Published:Updated:

ஆக்டிவா 6G VS ஆக்டிவா 5G - என்ன மாறியிருக்கிறது... எது பெஸ்ட்?

ஆக்டிவா 6G
ஆக்டிவா 6G ( Autocar India )

எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆக்டிவா 6G-ன் டிசைனில் பெரிய மாற்றமில்லாவிட்டாலும், வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிகிறது.

'எப்போ வரும், அப்போ வரும், இப்போ வரும்' எனும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தீர்வாக, ஆக்டிவா 6G ஸ்கூட்டரைக் களமிறக்கியுள்ளது, ஹோண்டா. முன்புபோலவே ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரு வேரியன்ட்டுகளில் வந்திருக்கும் இந்த 110சிசி BS-6 ஸ்கூட்டர், BS-4 மாடலைவிட 7,613 - 7,978 ரூபாய் அதிக விலையில் அறிமுகமாகியிருக்கிறது. மிக முக்கியமான மாற்றமாக, நீண்ட நாள் எதிர்பார்ப்பான 12 இன்ச் வீல் மற்றும் டெலஸ்கோபிக் ஃபோர்க் ஆகியவை முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இதில், எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆக்டிவா 6G-ன் டிசைனில் பெரிய மாற்றமில்லாவிட்டாலும், வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தெரிகிறது. எனவே, ஆக்டிவா 5G உடன் ஒப்பிட்டால், ஆக்டிவா 6G எந்தளவுக்கு வேறுபடுகிறது என்பதை இனி பார்ப்போம்.

டிசைன் மற்றும் வசதிகள்

Activa 6G
Activa 6G
Honda India

படங்களில் பார்க்கும்போது பெரிய மாறுதல்கள் தெரியாவிட்டாலும், இரு ஸ்கூட்டர்களையும் (5G/6G) உற்றுநோக்கும்போது வித்தியாசங்கள் தென்படுகின்றன. 6G-ன் முன்பக்கத்தில் உள்ள Apron-ல் இருக்கக்கூடிய Faux கிரில் பகுதி, அளவில் பெரிதாகியிருப்பதுடன் - தடிமனான க்ரோம் பட்டையுடன் மிளிர்கிறது. இதற்குப் பதிலாக, LED DRL கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஹேண்டில்பாரில் Bar End Weight ஃபினிஷ் எட்டிப்பார்க்கிறது. முன்பு போலவே LED ஹெட்லைட்தான் 6G-யிலும் என்றாலும், அது DC வகைக்கு மாறிவிட்டது. எனவே, எந்த வேகத்தில் சென்றாலும் ஹெட்லைட் வெளிச்சம் ஒரே சீராக இருக்கும் என்பது வரவேற்கத்தக்கது. முன்பக்கத்தில் வீல் மற்றும் சஸ்பென்ஷன் மாறியிருப்பதால், மட்கார்டும் அதற்கேற்ப மாறியிருக்கிறது. ரியர் வியூ மிரர்கள், டியோவில் இருப்பதுபோலவே உள்ளன. பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது, 5G-யில் காம்பி பிரேக் ஸ்டிக்கர் இருந்தால், 6G-யில் eSP ஸ்டிக்கர் உள்ளது.

ஆக்டிவா 6G
ஆக்டிவா 6G
Autocar India

இன்ஜினைக் குளிர்விக்க காற்றை அனுப்பும் வென்ட்டுகளின் தோற்றம் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறது; 5G-யில் இருந்த சோக் லீவர், 6G-யில் மிஸ்ஸிங் (உபயம்: Fi). பின்பக்கத்தில் பார்த்தால், அகலமாகியிருக்கும் டெயில் லைட் முதலில் கவனத்தை ஈர்க்கிறது. பெட்ரோல் டேங்க் மூடி, சீட்டுக்கு அடியிலிருந்து வெளியே வந்துவிட்டது (டெயில் லைட்டுக்கு மேலே)! இன்ஜின் Kill ஸ்விட்ச் இருப்பது செம என்றாலும், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் கிடையாது. Multi Function சாவி துவாரத்தில் இருந்து, தற்போது சீட்டைத் தவிர பெட்ரோல் டேங்க்கின் மூடியையும் திறக்க முடியும். 5G-யில் இல்லாத பாஸ் லைட் ஸ்விட்ச் 6G-யில் இருந்தாலும், புதிய மாடல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் விஷயத்தில் யூ-டர்ன் அடித்துவிட்டது (டிஜிட்டல் ஸ்க்ரீன் & Eco மோடு இல்லை). அதில் கூடுதலாக சர்வீஸ் இண்டிகேட்டர் இடம்பெற்றிருப்பது ஆறுதல். அதேபோல ACG Silent ஸ்டார்ட் இருந்தாலும், Side ஸ்டாண்ட் இன்ஜின் Cut-Off ஸ்விட்ச் இங்கே வழங்கப்படவில்லை.

