Published:Updated:

ப்ளாக்ல டீசல் வேணாம்!

Vikatan Correspondent

அனுபவம் பேசுகிறதுமுருகன், ஓவியம்: கண்ணா

சென்னை, வடபழனியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன், ப்ளாக் மார்க்கெட்டில் டீசல் வாங்கி ஏமாந்த கதை..

டீக்கடையில டீ-யையே ஒன் பை டூ-வா போட்டு வாங்கிக் குடிக்கிற மிடில் கிளாஸ் டிரைவருங்க நான். என் வாழ்க்கையில நடந்த டீசல் ஏமாற்றம், எல்லாருக்கும் ஒரு பாடமா அமையணும். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இப்போ என் இரண்டு நண்பர்களையும் இழந்து நிக்கிறேன். நான், ஐஷர் 407 ட்ரக் வெச்சிருக்கேன். அடிக்கடி மும்பை, கல்கத்தா ட்ரிப் அடிப்பேன். 15 நாளைக்கு ஒரு ட்ரிப் அடிச்சா, 7,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எங்கள மாதிரி டிரைவருங்களுக்கு அதிகமா செலவாகுறதே டீசல்தான். அதுனால, போற வழியில ப்ளாக்ல டீசல் வாங்குற பழக்கம் எங்களுக்கு உண்டு. அதுல ஒரு ஆயிரம் ரெண்டாயிரம்னு மிச்சம் பிடிப்போம். அன்னைக்கு சென்னையிலருந்து காரைக்குடிக்கு ட்ரிப் அடிக்கிறதுக்காகக் கிளம்பறப்போ, நண்பன் ஒருத்தன், 'மச்சான், ப்ளாக்ல டீசல் இங்கேயே ஃபில் பண்ணிட்டுப் போறீயா? நம்ம பய ஒருத்தன் இருக்கான். 50 ரூபா டீசல் 30 ரூபாய்க்குத் தரானாம்டா!''னு சொல்லி, ஒருத்தர்கிட்ட கூட்டிட்டுப் போனான். அப்போ டீசல் விலை 50 ரூபாதான். நானும் ஆசைப்பட்டு, இன்னும் ரெண்டு நண்பர்களையும் கூட்டிட்டுப் போலாம்னு ப்ளான் பண்ணேன். அந்த ஆளு பேரு குமரேசன். ''ஜெனரேட்டர் பிரேக் டவுன்... அதுல இருந்துதான் உங்களுக்கு டீசல் ஏற்பாடு பண்ணியிருக்கேன்''னு நாணயமா பேசி, ஆளுக்கு 150 லிட்டர் ஆர்டர் எடுத்தாரு. ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் 4,500 ரூபாயையும், நாலு பெரிய கேனையும் வாங்கிட்டு, எங்களை சூளைமேட்ல ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாரு.

ப்ளாக்ல டீசல் வேணாம்!

வாசல்லயே காத்திருக்கச் சொல்லிட்டு, கோயில் பக்கத்துல உள்ள சந்துக்குள்ள போன மனுஷன், ஒரு மணி நேரமாகியும் வரவே இல்லை. அப்போ, குமரேசன் போன பக்கமா இருந்து, என்னோட ஃப்ரெண்டு ஆட்டோ டிரைவர் ஒருத்தர் வந்தாரு. நாங்க விஷயத்தைச் சொல்லவும், 'என்னண்ணே இப்படி ஏமாந்துட்டீங்களே... இங்க குமரேசன்னு யாரும் கிடையாது’னு எங்களைத் திட்டிக்கிட்டே, குமரேசன் போன இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாரு.

சத்தியமா சொல்றேங்க... நீங்க நம்பமாட்டீங்க... அவர் ஏதோ சந்துக்குள்ள இருக்கிற வீட்டுக்குள்ளதான் நுழைஞ்சிருக்காருன்னு பார்த்தா... சந்துக்குப் பின்னால உள்ள அந்த இடம், வடிவேலு சினிமாவுல வர்ற வெட்ட வெளியாட்டம் இருந்துச்சு. அடப் பாவிகளா... சவாரிக்குக் கிளம்பற நேரத்துல, பார்ட்டிகிட்ட வாங்குன காசையும் இழந்துட்டு, டீசல் கேனையும் பறிகொடுத்துட்டு, நண்பர்கள்கிட்டயும் திட்டு வாங்கிட்டு... கடவுளே... இனிமே நான் எதுக்கும் ஆசைப்பட மாட்டேம்ப்பா!''