விலை ரூ.1.56 கோடி... ஆடி A8 லக்ஸரி செடானில் அப்படி என்னதான் இருக்கு?

5,302 மி.மீ நீளம் - 1,945மி.மீ அகலம் - 1,488மி.மீ உயரம் - 3,128மி.மீ வீல்பேஸ் என அளவுகளில் மாற்றம் கண்டிருக்கும் இந்த லக்ஸுரி செடானில், 19 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன.
நம் நாட்டில், லக்ஸுரி கார்கள் பிரிவில், தான் விட்ட இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது ஆடி. அதற்கேற்ப, கடந்த மாதத்தின் இறுதியில் Q8 லக்ஸுரி எஸ்யூவியைக் களமிறக்கிய நிலையில், தற்போது A8 L லக்ஸுரி செடானை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டு நடுவிலேயே, இது உலக அளவில் அறிமுகமாகிவிட்டாலும், மாடர்ன் டிசைன் அம்சங்களுடன் இது நம் நாட்டுக்கு வந்துள்ளது! பெரிய அறுகோண கிரில், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ் (HD Matrix LED), மெலிதான OLED டெயில் லைட்ஸ் ஆகியவை அதற்கான உதாரணம்.

இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையான 1.56 கோடி ரூபாய்க்கு வந்திருக்கும் இந்த கார், மெர்சிடீஸ் பென்ஸ் S-க்ளாஸ் - பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் - ஜாக்குவார் XJ L - லெக்ஸஸ் LS500h ஆகிய லக்ஸுரி செடான்களுடன் போட்டிபோடுகிறது. CBU முறையில் முழு காராக இறக்குமதிசெய்யப்படும் A8L, லேட்டஸ்ட் தொழில்நுட்பம் - அதிகப்படியான வசதிகள் - பின் இருக்கை சொகுசு ஆகியவற்றை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. 55 TFSI எனும் ஒரே வேரியன்ட்டில் வந்திருக்கும் இதில் இருப்பது, 340bhp பவர் - 50kgm டார்க்கைத் தரும் 3.0 லிட்டர் V6 டர்போ பெட்ரோல் இன்ஜின் - ஹைபிரிட் கூட்டணி.

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் AWD சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 2 டன் எடை இருந்தாலும், 0 - 100கி.மீ வேகத்தை வெறும் 5.7 விநாடிகளில் எட்டிப்பிடிக்கிறது A8L. அதற்கு Belt-Starter Generator மற்றும் 10Ah லித்தியம் ஐயன் பேட்டரி Pack கொண்ட 48V Mild ஹைபிரிட் சிஸ்டம் துணைநிற்கிறது. 55-160கி.மீ வேகத்தில் செல்லும்போது, 40 விநாடிகளுக்கு இன்ஜினுக்குப் பதிலாக காரை இயக்கக்கூடிய திறன் படைத்த இந்த அமைப்பு, ஒவ்வொரு 100கி.மீ தூரத்துக்கும் 0.7 லிட்டர் பெட்ரோலை மிச்சப்படுத்துகிறது! ஆல் வீல் ஸ்டீயரிங் மற்றும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஆப்ஷனலாக வழங்கப்பட்டிருப்பது செம; LWB செட்-அப்பில் வந்திருக்கும் A8L, MLB Evo பிளாட்ஃபார்மில் தயாராகிறது.

5,302மி.மீ நீளம் (முன்பைவிட 37மி.மீ அதிகம்) - 1,945மி.மீ அகலம் (முன்பைவிட 17மி.மீ அதிகம்) - 1,488மி.மீ உயரம் (முன்பைவிட 4மி.மீ குறைவு) - 3,128மி.மீ வீல்பேஸ் (முன்பைவிட 6மி.மீ அதிகம்) என அளவுகளில் மாற்றம் கண்டிருக்கும் இந்த லக்ஸுரி செடானில், 19 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், காரின் வெளிப்புறம் - உட்புறம் - ஃபினிஷ் & அப்ஹோல்சரி ஆகியவற்றில் 54 விதமான ஆப்ஷன்கள் இருக்கின்றன. வெளிப்புறத்தைப் போலவே, காரின் உட்புறம் பிரம்மாதமாகக் காட்சியளிக்கிறது. இதில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் சேர்க்கப்படவில்லை.

சென்டர் கன்சோலில் இரட்டை டச் ஸ்க்ரீன்கள் இருப்பதால் (10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் - ஏசி & சீட் கன்ட்ரோல்-களுக்காக 8.6 இன்ச் Curved டிஸ்பிளே), பட்டன்களுக்கு இங்கே தேவை ஏற்படவில்லை. இதில், Haptic மற்றும் Acoustic ஃபிட்பேக் கிடைப்பதால், சாலையைப் பார்த்துக்கொண்டே இந்த ஸ்க்ரீன்களைப் பயன்படுத்துவது நல்ல அனுபவமாக இருக்கலாம். மேலும், வாய்ஸ் கமாண்ட் அம்சமும் இருப்பதால், பல்வேறு வசதிகளை அப்படியும் பயன்படுத்தலாம்; Bang and Olufsen 3D Surround சவுண்டு சிஸ்டம் கொடுக்கப்பட்டிருந்தாலும், ஆப்ஷனலாக 1,920W - 23 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஆடியோ சிஸ்டம் வழங்கப்படுவது நச்.

தவிர, 'Virtual Cockpit' டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருப்பதுடன், Heads-Up டிஸ்பிளே ஆப்ஷனலாக உள்ளது. Multifunction ஸ்டீயரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டிங், சீட் மசாஜ் வசதி ஆகியவை கேபினை அழகாக்குகின்றன. A8L ஒரு Chauffeur கார் என்பதால், இரட்டை டச் ஸ்க்ரீன்களைக் கொண்ட Rear Seat Entertainment Package - சொகுசு அம்சங்களைக் கட்டுப்படுத்த ரிமோட் கன்ட்ரோல் - முன்பக்க சீட்டுக்கு அடியே Footrest - Foot Massager என மொத்த வித்தையையும் காரில் இறக்கியுள்ளது, ஆடி! பயணிகள் பாதுகாப்புக்கு 8 காற்றுப்பைகள் (இன்னும் 2 ஏர்பேக்ஸ் ஆப்ஷனல்), ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 3D View உடனான Surround கேமரா உள்ளன.