இன்ஜின் விவரங்கள்

Activa 6G
Activa 6G
Honda India

5G போலவே, 6G-யில் இருப்பதும் 110சிசி சிங்கிள் சிலிண்டர் - Long Stroke HET இன்ஜின்தான். ஆனால் BS-4 மாடலின் 109.19சிசி - கார்புரேட்டட் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, (50மி.மீ Bore X 55.6மி.மீ Stroke), BS-6 மாடலின் 109.51சிசி - ஃப்யூல் இன்ஜெக்டட் இன்ஜின் (47மி.மீ Bore X 63.1மி.மீ Stroke), முற்றிலும் புதிது. 5G-விட 6G அதிக சிசி மற்றும் கம்ப்ரஷன் ரேஷியோவைக் கொண்டிருந்தாலும் (BS-4: 9.5:1. BS-6: 10:1), பவர் மற்றும் டார்க்கில் சரிவைக் கண்டிருக்கிறது. 5G ஆக்டிவா 8bhp@7,500rpm பவர் மற்றும் 0.9kgm@5,500rpm டார்க்கைத் தந்த நிலையில், 6G ஆக்டிவா 7.7bhp@8,000rpm பவர் மற்றும் 0.88kgm@5,250rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது, ஸ்கூட்டரின் த்ராட்டில் ரெஸ்பான்ஸில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இனிதான் தெரியும். 5G-விட 6G 10% அதிக மைலேஜைத் தரும் என்கிறது ஹோண்டா. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், கிக்/செல்ஃப் ஸ்டார்ட் ஆகியவை அப்படியே தொடர்கின்றன.

மெக்கானிக்கல் அம்சங்கள்

ஆக்டிவா 6G
ஆக்டிவா 6G
Autocar India
சிறந்த பைக் - ஜிக்ஸர் SF 250, சிறந்த ஸ்கூட்டர் - ஆக்டிவா 125... மோட்டார் விகடன் விருதுகள் 2020

1,833மி.மீ நீளம் (5G விட 72மி.மீ அதிகம்), 697மி.மீ அகலம் (5G விட 13மி.மீ குறைவு), 1,156மி.மீ உயரம் ((5G விட 2மி.மீ குறைவு), 1,260மி.மீ வீல்பேஸ் ((5G விட 22மி.மீ அதிகம்), 171மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (5G விட 18மி.மீ அதிகம்) என 6G அளவுகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைக் கண்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கின் அளவு (5.3 லிட்டர்) மற்றும் 3Ah MF பேட்டரியில் மாற்றமில்லாவிட்டாலும், ஸ்கூட்டரின் எடை 2 கிலோ குறைந்திருக்கிறது (107 கிலோ). Underbone சேஸி, மெட்டல் பாடி, பின்பக்கத்தில் 10 இன்ச் வீல் (90/100 - டியூப்லெஸ் டயர்) ஆகியவை தொடர்ந்தாலும், 12 இன்ச் முன்பக்க வீல் (90/90 - டியூப்லெஸ் டயர்) மற்றும் டெலஸ்கோபிக் ஃபோர்க் என முன்பக்கத்தில் உள்ள விஷயங்கள் புதுசு. பின்பக்க சஸ்பென்ஷனை 3 விதமாக அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்பதும் வரவேற்கத்தக்கது. 18 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருந்தாலும், அதற்கு லைட் வசதி இல்லை.

ஆக்டிவா 6G VS ஆக்டிவா 5G... முதல் தீர்ப்பு

ஆக்டிவா 6G
ஆக்டிவா 6G
Autocar India
Vikatan

110சிசி செக்மென்ட்டில், ஆக்டிவா 6G தவிர இருக்கக்கூடிய ஒரே BS-6 மாடல் டிவிஎஸ் ஜூபிட்டர் க்ளாஸிக்தான். ஃபஸினோ 125 அறிமுகத்தின்போது, யமஹா நிறுவனம் தனது 110சிசி மாடல்களை நிறுத்தப்போவதாகச் சொல்லிவிட்டது. சுஸூகி, எப்போதோ லெட்ஸின் உற்பத்திக்கு Full Stop போட்டுவிட்டது; ஹீரோவின் 110சிசி மாடல்களின் (டூயட், மேஸ்ட்ரோ எட்ஜ்) BS-6 வெர்ஷன்கள் இன்னும் வரவில்லை. இந்த நிலையில், தான் விற்பனை செய்யும் 110சிசி மாடல்களான க்ளிக், நவி, ஏவியேட்டர், ஆக்டிவா i ஆகிய ஸ்கூட்டர்களுக்கு ஹோண்டா எண்டு கார்டு போடப்போவதாகத் தெரியவந்துள்ளது. ஆக்டிவா 5G மற்றும் டியோ அளவுக்கு இதன் விற்பனை அமையாததே பிரதான காரணம். இவற்றை BS-6 விதிகளுக்கு மேம்படுத்துவதில், வணிகரீதியாக செலவிடப்படும் தொகை உடனடியாக மீட்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதும் ஒரு காரணி. இப்போது, எந்த ஆக்டிவாவை வாங்குவது என்பதில் உள்ள குழப்பங்களுக்கான தீர்வைப் பார்க்கலாம்.

