Published:Updated:

கோவாவில் 3,000 அப்பாச்சி ரைடர்கள் ஒன்றுகூடும் `மோட்டோ சோல்’ திருவிழா!

ரஞ்சித் ரூஸோ

ஒவ்வொரு பைக் நிறுவனமும் உலகளவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க பல திட்டங்களை வைத்துள்ளார்கள். டிவிஎஸ் தனது அப்பாச்சிக்கு வைத்திருக்கும் திட்டம்தான் மோட்டோசோல் (MotoSoul).

அப்பாச்சி RR310
அப்பாச்சி RR310 ( மோட்டார் விகடன் )

அக்டோபர் 18 மற்றும் 19 தேதிகளில் கோவாவில் இருக்கும் வாகடார் எனும் இடத்துக்கு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் அனைத்து அப்பாச்சி ரைடர்களையும் அழைக்கிறது டிவிஎஸ். டிவிஎஸ்ஸின் திட்டம் என்ன என்று மோட்டோசோல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிவிஎஸ் ப்ரீமியம் பைக் செக்மென்ட்டின் மார்க்கெட்டிங் துறைத் தலைவர் மேகஷ்யாம் திகோலிடம் பேசினோம்.

மேகஷ்யாம் திகோல்
மேகஷ்யாம் திகோல்
TVS Motors

மோட்டோசோல் என்றால் என்ன?

டிவிஎஸ்ஸின் ப்ரீமியம் பிராண்டான அப்பாச்சியின் வாடிக்கையாளர்களையும், அதைத் தயாரித்தவர்களையும் இணைக்கும் ஒரு புதிய முயற்சிதான் மோட்டோசோல். உலகளவில் 25 லட்சம் அப்பாச்சி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணைக்க ஒரு தளம் தேவை. அதற்காகவே மோட்டோசோல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம். அப்பாச்சி ஓனர்ஸ் க்ரூப், அப்பாச்சி ரேஸிங் எக்ஸ்பீரியன்ஸ், அப்பாச்சி ப்ரோ பர்ஃபாமன்ஸ், மார்க்யூ ரைடு என அப்பாச்சி உரிமையாளர்களை இணைக்க இதுவரை பல முயற்சிகள் எடுத்திருக்கிறோம். இதில் மோட்டோசோல் மிக முக்கியமான, மிகப்பெரிய முயற்சி.

கோவா வாகடார் பீச்
கோவா வாகடார் பீச்

எத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்?

எங்களுடைய வெற்றி, உழைப்பு எல்லாவற்றையும் கொண்டாடும் இடம் இது. பைக் ரைடர்கள், டிவிஎஸ்ஸின் தொழில்நுட்ப வல்லுநர்கள், மார்க்கெட்டிங் துறையினர், ரேஸிங் டீம், டெஸ்டிங், ரைடிங் டீம் என எல்லோரிடமும் உரையாடலாம். பைக்கில் தங்களுக்கு இருக்கும் குறைகளைச் சொல்லாம். அப்பாச்சி பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ளலாம். இதுதான் முதல் வருடம் என்பதால் 3000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டினரும் கலந்துகொள்வார்கள். அப்பாச்சி ரைடர்கள் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் மோட்டோ சோலில் கலந்துகொள்ளலாம். ஸ்டன்ட் ஷோ, சூப்பர்கிராஸ் ரேஸ், அப்பாச்சி ரைடர்களுக்கு டர்ட் டிராக் ரேஸ், இசை நிகழ்ச்சிகள் என ஏராளமான விஷயங்களைத் திட்டமிட்டிருக்கிறோம்.

ரேஸ் டிராக்கில் அப்பாச்சி
ரேஸ் டிராக்கில் அப்பாச்சி

அப்பாச்சி என்றால் ரேஸிங் என விளம்பரம் செய்கிறீர்கள், மோட்டோசோல் என ரைடிங் ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். அப்பாச்சியில் ஸ்டன்ட் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், அப்பாச்சி ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீட் பைக். அப்பாச்சி எனும் பிராண்ட்டில் ஏன் இவ்வளவு குழப்பம்...டிவிஎஸ் பொறுத்தவரை அப்பாச்சி எதைக் குறிக்கிறது?

அப்பாச்சி உருவான முதல் நாளிலிருந்து இப்போது வரை அப்பாச்சி என்றால் ரேஸிங் மட்டுமே. நாங்கள் எங்களுடைய ரேஸ் அனுபவத்தில் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் அப்பாச்சியில் புகுத்தியிருக்கிறோம். ரேஸில் பைக்கின் நீடித்த உழைப்பும், நம்பகத்தன்மையும் அதிகப்படியாக டெஸ்ட் செய்யப்படுகிறது. அதனால், ரேஸ் பைக்குகள் சாலைக்கு வரும்போது மற்ற எல்லாவற்றையும் விட சிறப்பானதாக இருக்கும். இதுதான் அப்பாச்சியின் தீம்.

அப்பாச்சியை முதலில் ரேஸ் டிராக்கில் டெஸ்ட் செய்துவிட்டு அதை ரைடிங்கிற்கு டியூன் செய்கிறோம். டிவிஎஸ் ரேஸர்கள் 5 நிமிடங்கள் பைக்கை ஓட்டினாலே என்னென்ன பிரச்னை இருக்கிறது எனச் சொல்லிவிடுவார்கள். இவர்கள் அப்பாச்சியை எல்லா விதமான சாலைகளிலும் டெஸ்ட் செய்து, டியூன் செய்த பிறகே பைக் வெளிவருகிறது. அப்பாச்சி என்றால் எப்போதுமே ரேஸிங். அதில் எந்த மாற்றமும் இல்லை.

டிவிஎஸ் நடத்திய உலகின் நீளமான ஸ்டன்ட் ஷோ
டிவிஎஸ் நடத்திய உலகின் நீளமான ஸ்டன்ட் ஷோ

அப்பாச்சி அடியெடுத்து வைத்து 14 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பயணத்தில் இதுவரை கற்றுக்கொண்டது என்ன?

சந்தையில் முந்திக்கொள்ள வேண்டும். 160சிசி செக்மென்ட்டில் முதல் முதலாக Fi இன்ஜின் கொண்டுவந்தது நாங்கள்தான். முதல்முதலில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுத்ததும் நாங்கள்தான். பெட்டல் டிஸ்க், ரேஸ் இன்ஸ்பையர்டு ஸ்பீடோமீட்டர், எல்ஈடி DRL, அதிரடி பர்ஃபாமன்ஸ், ஸ்போர்ட்டி ஹேண்டிலிங் எனப் போட்டியாளர்களை விட வேகமாகப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.

இசை நிகழ்ச்சி
இசை நிகழ்ச்சி

மோட்டோசோல் நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் என்ன?

கம்யூனிகேஷன்தான் சவாலான விஷயம். இந்தியாவில் 2.5 மில்லியன் அப்பாச்சி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். 35 அப்பாச்சி ஓனர்ஸ் க்ரூப் இருக்கிறது. அனைவருக்கும் இப்படி ஒரு விஷயம் நடக்கப்போகிறது எனத் தெரியப்படுத்துவது சவாலான விஷயம். இதற்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து இயங்குகிறோம். பல வழிகளில் அனைவருக்கும் தெரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.