Published:Updated:

பஜாஜ் பல்ஸர் 125 Neon... விலை குறைவான பல்ஸரில் என்ன ஸ்பெஷல்?

ராகுல் சிவகுரு

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட பல்ஸர் 150 Neon பைக்கைவிட, CBS உடனான பல்ஸர் 125 Neon பைக்கின் விலை சுமார் 5,000 ரூபாய் குறைவு!

Pulsar 125 Neon
Pulsar 125 Neon ( Bajaj Auto )

`அப்போ வரும்...இப்போ வரும்' எனக் கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு, பல்ஸர் 125 Neon பைக்கைக் களமிறக்கியுள்ளது பஜாஜ் ஆட்டோ. 83,802 ரூபாய்க்கு (சென்னை ஆன்-ரோடு விலை: டிஸ்க் பிரேக் CBS மாடல்) வந்திருக்கும் இந்த பைக், முன்பக்கத்தில் 170மிமீ டிரம் பிரேக் ஆப்ஷனுடனும் கிடைக்கிறது. டிஸ்க் பிரேக் கொண்ட மாடலைவிட இதன் விலை தோராயமாக 3,000 ரூபாய் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட பல்ஸர் 150 Neon பைக்கைவிட, CBS உடனான பல்ஸர் 125 Neon பைக்கின் விலை சுமார் 5,000 ரூபாய் குறைவு!

Pulsar 125 Neon
Pulsar 125 Neon
Bajaj Auto

இந்த பைக், பஜாஜின் டீலர்களை வந்தடைய ஆரம்பித்துவிட்டது. வெளிநாடுகளில் பல்ஸர் NS 125 எனும் பைக்கை (இது காலம் சென்ற பல்ஸர் 135LS பைக்கை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது) இந்த நிறுவனம் செய்துவருவதால், அதுதான் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய டிசைன் கொண்ட பல்ஸர் 150 விற்பனைக்கு வந்து 13 வருடங்கள் ஆகியிருந்தாலும், அதற்கான வரவேற்பில் எந்த மாற்றமும் இல்லை. எனவே அதே பேக்கேஜில் 125சிசி இன்ஜினைப் பொருத்தி, பல்ஸர் 125 Neon பைக்கைத் தயாரித்துள்ளது பஜாஜ் ஆட்டோ. குறைவான விலையில் கிடைக்கக்கூடிய பல்ஸரில் என்ன இருக்கிறது?

இன்ஜின் - கியர்பாக்ஸ், கலர் ஆப்ஷன்கள் எப்படி?

பல்ஸர் 125 Neon பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 124.4 சிசி DTS-i இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு, 12bhp பவர் மற்றும் 1.1kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது 4 வால்வ்-Fi அமைப்பைக் கொண்ட பல்ஸர் NS 125 பைக்குக்குச் சமமான பவர்/டார்க்கைக் கொண்டிருந்தாலும், இங்கே இருப்பதோ 2 வால்வ்-கார்புரேட்டர் செட் அப்தான்; ஆனால் அடிப்படையில் ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின் (பெரிய 56மிமீ Bore-ல் சிறிய 50.5மிமீ ஸ்ட்ரோக்) என்பதால், இது Rev-Happy குணாதிசயத்தைக் கொண்டிருக்கும் என நம்பலாம்.

Pulsar 125 Neon
Pulsar 125 Neon
Bajaj Auto

இதனாலேயோ என்னவோ, அதிர்வுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய Counter Balancer வசதியை பல்ஸர் 125-ல் வழங்கியிருக்கிறது பஜாஜ் ஆட்டோ. மேலும் Primary Kick அம்சம் இருப்பதால், எந்த கியரிலும் கிளட்ச்சைப் பிடித்து பைக்கை ஸ்டார்ட் செய்யமுடியும்; Neon Blue கலர், Matte ஃபினிஷ் கொண்ட கறுப்பு நிற பாடியைக் கொண்டுள்ளது. அதில் வீல், ஹெட்லைட், சீட், பெட்ரோல் டேங்க், கிராப் ரெயில், சீட்டுக்குக் கீழே இருக்கும் பாடி பேனல், பேட்டரி மற்றும் ஏர் ஃபில்டர் ஆகியவற்றுக்கான பேனல் ஆகியவற்றில் Blue வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர Gloss ஃபினிஷ் கொண்ட பாடியில், Solar Red மற்றும் Platinum Silver என இரு கலர்களும் இருக்கின்றன.

பல்ஸர் 150 Neon-க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

15 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட பல்ஸர் 150 Neon உடன் ஒப்பிடும்போது, 4 கிலோ எடை குறைந்திருக்கிறது பல்ஸர் 125 Neon (140 கிலோ). இதில் சிறிய 11.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெரும்பங்கு வகிக்கலாம்; மற்றபடி டிசைன், சிறப்பம்சங்கள், எர்கனாமிக்ஸ், மெக்கானிக்கல் பாகங்கள் ஆகியவை அப்படியே Cut-Copy-Paste செய்யப்பட்டிருக்கிறது. விலை குறைவான பல்ஸராகப் பொசிஷன் செய்யப்பட்டிருப்பதால், மற்ற மாடல்களில் இருக்கும் பெட்ரோல் டேங்க் Extension, Belly Pan, டூயல் டோன் கிராஃபிக்ஸ், பின்பக்க டிஸ்க் பிரேக், தடிமனான ஃபோர்க் மற்றும் டயர்கள், ஸ்ப்ளிட் சீட் ஆகிய அம்சங்கள் இங்கே மிஸ்ஸிங்.

Pulsar 125 Neon
Pulsar 125 Neon
Bajaj Auto

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பஜாஜின் மற்றுமொரு 125சிசி பைக்கான டிஸ்கவரைவிட அதிக விலை/பவர்/எடை/வசதிகள் எனப் பிரீமியம் பைக்காக வந்திருக்கிறது பல்ஸர் 125 Neon.