Published:Updated:

3 யூனிட் மின்சாரத்தில் 75 கி.மீ பயணம்... 1 லட்சம் ரூபாய்க்கு பஜாஜின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் சேட்டக்
பஜாஜ் சேட்டக்

பஜாஜ் தனது சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்துவிட்டது. கேடிஎம் ஷோரூம்களில் இந்த ஸ்கூட்டர்கள் விற்கப்பட உள்ளன.

பஜாஜ் நிறுவனம் தனது சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. இந்த சேட்டக் அர்பன், ப்ரீமியம் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். அர்பன் வேரியன்ட்டின் விலை ஒரு லட்சம் ரூபாய். ப்ரீமியம் வேரியன்ட் இதை விட 15,000 ரூபாய் விலை அதிகம். 

சேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி!
சேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி!

ப்ரீமியம் மாடலில் மெட்டாலிக் கலர் பெயின்ட், லெதர் போன்ற தோற்றம் அளிக்கும் Tan சீட், மெட்டல் நிறங்களில் வீல் மற்றும் முன்பக்கம் டிஸ்க் பிரேக் வருகிறது. அர்பன் மாடலில் ட்ரம் பிரேக் மட்டும்தான். விற்பனைக்கு வந்திருக்கும் இந்த ஸ்கூட்டர்கள் முதலில் புனே மற்றம் பெங்களூரில் விற்பனைக்கு வருகிறது. சில மாதங்களுக்குப் பிறகே இவை சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய மெட்ரோ நகரங்களுக்கு விற்பனைக்கு வரவுள்ளன.

இந்த ஸ்கூட்டரின் முன்பதிவு நாளை மதியம் பஜாஜ் இணையதளத்தில் தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டரை கேடிஎம் ஷோரூம்களில் டெஸ்ட் ரைடு செய்து பார்க்கமுடியும். ஆனால், தற்போது இதன் முன்பதிவுகள் இணையம் வழியாக மட்டுமே செய்யமுடியும். இந்த மாதத்தின் இறுதியில் புனே மற்றும் பெங்களூரு ஷோரூம்களுக்கு இந்த ஸ்கூட்டர் வந்துவிடும். 

TFT டிஸ்பிளே
TFT டிஸ்பிளே

பஜாஜ் சேட்டக், 4.1Kw மோட்டாரில் இயங்குகிறது. இது அதிகபட்சம் 80 கிமீ வேகம் வரை போகக்கூடியது. 16Nm டார்க் தரக்கூடியது. ரேஞ் என்று பார்க்கும்போது முழு சார்ஜில் ரைடிங் மோடை பொறுத்து 55 முதல் 75 கி.மீ வரை செல்லலாம். இந்த ஸ்கூட்டரை 100 சதவிகிதம் சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் தேவை. இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கிடையாது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 ஆண்டு/50,000 கி.மீ வாரன்ட்டியுடன் வருகிறது. 3 கிலோவாட் பேட்டரி கொண்டது இந்த ஸ்கூட்டர். 75 கி.மீ தூரம் பயணிக்க இதற்கு 3 யூனிட் மின்சாரம் போதும்.

Feather Touch ஸ்விட்ச்கள், Full LED லைட்டிங், ஆடி கார்களை போன்ற Scrolling இண்டிகேட்டர்கள், மூடியுடன் கூடிய க்ளோவ் பாக்ஸ், Negative Display டிஜிட்டல் மீட்டர், கீலெஸ் ஸ்டார்ட், மென்மையாக இயங்கும் சைடு ஸ்டாண்ட் - ஃபுட் பெக்ஸ் - மிரர்கள், ஃபுல் மெட்டல் பாடி என வசதிகளில் கலக்குகிறது சேட்டக். இந்த ஸ்கூட்டருக்கு ஒரு வருட இன்டர்நெட் சந்தாவையும் இலவசமாகத் தருகிறது பஜாஜ். இதன் மூலம் ஸ்கூட்டரின் பேட்டரி ஸ்டேட்டஸ், இடம், ரேஞ் என எல்லாவற்றையும் மொபைல் ஆப் மூலமாகவே பார்த்துக்கொள்ளலாம். 

மின்சார வாகனங்களுக்குத் தமிழ்நாட்டில் 100 சதவிகித சாலை வரிச் சலுகை, மத்திய அரசின் ஃபேம் மானியம், 5 சதவிகித ஜிஎஸ்டி எனப் பல சலுகைகள் கொடுத்தும் இதன் விற்பனை தற்போது வரை குறைவாகவே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவின் எந்த பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமும் மாஸ் மார்க்கெட்டுக்கு ஏற்ற ஒரு வாகனத்தை கொண்டுவரவில்லை என்பதே.

ஸ்கூட்டர் சந்தையில் அந்த நிலையை மாற்றியிருக்கிறது பஜாஜ். பிஎஸ் 6 ஸ்கூட்டர்கள் அனைத்தும் 80,000 ரூபாய் எனும் விலையை தொட்டுவிட்ட நிலையில், ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதுவும் பஜாஜ் ஸ்கூட்டர் வந்திருக்கிறது. இதில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஆகும் செலவில் ஒரு மாதம் முழுக்க பயணிக்கலாம். சர்வீஸ்க்கு பெரிய தொகை செலவிட தேவையில்லை. 3 ஆண்டுகள் வாரன்ட்டி இருக்கிறது. இப்போது, ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நீங்கள் தயாரா?

அடுத்த கட்டுரைக்கு