Published:Updated:

யமஹா நெக்ஸ்ட் ஸ்டெப்!

Vikatan Correspondent

YAMAHA FZ-S V2.0 VS YAMAHA FZ-S தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

முதன்முதலாக யமஹா FZ-S பைக் அறிமுகமாகி ஆறு ஆண்டுகள் கழித்து, இப்போது விற்பனைக்கு வந்துள்ளது FZ V2.0 எனும் புதிய மாடல். கடந்த ஆறு ஆண்டுகளாக FZ-S பைக், 150சிசி செக்மென்ட்டில் இருக்கும் பல போட்டியாளர்களைத் தோற்கடித்து, ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் பெஞ்ச் மார்க் பைக்காக இருக்கிறது. தற்போது ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன், சக்தி கொஞ்சம் குறைக்கப்பட்டு அறிமுகமாகியுள்ள புதிய FZ V2.0பைக்கையும், பழைய FZ-S பைக்கையும் ஓட்டிப் பார்த்தோம்.

யமஹா நெக்ஸ்ட் ஸ்டெப்!

யமஹாவின் புதிய FZ-S V2.0 , பார்ப்பதற்கு பழைய பைக்கைவிட கச்சிதமான தோற்றத்துடன் இருக்கிறது. FZ-1  பைக்கின் ஃபேரிங் டிஸைன் தாக்கத்தை இந்த பைக்கிலும் காணலாம். புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் ஸ்பீடோ மீட்டர், டேக்கோ மீட்டர், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், பெட்ரோல் கேஜ் ஆகியவை உள்ளன. இவற்றை, பைக்கை ஓட்டும்போது தெளிவாகப் பார்க்க முடிகிறது. சுவிட்ச்கள் தரமானவை. FZ V2.0  பைக்கிலும் அதே பழைய 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்தான் என்றாலும், டிஸைன் புதிது.

பழைய பைக்கில் இதற்கு முன்பு ஒரே இருக்கையாக இருந்தது. இப்போது ஸ்ப்ளிட் டைப் இருக்கைகளை புதிய V 2.0 பைக்கில் கொடுத்துள்ளது யமஹா. புதிய பைக்கின் சைலன்ஸர் ஷார்ப்பான டிஸைனைக் கொண்டுள்ளது. எல்லா யமஹா பைக்குகளைப் போலவே, FZ V2.0 பைக்கின் ஒட்டுமொத்தத் தரமும் நன்றாக இருக்கிறது.

யமஹா FZ V2.0  பைக்கில் இருப்பது 149 சிசி 'ஃப்யூல் இன்ஜெக்டட்’ இன்ஜின். பழைய FZ-S பைக்கில் இருப்பதோ 153 சிசி, 'கார்புரேட்டட்’ இன்ஜின். பழைய பைக்கைவிட புதிய பைக்கில் 1bhp குறைவாக, அதாவது 12.9 bhp சக்தியை 8,000 ஆர்பிஎம்-மிலும், 0.1 kgm டார்க் குறைவாக, அதாவது 1.3 kgm டார்க்கை 6,000 ஆர்பிஎம்-மிலும் அளிக்கிறது 149 சிசி இன்ஜின். V2.0 பைக்கின் கிளட்ச் லைட்டாக இருப்பதால், டிராஃபிக்கில் ஓட்டுவது எளிது. கியர்பாக்ஸ் தரம் ஸ்மூத்தாகவும், இன்ஜினுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

உண்மையில், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சேர்ந்த பிறகு, மிக ரெஸ்பான்ஸிவாக மாறியிருக்கிறது இந்த இன்ஜின். ஆக்ஸில ரேட்டரைத் திருகியதுமே நல்ல சக்தி வெளிப்பாடுடன் சீறுகிறது FZ V2.0 ஸ்மூத்தாக, எல்லா ஆர்பிஎம்களிலும் சக்தி வெளிப்படுவது ஃப்யூல் இன்ஜெக்ஷனால் கிடைத்த நன்மை. முக்கியமாக, பழைய பைக்கைவிட இது 3 கிலோ எடை குறைவு. FZ V2.0 பைக் 0 - 60 கி.மீ வேகத்தை 5.6 விநாடிகளில் தொடுகிறது. இது பழைய பைக்கைவிட 0.1 விநாடிதான் அதிகம். மேலும், இரண்டு பைக்குகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 109 கி.மீ-தான்.

யமஹா நெக்ஸ்ட் ஸ்டெப்!

புதிய பைக்கின் ஓட்டுதல் மற்றும் கையாளுமை, அப்படியே பழைய பைக்கைப் போன்று நன்றாகவே இருக்கிறது. சீட்டிங் பொசிஷன் ரொம்பவும் ஸ்போர்ட்டியாகவும் இல்லாமல், கம்யூட்டர் பைக் போன்றும் இல்லாமல் நியூட்ரலாக இருக்கிறது. முன்பக்கம் ஃபோர்க் சஸ்பென்ஷன், பின்பக்கம் மோனோ ஷாக், அருமையான சேஸி என டெக்னிக்கலாகக் கலக்குகிறது புதிய FZ V2.0  முன்பக்கம் 267 மீமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் கச்சிதம். ஆனால், பின்பக்கமும் டிஸ்க் பிரேக்கைக் கொடுத்திருக்கலாமே. இதன் லோ ப்ரொஃபைல், சாஃப்ட் காம்பவுண்டு எம்ஆர்எஃப் டயர்கள், நல்ல க்ரிப்பைத் தருகின்றன.

புதிய FZ V2.0  பைக் சிட்டி டிராஃபிக்கில் லிட்டருக்கு 46.5 கி.மீ மைலேஜை அளிக்கிறது. இது பழைய பைக்கின் 41.3 கி.மீ மைலேஜைவிட மிக அதிகம்.

பழைய யமஹா FZ-S பைக்கின் பெரிய ப்ளஸ் ஓட்டுதல், கையாளுமை, பெர்ஃபாமென்ஸ். அதன் மிகப் பெரிய மைனஸ், மைலேஜ். புதிய FZ V2.0  பைக்கில் பழைய மாடலின் பாசிட்டிவ் பாயின்ட்டுகளை அப்படியே தக்க வைத்துக்கொண்டிருப்பதுடன், மைலேஜ் எனும் மைனஸ் பாயின்ட்டை, ப்ளஸ் பாயின்ட்டாக மாற்றிக் காட்டி விட்டது யமஹா.

யமஹா நெக்ஸ்ட் ஸ்டெப்!