ஏப்ரல் 1, 2020 முதலாக, இந்தியா முழுவதும் BS-6 விதிகள் அமலுக்குவருகிறது. எனவே, இப்போது அறிமுகமாகியிருக்கும் ஆக்டிவா 6G, அதற்கேற்ப தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்ததே. எனவே, 5G விட சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதிக ஆன்-ரோடு விலையில் வந்திருக்கும் BS-6 ஆக்டிவா 110, வருங்காலத்துக்கு ஏற்ற விதத்தில் இருக்கும் என்பது ப்ளஸ். போட்டியாளர்களில் எப்போதோ வந்துவிட்ட பாஸ் லைட் ஸ்விட்ச், வெளிப்புறத்தில் உள்ள பெட்ரோல் டேங்க் மூடி, டெலஸ்கோபிக் ஃபோர்க், 12 இன்ச் வீல் ஆகியவை ஆக்டிவா 6G-க்கு இடம்பெயர்ந்திருப்பதும் நல்ல விஷயமே.

ஆக்டிவா 6G
ஆக்டிவா 6G
Autocar India

ஆனால் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் வந்திருப்பது நல்ல அம்சமாகவே இருந்தாலும், பராமரிப்பு விஷயத்தில் இது கார்புரேட்டர் அளவுக்கு எளிதாக இருக்காது என்பதே நிதர்சனம். பெட்ரோல் அளவில் கவனமாக இருத்தல் நலம். மேலும் முன்பைவிட ஸ்கூட்டரில் அதிக எலெக்ட்ரிக் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, வெளி மெக்கானிக்குகளிடம் ஆக்டிவா 6G செல்வதற்கான சாத்தியம் குறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவே குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஆக்டிவா 5G, HET இன்ஜின் வரத்தொடங்கிய 3G மாடலைப் போலவே இருக்கிறது. எனவே, வெளி மெக்கானிக்குகளுக்கு இந்த மாடல் பரிச்சயமானதாக இருக்கிறது என்பதுடன், உதிரிபாகங்கள் கிடைப்பதும் எளிதான ஒன்றுதான். இந்த விதி BS-6 ஆக்டிவா 110 -க்கு இன்னும் பொருந்தாது. ஓட்டுதல் தரத்தில் கொஞ்சம் பின்தங்கினாலும், இன்ஜின் ஸ்மூத்னெஸ் ஏரியாவில் 5G-க்கும் 6G -க்கும் மலையளவு வித்தியாசம் இருக்காது என்றே தோன்றுகிறது. வசதிகளைவிட பிராக்டிக்கல் பயன்பாடே ஆக்டிவாவை வைத்திருப்பவர்களுக்குப் பிரதான அம்சமாக இருந்திருக்கிறது.

ஆக்டிவா 6G
ஆக்டிவா 6G
Autocar India
`ஆல்ட்டோ ஏன், லம்போகினிபோல இல்லை' கார் டிசைன்களின் அடிப்படை விஷயங்கள்!

ஆனால், லேட்டஸ்ட் BS-6 பெட்ரோலில் பழைய BS-4 வாகனத்தைத் தொடர்ச்சியாக இயக்கும்போது, அதன் ஆயுட்காலத்தில் சிற்சில குறைபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை இங்கே சொல்லியாக வேண்டும். தவிர, ஆக்டிவா 6G விட, ஆக்டிவா 5G அதிக காற்று மாசுக்கும் வழிவகுக்கும். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 'போதுமான வசதிகளுடன் கூடிய லேட்டஸ்ட் ஹோண்டா ஸ்கூட்டர் வேண்டும்' என்பவர்கள் ஆக்டிவா 6G-யும், 'குறைவான விலை மற்றும் எளிதான பராமரிப்பு கொண்ட ஹோண்டா ஸ்கூட்டர் வேண்டும்' என்பவர்கள் ஆக்டிவா 5G-யும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இது ஃபேமிலி ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பின் செல்ல