஸ்லிம் சீட்டுகளாகப் பொருத்தப்பட்டுள்ளன. காரின் முன் பக்க இருக்கைகளில் ஆறு அடி உயரமானவர்களும் வசதியாக உட்காரும் அளவுக்கு இடம் இருப்பதோடு, பின் பக்க இருக்கைகளில் இடவசதி தாராளம். ஆனால், மூன்றாவது வரிசை இடவசதி எர்டிகாவைவிட மொபிலியோவில் வசதியாக இல்லை. கதவுகள் பெரிதாக இருப்பதால், காருக்கு உள்ளே போவதும், வெளியே வருவதும் ஈஸியாக இருக்கிறது. ஆனால், இருக்கைகள் தாழ்வாக வைக்கப்பட்டிருப்பது, நீண்ட நேரம் உட்காரும்போது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

டேஷ்போர்டும் பெரிதாக ஈர்க்கவில்லை. காரணம், சின்னச் சின்ன மாற்றங்களுடன் பிரியோவின் அதே டேஷ்போர்டையே இந்த எம்பிவி காரிலும் பொருத்தியிருக்கிறார்கள். தற்போது இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படும் மொபிலியோவில், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல்கூட இல்லை. ஆனால், இந்திய மாடலில் டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், ப்ளூ-டூத், லெதர் சீட், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி போன்ற வசதிகள் சேர்க்கப்படும்.

வருகிறது ஹோண்டா மொபிலியோ

இன்ஜின்

பிரியோ, அமேஸ் பிளாட்ஃபார்ம்தான் என்றாலும், மொபிலியோவின் இன்ஜின், சிட்டியில் இருந்து இடம் மாறியிருக்கிறது. ஹோண்டா சிட்டியில் இருக்கும் அதே 1496 சிசி பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 118 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகபட்ச டார்க் 14.8 kgm. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட மொபிலியோவில், காரின் அதிக எடை காரணமாக, ஷார்ட் கியர் ரேஷியோ செட்டிங் வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தவுடனேயே  சட்டென சீறுகிறது மொபிலியோ. இதனால், உடனடியாக அடுத்தடுத்த கியர்களுக்கு மாற முடிகிறது. அதே சமயம், சீக்கிரத்தில் ஐந்தாவது கியரைத் தொட்டு விடுவதால், ஆறாவது கியர் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

நெடுஞ்சாலையில் 120 கி.மீ வேகத்தை மிக விரைவில் தொட்டுவிடுகிறது மொபிலியோ. இதன் செயல்பாடு, மிகவும் பவஃபுல் இன்ஜின் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. 1,500 ஆர்பிம்-க்கு மேல் தாண்டிவிட்டால், திராட்டிலை அழுத்தி மிதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசையைக் கிளப்புகிறது. ஆனால், பிரியோ, அமேஸைப் போலவே மொபிலியோவிலும் வெளிச் சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

பெரிய 15 இன்ச் வீல், 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அதிகமான வீல்பேஸ் காரணமாக, ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கிறது. சின்னப் பள்ளங்களில் சஸ்பென்ஷன் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருந்தாலும், பெரிய மேடு பள்ளங்களை சிறப்பாகவே சமாளிக்கிறது மொபிலியோ. மஹிந்திரா ஸைலோவின் அலுங்கல் குலுங்கல் பயணம் எல்லாம் மொபிலியோவில் இல்லை.

நீளமான கார் என்று, பார்த்தால்தான் தெரியும். ஓட்டும்போது தெரியவில்லை. நகர டிராஃபிக் நெருக்கடிகளுக்குள் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு மிகவும் ஈஸியான காராக இருக்கிறது மொபிலியோ.

வருகிறது ஹோண்டா மொபிலியோ

முதல் தீர்ப்பு

ஜூலை மாதம் மொபிலியோ இந்தியாவுக்கு வரும்போது, நிச்சயமாக இந்தியாவின் மோஸ்ட் வான்டட் காராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விலையைப் பொறுத்தவரை, ஹோண்டா கொஞ்சம் 'கெத்’தை மெயின்டெயின் செய்வதற்காக, எர்டிகாவைவிட 50,000 ரூபாய் அதிகமாக விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது. பெட்ரோல் இன்ஜின் மட்டும் அல்லாமல், அமேஸ் மற்றும் சிட்டியின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடனும் விற்பனைக்கு வருகிறது மொபிலியோ. அதேபோல், பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உண்டு. பெர்ஃபாமென்ஸிலும், இடவசதியிலும் சிறந்த காராக இருந்தாலும், காரின் டேஷ்போர்டு மிகவும் பேஸிக்காக இருக்கிறது. மூன்றாவது வரிசையில் இடவசதி அதிகமாக இல்லை என்பதோடு, வெளிச்சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது.

ஆனால், இந்திய வாடிக்கையாளர்கள் எம்பிவி கார்களில் எதிர்பார்ப்பது 7 சீட்டுகள், அதிக மைலேஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸ். இது அனைத்திலும் முதலில் முன் நிற்கிறது மொபிலியோ.

வருகிறது ஹோண்டா மொபிலியோ