Published:Updated:

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை

Vikatan Correspondent

HYUNDAI ELITE I20 VS FIAT PUNTO EVO Vs VOLKSWAGEN POLO Vs MARUTI SWIFTதொகுப்பு: வேல்ஸ்

பெஸ்ட் பிரீமியம் ஹேட்ச்பேக்’ என்று எலீட் i20-ஐ வகைப்படுத்தினால், ஃபியட் புன்ட்டோ ஈவோ மற்றும் ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகிய இரண்டும்தான் இதன் போட்டியாளர்கள். இவை இரண்டும் சமீபத்தில்தான் புது பொலிவோடு மறு அறிமுகமாகின. பழைய i20-க்குப் போட்டியாளராக இருந்ததும் இந்த இரண்டு கார்கள்தான். அதனால், இந்த மூன்று கார்களையும் ஒப்பிடுவது என்று முடிவு செய்தோம். ஆனால், 'பிரீமியம் ஹேட்ச்பேக்’ என்ற புதிய செக்மென்ட் உதயமாவதற்கே, மாருதி ஸ்விஃப்ட்தான் ஆரம்ப விதை. நம் நாட்டில் விற்பனையாகும் கார்களை, விற்பனை அடிப்படையில் வரிசைப்படுத்தினால், இரண்டாவது இடத்தில் இருப்பதும் ஸ்விஃப்ட்தான். அதனால், அதையும் இந்தப் போட்டியில் சேர்த்துக்கொண்டோம்.  

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை

முதலில் i20-ல் இருந்து ஆரம்பிப்போம். புதிய i20 என்று பரவலாகக் குறிப்பிடப்பட்டாலும், ஹூண்டாய் - இதை 'எலீட் i20’ என்கிறது.  'எலீட்’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், இதை 'பிரீமியம் கார்’ என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறது. ஹூண்டாய் பெருமையாகச் சொல்வதைப் போல, உண்மையிலேயே பழைய i20-யைவிட எலீட் i20 தோற்றத்திலும், இடவசதியிலும், புதிய வசதிகளை அளித்திருப்பதிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் அரண்மனை வரை பயணித்தோம்.

ஜோத்பூர் மகாராஜாவின் அழகு மிளிரும் பிரம்மாண்டமான உமைத் பகவான் அரண்மனைக்கு முன்பு நிறுத்தி படம் எடுத்தபோதும், i20-ன் தனித்தன்மையும் அழகும் பின்னுக்குத் தள்ளப்படவில்லை. ஆம், i20-ன் தனித்தன்மை பழைய i20-யைவிட ஏற்றம் கண்டிருக்கிறது. ஆனால், எலீட் i20-ன் நீள அகலங்கள் பெரிய அளவில் மாறிவிடவில்லை. சொல்லப் போனால், இதன் உயரம் பழைய i20-யைவிட சுமார் 10 மிமீதான் குறைந்து இருக்கிறது. ஆனால், அகலத்தில் 24 மிமீ பெரிதாகி இருக்கிறது. iல்பேஸை மட்டும் கணக்கிட்டால், 45 மிமீ அதிகமாகியிருக்கிறது. 'இந்தா நீ கேட்ட மாற்றம்!’ என்று சொல்வதுபோல, காரின் வெளித்தோற்றத்தில் பளிச் மாற்றங்களையும் வளைவு நெளிவுகளையும் ஹூண்டாய் கொடுக்கவில்லை. தன்னுடைய ஃப்ளூயிடிக் 1.0 டிஸைன்படி i20-யை அது டிஸைன் செய்திருந்தால், நிச்சயம் இது சாத்தியமாகி இருக்கும். ஆனால், i20-ல் ஐரோப்பிய வாசனை தூக்கலாக இருக்க வேண்டும் என்று ஹூண்டாய் முடிவு செய்துவிட்டதால், தன்னுடைய புதிய ஃப்ளூயிடிக் 2.0 டிஸைன் கொள்கைக்கு ஏற்ப, எலீட் i20-ன் வெளிப்புற டிஸைனை அமைதியாக அடக்கி வாசித்திருக்கிறது.

