Published:Updated:

பஜாஜின் சூப்பர் குடும்பம்!

Vikatan Correspondent

BAJAJ DISCOVER 150F VS BAJAJ DISCOVE3R 150S தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பஜாஜின் டிஸ்கவர் குடும்பத்தில், இன்னும் இரண்டு புதிய உறுப்பினர்கள். டிஸ்கவர் 150 F, டிஸ்கவர் 150S என இந்த இரண்டு பைக்குகளும்தான், டிஸ்கவர் குடும்பத்திலேயே சக்தி வாய்ந்தவை. முன்பக்கம் ஃபேரிங் கொண்ட 150F பைக்கும், நேக்கட் பைக் போல இருக்கும் 150S பைக்கும் டிஸ்கவர் பிராண்டின் பெயரைக் காப்பாற்றுமா?

பஜாஜின் சூப்பர் குடும்பம்!

இரண்டு புதிய டிஸ்கவர் பைக்குகளை யார் பார்த்தாலும், 'இது டிஸ்கவர்தானே?’ என்பார்கள். அந்த அளவுக்கு ஃபேமிலி டிஸைன் பின்பற்றப் பட்டுள்ளது. இவற்றில், டிஸ்கவர் 150F பைக்கில் மட்டும் முன்பக்கம் ஃபேரிங் இருப்பதால், பார்க்க இன்னும் யூத்ஃபுல்லாக, ஸ்போர்ட்டியாக இருக்கிறது. ஆனால், இந்த ஃபேரிங், பெட்ரோல் டேங்க்குடன் இணையும் விதம் தரமானதாக இல்லை. 150S பைக், பார்க்க மற்ற டிஸ்கவர் பைக்குகளைப்போல சாதாரணமாக இருக்கிறது.

150 F பைக்கில் அனலாக் ஸ்பீடோ மீட்டரும், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், எரிபொருள் அளவு, சர்வீஸ் ரிமைண்டர், கடிகாரம் ஆகியவை டிஜிட்டலாகவும் இருக்கின்றன. 150S பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பார்க்க சாதாரணமாக, அனலாக் டிஸைனுடன் இருக்கிறது. இரண்டு பைக்குகளின் சுவிட்ச்களுடைய தரம், வழக்கமான பஜாஜ் தரத்துடன் இருக்கின்றன. ஹெட்லைட்டுகள் இரவில் நல்ல வெளிச்சத்தைத் தருகின்றன.

பஜாஜின் சூப்பர் குடும்பம்!

இரண்டு பைக்குகளிலும் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க்தான். தொடைகளை சப்போர்ட் செய்யும் விதத்தில் டேங்க் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 150F பைக்கில் ஸ்டெப்டு LED டெயில் லைட்ஸ் இருக்கிறது. இது, 150S பைக்கில் இல்லை. 10 ஸ்போக் அலாய் வீல்களும், இன்ஜின், எக்ஸாஸ்ட் ஆகியவையும் கறுப்பு வண்ணத்திலும் இருக்கின்றன. பைக்குகளின் ஒட்டுமொத்தக் கட்டுமானத் தரம் நன்றாகவே இருக்கிறது.

டிஸைனில் சின்ன வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டு பைக்குகளிலுமே ஒரே சக்தியை வெளியிடும் இன்ஜின்கள்தான். 144.8 சிசி, ஏர்கூல்டு, DTS -i இன்ஜின், கார்புரேட்டர் உதவியுடன் சுவாசிக்கிறது. ஆட்டோ சோக் வசதியுடன் வரும் இந்த இன்ஜின், 8,500 ஆர்பிஎம்-ல் 14.3 bhpசக்தியையும், 1.3 kgm டார்க்கை 6,500 ஆர்பிஎம்-மிலும் அளிக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்கொண்ட இந்த பைக்குகளின் கிளட்ச்சின் தரமும் நன்றாக இருக்கின்றன.

பஜாஜின் சூப்பர் குடும்பம்!
பஜாஜின் சூப்பர் குடும்பம்!

இன்ஜின் ரெவ் ஆகும் விதம், செம ஸ்மூத். சிட்டி டிராஃபிக்குக்கு ஏற்றவாறு, திராட்டில் ரெஸ்பான்ஸும், குறைந்த ஆர்பிஎம்-மில் சக்தி வெளிப்படும் விதமும் அருமை. நெடுஞ்சாலையில் அதிகபட்சம் மணிக்கு 112 கி.மீ வரை இந்த பைக்குகள் செல்கின்றன. 0-60 கி.மீ வேகத்தை இரண்டுமே 5.29 விநாடிகளில் அடைகின்றன.

இந்த பைக்குகளின் முன் பக்கம், டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் கேஸ் சார்ஜ்டு மோனோ ஷாக் சஸ்பென்ஷனும், ரெக்டாங்குலர் ஸ்டீல் ஸ்விங் ஆர்மும் இருக்கின்றன. பைக்கின் எர்கனாமிக்ஸ் நன்றாக இருக்கிறது. தட்டையான இருக்கைகள் வசதியாகவே இருக்கின்றன. பிரேக்ஸ் நல்ல உணர்வைக் கொண்டுள்ளன. சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட நல்ல கையாளுமையையும், ஓட்டுதலையும் கொண்டிருக்கிறது.

பஜாஜின் சூப்பர் குடும்பம்!

டிஸ்கவர் 150S, டிஸ்கவர் 150 F பைக்குகள் நகர டிராஃபிக் சூழலில் லிட்டருக்கு 45.3 கி.மீ மைலேஜும், நெடுஞ்சாலையில் 49.2 கி.மீ மைலேஜும் அளிக்கின்றன. ஒரே சமயத்தில் நல்ல பெர்ஃபாமென்ஸையும், மைலேஜையும் அளிக்கும் பைக்தான் உங்கள் தேவை என்றால், டிஸ்கவர் 150F, 150S பைக்குகளை வாங்கலாம்!

பஜாஜின் சூப்பர் குடும்பம்!