Published:Updated:

` 50 சதவிகித விற்பனை குறைவு!' - 5 நாள்கள் மூடப்படும் அசோக் லேலாண்ட்

ரஞ்சித் ரூஸோ

அசோக் லேலாண்ட் வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் மாதம் 50 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

அசோக் லேலாண்ட் தொழிற்சாலை
அசோக் லேலாண்ட் தொழிற்சாலை

ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலை காரணமாக பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஹூண்டாய், மாருதி உள்ளிட்ட பெரிய பாசஞ்சர் கார் நிறுவனங்களும், சில உதிரிப்பாகம் தயாரிப்பாளர்களும் உற்பத்தி இல்லா நாள்களை அறிவித்து தொழிற்சாலைகளை சில நாள்கள் மூடிவரும் நிலையில், இந்தப் பட்டியலில் அசோக் லேலாண்டும் இணைந்துள்ளது.

அசோக் லேலாண்ட்
அசோக் லேலாண்ட்

கமர்ஷியல் வாகனத் துறையின் முன்னோடி நிறுவனமான அசோக் லேலாண்ட், செப்டம்பர் 6, 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை தொழிற்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. செப்டம்பர் 9-ம் தேதியை ஏற்கெனவே உற்பத்தி இல்லா தினமாக அறிவித்திருந்த நிலையில், மொத்தம் 5 நாள்கள் அசோக் லேலாண்ட்-டின் தொழிற்சாலை மூடப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் அசோக் லேலாண்ட் 8,296 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது, 50 சதவிகிதம் குறைவான விற்பனை.

தொழிற்சாலை மூடப்படுவது குறித்து அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, '' விடுமுறை அறிவித்திருப்பது உண்மைதான். வெள்ளிக்கிழமை முதல் எண்ணூர் தொழிற்சாலையில் 5 நாள்களுக்கு உற்பத்தி நிறுத்தப்படுகிறது. ஆனால், இந்த உற்பத்தியில்லா தினங்களை சம்பளத்துடன்கூடிய விடுமுறை எனக் கூறியிருப்பதால், தொழிலாளர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை'' என்று தெரிவித்தார்.

சென்னை தொழிற்சாலை
சென்னை தொழிற்சாலை

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, "இதுபற்றி எந்தத் தகவலும் தரமுடியாது" என மறுத்துவிட்டனர்.