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை
எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை

குரோம் அவுட்லைன் கொண்ட எலீட் i20-ன் புதிய ஹெக்ஸகனல் கிரில் மற்றும் பனி விளக்குகளின் டிஸைன் ஆகிய இரண்டும்தான் முதலில் கவனத்தை ஈர்க்கின்றன. தட்டையான பேனட் டிஸைன் காரை மேலும் அகலமானதாகக் காட்ட உதவி செய்கிறது. பக்கவாட்டு டிஸைனைப் பொறுத்தவரை முதலில் கண்களை ஈர்ப்பது இதன் கறுப்பு நிற C பில்லர்.

விலை குறைந்த மாடல்களுக்கு 14 இன்ச் வீலும், விலை அதிகமுள்ள மாடலுக்கு 16 இன்ச் அலாய் வீலும் கொடுத்திருக்கிறார்கள். காரின் பின்பக்க விண்ட்ஸ்கிரீன், மூன்று அடுக்குகள் கொண்ட 'ஸ்ப்ரெட்-அவுட்’ டெயில் லைட்ஸ், பம்பர் என எலீட் i20-ன் ஹைலைட் இதன் பின்பக்கத் தோற்றம்தான்!

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை
எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை

285 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் டிக்கியில், ஒரு வாரத்துக்குத் தேவையான பெட்டி படுக்கைகளைத் தாராளமாக எடுத்துச் செல்ல முடியும். ஆனால், உயரம் குறைந்தவர்களுக்கு இந்த டிக்கியில் பொருட்களை ஏற்றி இறக்குவது சற்றே சிரமம்.

இனி மற்ற கார்களைப் பார்ப்போம். 'அளவுக்கு மீறினால், க்ரோம் பூச்சுகளும் புளிக்கும்’ என்றாலும், ஃபியட் புன்ட்டோ விஷயத்தில் இது பொய்யாகிவிட்டது. இதன் பம்பரில்கூட க்ரோம் பூச்சுக்களைப் பார்க்க முடிகிறது. அறிமுகமாகி ஒன்பது ஆண்டுகள் ஆன காருக்கு, புதுப் பொலிவு கொடுக்க முடியும் என்று ஃபியட் நிரூபித்திருக்கிறது.

ஃபோக்ஸ்வாகன் போலோவைப் பொறுத்தவரை பம்பர், ஹெட்லைட்ஸ் ஆகியவற்றில்தான் மாற்றங்கள் 'பளிச்’ எனத் தெரிகின்றன.  போலோவின் முன்பக்க டிஸைன், அடிப்படையில் பலருக்குப் பிடித்தமான டிஸைன் என்பதை மறந்துவிடக் கூடாது.

மாருதி ஸ்விஃப்ட் என்று சொன்ன உடன், அதன் ஸ்போர்ட்டியான தோற்றம்தான் பலருக்கும் நினைவு வரும். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஸ்விஃப்ட்டின் முகத்தில்தான் விழிக்க வேண்டும் என்ற அளவுக்கு, அதன் பெருக்கம் சாலைகளில் அதிகரித்திருப்பதே இப்போது அதற்கு மைனஸாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் இந்த ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொண்டது ஸ்விஃப்ட்டின் க்ஷிஞிவீ மாடல். ஆனால், 15 இன்ச் அலாய் வீல்களைக்கொண்ட ஞீஞிவீ மாடல்தான் பார்ப்பதற்குக் கூடுதல் ஸ்போர்ட்டியாக இருக்கிறது.  

