Published:Updated:

வரப்போகிறது, வால்வோவின் மேக் இன் இந்தியா `வில்லன்' - உபயம் அசோக் லேலாண்ட்!

அசோக் லேலாண்ட்
அசோக் லேலாண்ட் ( MK )

உலகத்தரமான இன்ஜின் பர்ஃபாமன்ஸ், அசத்தலான பாடி அமைப்பு, சொகுசான இருக்கைகள், சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் என B7R-ன் விலையைப் பொருட்படுத்தாமல், பல தனியார் பஸ் நிறுவனங்கள் தமது பேருந்துகளை வாங்க வைத்ததில், வால்வோவின் புத்திசாலித்தனம் பளிச்சிட்டது!

இந்தியாவின் முன்னணி கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலாண்ட் நிறுவனப் பேருந்துகளில், நிச்சயம் ஒருமுறையாவது அனைவரும் பயணித்திருப்போம். ஆனால், வால்வோ ஈஷர் நிறுவனத்தோடு கைகோத்து நம் நாட்டில் டயர் பதித்தபோது, செமி - ஸ்லீப்பர் எனப்படும் சொகுசு மிதவைப் பேருந்து உரிமையாளர்களின் பார்வை, சற்று வால்வோவின் வசம் சென்றதைப் பார்க்கமுடிந்தது.

வால்வோ Bus Chassis
வால்வோ Bus Chassis
Volvo Buses India

உலகத்தரமான இன்ஜின் பர்ஃபாமன்ஸ், அசத்தலான பாடி அமைப்பு, விமானத்தில் இருப்பதுபோன்ற சொகுசான இருக்கைகள், சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் என B7R பேருந்தின் விலையைப் பொருட்படுத்தாமல், பல தனியார் பஸ் நிறுவனங்கள் தமது பேருந்துகளை வாங்க வைத்ததில், வால்வோவின் புத்திசாலித்தனம் பளிச்சிட்டது எனலாம். மேலும் மல்ட்டி-ஆக்ஸில்... அதாவது 10 வீல்கள் கொண்ட இரட்டை பின்புற ஆக்ஸில்களோடு, 14/15 மீட்டர் பேருந்துகளின் விற்பனையில் முன்னிலை வகித்தது. இதன் அசுரத்தனமான வெற்றியைத் தொடர்ந்து மெர்சிடீஸ் பென்ஸ், ஸ்கானியா போன்ற சர்வதேச நிறுவனங்களும், தமது மல்ட்டி ஆக்ஸில் பேருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய முன்வந்ததால் வால்வோவின் இடத்தை யாராலுமே எட்டிப்பிடிக்க முடியவில்லை.

வால்வோவை நேரடியாக அதன் கோதாவிலேயே எதிர்கொள்ள, 14 மீட்டர் மல்ட்டி அக்ஸில் - முன்புற BS-6 டீசல் இன்ஜின் கொண்ட சொகுசுப் பேருந்தை, கடந்த ஆண்டின் இறுதியில் அசோக் லேலாண்ட் அறிமுகம் செய்தது தெரிந்ததே. தற்போது அது தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருப்பது தெரியவந்துள்ளது. 36 படுக்கை வசதி கொண்ட இந்த ஏசி பஸ்ஸின் ப்ரோட்டோடைப் பாடியை, எஸ்.எம்.கண்ணப்பா பிரகாஷ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்போது பயன்பாட்டில் உள்ள `கேப்பெல்லா' வகையிலேயே இதுவும் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், வேறு பெயரில் இந்த பஸ் விற்பனை செய்யப்படும் எனத் தகவல் வந்துள்ளது.

அசோக் லேலாண்ட்
அசோக் லேலாண்ட்
MK

டெஸ்ட்டிங் பணிகள் முடிந்தபிறகு, இதன் முழு டெக்னிக்கல் விவரங்கள் மற்றும் விற்பனை விலை ஆகியவை, ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஸ்பை படங்களைக் காணும்போது, வால்வோவுக்குக் கடும் போட்டியாளராக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் விலை, பராமரிப்புச் செலவுகள், சர்வீஸ் பேக்-அப் போன்றவற்றில், இந்திய கனரகச் சந்தையின் ராஜா அசோக் லேலாண்ட்தான். இருப்பினும் வால்வோவின் கேபின் சொகுசு மற்றும் இன்ஜின் பர்ஃபாமன்ஸுக்கு, இந்த நிறுவனத்தால் ஈடுகொடுக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து, பின்புற BS-6 டீசல் இன்ஜின் கொண்ட பேருந்தையும் விரைவில் சோதனை செய்யவுள்ளது அசோக் லேலாண்ட்.

பின் செல்ல