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை

உள்ளலங்காரம்

எலீட் i20-ன் முன் பக்க இருக்கைகளில், இரண்டு சீட்டுகளுக்கு இடையில் தாராளமாக இடம் கொடுத்திருக்கிறார்கள். பின் சீட்டில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியும். மிட் சைஸ் செடான்களுடன் போட்டி போடும் வகையில், காரின் உள்ளே கை - கால்களை நீட்ட முடிகிறது. தலையும் கூரையில் இடிக்கவில்லை. கதவுகளை அகலமாகத் திறந்து மூட முடிகிறது என்பதால், காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் வசதியாகவே இருக்கிறது. பின் சீட்டில் இருப்பவர்களுக்கு என தனியாக ரியர் ஏ.சி வென்ட் கொடுத்திருக்கிறார்கள். குறை? இரண்டாம் வரிசையில் உயரம் குறைந்தவர்கள் உட்கார்ந்தால், ஜன்னலுக்கு வெளியே பார்க்க சற்று சிரமப்படுவார்கள். ஆனால், முன் வரிசையில் இந்தப் பிரச்னை இல்லை. அதுவும் டிரைவர் சீட்டின் உயரத்தை ஏற்றவும் இறக்கவும் கொடுக்கப்பட்டிருக்கும் வசதியும், ஸ்டீயரிங்கை உள்ளே தள்ளவோ, வெளியே இழுக்கவோ முடியும் என்பதால், சௌகரியமாக பொசிஷனைத் தேர்ந்தெடுத்து டிரைவரால் உட்கார முடிகிறது.

எலீட் பெட்ரோல்

பழைய i20-யில் இருக்கும் அதே 1.2 லிட்டர் VTVT பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும். ஐந்து கியர்கள் கொண்ட இதன் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இன்ஜினின் ஆரம்ப வேகத்தில் இதன் திறனை அதிகரிக்கும் பொருட்டு, இன்ஜினை மட்டும் சற்றே ரீ-டியூன் செய்திருக்கிறார்கள். ஆனால், இது போதவில்லை. முன்னே செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்யும்போது, ஒவ்வொருமுறையும் கியர்களை குறைத்தே ஓவர்டேக் செய்ய வேண்டியிருக்கிறது. கியர் ஸ்மூத்தாக இருப்பதால், இது சிரமமாகத் தெரியவில்லை. ஆனால், இன்ஜின் 3,000 ஆர்பிஎம் தாண்டிவிட்டால், சக்தி குறைவில்லாமல் வெளிப்படுகிறது. சத்தம் இல்லாமல் இயங்குவது இதன் ப்ளஸ் என்றாலும், ஓட்டுவதற்கு உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை

மற்ற மூன்று கார்களின் முன்னிருக்கைகளும் வசதியானவையே என்றாலும், மாருதி ஸ்விஃப்ட்டின் முன்னிருக்கைகள் சூப்பர். டிரைவிங் பொசிஷன், வசதியான பக்கெட் சீட் என அனைத்தும் படு சௌகரியம். பின் சீட்டைப் பொறுத்தவரை போலோ படு மோசம். காலுக்குக் கீழே மேடாக இருப்பதால், பின் சீட்டில் நடுவே உட்காருபவரின் பாடு பெரும்பாடாக இருக்கும். மாருதி ஸ்விஃப்ட்டில் கால்களைத் தாராளமாக நீட்டி மடக்க முடியவில்லை. உயரம் குறைந்தவர்கள் உட்கார்ந்தால், ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது சிரமமாக இருக்கும். i20 போலவே புன்ட்டோவின் பின் இருக்கைகளில் மூன்று பேர் தாராளமாக உட்கார முடியும். இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், புன்ட்டோவில் பின்னிருக்கையில் உட்காருவது i20-ல் உட்கார்வதைவிட சௌகரியமாக இருக்கிறது.

எலீட் i20 உள்ளலங்காரத்தில் உயர்ந்திருந்தாலும், தரத்தில் போலோவிடம் தோற்றுவிடுகிறது. அடுத்து புன்ட்டோ. தன்னுடைய மழுங்கலான தோற்றத்தை மறைக்க, ஃபியட் நிறையவே முயற்சி செய்திருக்கிறது. எர்கானமிக்ஸ் சொதப்பலாக இருப்பதால் இதன் சீட், திருகுகள், டயல்கள், ஸ்டீயரிங் என்று எதையும் ஈஸியாகக் கையாள முடியவில்லை. ஸ்விஃப்ட்டைப் பொறுத்தவரை கறுப்பு வண்ணமே உள்ளலங்காரம் எங்கும் வியாபித்து இருப்பதுதான் ஒரே உறுத்தல்.

டேஷ் போர்டுக்கு வருவோம். மிரர் அட்ஜஸ்ட் சுவிட்ச், கீ-லெஸ் என்ட்ரி,  மல்ட்டி ஃபங்ஷன் டிஸ்ப்ளே ஸ்கிரீன், ஸ்டீயரிங் மவுன்டட் ஆடியோ மற்றும் ப்ளூ-டூத் கன்ட்ரோல்ஸ், பாட்டில்கள் மற்றும் பொருட்களை வைக்க ஏராளமான இட வசதிகள் என i20 பாரம்பரியப்படி எலீட் i20-லும் சிறப்பம்சங்களுக்குக் குறைவே இல்லை. அதுவும் விலை உயர்ந்த 'ஆஸ்டா’ மாடலில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், புஷ் பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் கேமரா மற்றும் டெட் பெடல் ஆகியவையும் உள்ளன. ஆனால், சற்றே விலை குறைந்த ஸ்போர்ட்ஸ் மாடலில், கோ- டிரைவர் சீட் பாதுகாப்புக்கு காற்றுப் பை கொடுக்கப்படவில்லை. அதேபோல, பின்பக்க விண்ட்ஸ்கிரீனுக்கு வைப்பர் வசதி கிடையாது.

போட்டி கார்களுக்கு வருவோம். போலோவிலும் ரியர் ஏ.சி வென்ட் உண்டு. i20-ன் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்தைவிடவும் போலோவின் 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் நன்றாக இருக்கிறது. ஸ்விஃப்ட்டில் க்ளைமேட் கன்ட்ரோல் இருக்கிறது. USB  மற்றும் ஆக்ஸ் வசதிகொண்ட ஆடியோ ப்ளேயர் உண்டு. ஆனால், ப்ளூ-டூத் வசதி இல்லை என்பது உறுத்தல்.

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை

டீசல் இன்ஜின்

பழைய i20-ல் இருக்கும் அதே 1.4 லிட்டர் காமன் ரெயில் டீசல் இன்ஜின்தான் எலீட் i20-லும்! இது பழைய i20 போலவே 4,000 ஆர்பிஎம்-ல் 89bhp சக்தியையும், 1,750 ஆர்பிஎம்-ல் 22.4kgm டார்க்கையும் கொடுக்கிறது. பழைய i20-ல் இருப்பதைப் போலவே இதிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். இது இயக்குவதற்கு ஸ்மூத்தாக இருக்கிறது. கிளட்ச்சும் இயக்குவதற்கு இலகுவாக இருக்கிறது. ஹோண்டா மற்றும் ரெனோவின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களின் அளவுக்கு, இந்த இன்ஜினின் ஆரம்ப வேகம் (பாட்டம் எண்ட்) இல்லை. ஆனால், 1,800 ஆர்பிஎம் தாண்டிவிட்டால், i20-ன் டீசல் இன்ஜின் சத்தமில்லாமல் புத்துயிர் பெறுகிறது. முன்பக்கம் இருக்கும் மெக்பர்ஸன் ஸ்டர்ட் மற்றும் பின்பக்கம் இருக்கும் டார்ஷன் பீம் சஸ்பென்ஷன்கள், அவற்றின் வேலையைச் சரியாகச் செய்வதால், காருக்குள் சத்தம் எதுவும் இல்லை. நகருக்குள் ஓட்டுவதற்குச் சிறந்த கார் என்ற நல்ல பெயரை இதன் லைட்டான ஸ்டீயரிங் வாங்கிக் கொடுக்கிறது. கையாளுமை மற்றும் ஓட்டுதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை பழைய i20-யைவிட எலீட் i20 கணிசமான அளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

0 - 100 வேகத்தைத் தொடுவதற்கு இது 13.72 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இது பழைய i20-யைவிட ஒரு விநாடி அதிகம். ஆனால், இதைவிட நமக்கு என்ன முக்கியமாகப் பட்டது என்றால், இதன் ஷார்ட் ரேஷியோ கியர்களின் உதவியால் 20 - 80 வேகத்தையும், 40 - 100 வேகத்தையும் பழைய i20-யைவிட சீக்கிரமாகவே கடந்துவிடுகிறது.

அடுத்து 4 சிலிண்டர்களைக்கொண்ட போலோவின் 1.5 லிட்டர் TDi டீசல் இன்ஜினைப் பார்ப்போம். 89bhp சக்தியைக் கொடுக்கும் இந்த இன்ஜின், பழைய போலோவில் இருந்த 3 சிலிண்டர்களைக் கொண்ட 1.2 லிட்டர் இன்ஜினைவிட பலமடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. சத்தம் இல்லாமல் சக்தியைக் கொடுக்கும் இதுதான், மற்ற மூன்று கார்களின் டீசல் இன்ஜின்களைவிடவும் நன்றாக இயங்குகிறது.

ஃபியட் மற்றும் ஸ்விஃப்ட்டில் இருப்பது ஒரே இன்ஜின்தான். அதாவது, 1.3 லிட்டர் மல்டி ஜெட் இன்ஜின். என்றாலும், புன்ட்டோவைவிட மாருதியில்தான் இந்த இன்ஜின் சிறப்பாகச் செயல்படுகிறது.  ஃபியட், போலோ, ஸ்விஃப்ட் ஆகிய மூன்று கார்களிலும் பிரேக் அற்புதமாக வேலை செய்கிறது. i20 இந்த விஷயத்தில் நிறையவே கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஓட்டுதல், கையாளுமை, சூப்பரான சர்வீஸ், குறைந்த பராமரிப்புச் செலவு, குறைவான விலை என எந்தக் கோணத்தில் பார்த்தாலும், மாருதி ஸ்விஃப்ட்தான் பலருக்கும் முதல் சாய்ஸாக இருக்கும். இருந்தாலும், இடுக்கு முடுக்கான பின்னிருக்கைகளும் சின்ன டிக்கியும் சிலரைத் தயங்கவைக்கலாம். ஆனால், இந்த ஆண்டு இறுதியில் புதுப் பொலிவுடன் ஸ்விஃப்ட் ரீ-என்ட்ரி ஆகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புன்ட்டோ வெளிப்பார்வையில் அசத்தும்.

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை

உள்ளலங்காரத்திலும் நன்றாகவே இருக்கிறது. ஸ்விஃப்ட் மற்றும் போலோவைவிட இடவசதியில் ஒரு படி மேலே இருக்கிறது. ஓட்டுதல் மற்றும் கையாளுமையிலும் எந்தக் குறையும் இல்லை. ஆனால், ஏமாற்றம் தரும் கியர்பாக்ஸ், கச்சா முச்சா என்று இருக்கும் டிரைவிங் பொசிஷன் ஆகியவை ஃபியட் புன்ட்டோ மீது படியும் பார்வையை அகற்றிவிடுகிறது.

இப்போது செமி-ஃபைனலுக்குத் தகுதி பெற்று வந்திருப்பது, போலோவும் - i20 யும்தான். போலோவின் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் நம்பர் ஒன். ஆனால், பின்னிருக்கை வசதியில் போலோ, i20 யைவிட பல படிகள் பின்தங்கிவிடுகிறது. அதேபோல, ஹூண்டாய் (மற்றும் மாருதி) அளவுக்கு ஃபோக்ஸ்வாகனின் சர்வீஸ் நெட்வொர்க் பெரிது இல்லை.

ஆனால், i20-ன் அற்புதமான வெளித்தோற்றம், தாராளமான இடவசதி, சௌகரியமான இருக்கைகள், வசதிக்காக வாரி வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள், உள்ளலங்காரம், சத்தமில்லாது வேலை செய்யும் இன்ஜின், நல்ல மைலேஜ், (அராய் சான்றிதழ்படி, இதன் டீசல் கார் லிட்டருக்கு 22.5 கி.மீ-யும், பெட்ரோல் கார் 18.6 கி.மீ-யும் அளிக்கிறதாம்) நாடெங்கும் பரவி இருக்கும் சர்வீஸ் நெட்வொர்க் என்று அனைத்தையும் கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, எலீட் i20-யை நிச்சயம் பரிந்துரைக்கலாம். ஆனால், இது மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஃபியட் புன்ட்டோ ஈவோ, ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகியவற்றைவிட விலை அதிகம். இருந்தபோதும் பழைய  i20 விற்பனையில் எந்தச் சுணக்கமும் இருந்தது இல்லை. இது எலீட் i20 காருக்கும் பொருந்துமா என்பது, போகப் போகத்தான் தெரியும்.

எலீட் என்ட்ரி! எதிரிகள் ஜாக்கிரதை