Published:Updated:

95 கி.மீ ரேஞ்ச், ரெட்ரோ டிசைன், மெட்டல் பாடி... எலெக்ட்ரிக் சேட்டக் பர்ஃபாமன்ஸ் எப்படி?

Chetak EV ரேஞ்ச்
Chetak EV ரேஞ்ச் ( Bajaj Auto )

காலம் சென்ற 2 ஸ்ட்ரோக் சேட்டக்கை நினைவுகூரும் விதமாக, ரெட்ரோ டிசைனுடன்கூடிய ப்ரீமியம் தயாரிப்பாக எலெக்ட்ரிக் சேட்டக்கைப் பொசிஷன் செய்திருக்கிறது, பஜாஜ்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, Past-ல் இருந்து Present & Future-க்கேற்ற எலெக்ட்ரிக் அவதாரத்தில் களமிறங்கியிருக்கிறது சேட்டக் (ஹமாரா பஜாஜ், Hamara Kal ஆகிவிட்டது)! இது வழியே ஸ்கூட்டர் செக்மென்ட்டில் மறுமுறை டயர் பதித்திருக்கும் பஜாஜ் ஆட்டோ, 'எலெக்ட்ரிக் டூ-வீலர் தயாரிப்பில் முதலில் வந்திருக்கும் இந்திய டூ-வீலர் நிறுவனம்' என்ற பெருமையைத் தன்வசப்படுத்தியிருக்கிறது. செப்டம்பரின் முடிவிலேயே சேட்டக்கின் உற்பத்தி துவங்கிவிட்டது என்றாலும், இது போட்டிமிகுந்த இந்திய டூ-வீலர் சந்தையில் புத்தாண்டுப் பரிசாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. FAME II திட்டத்தின் கீழ் மானியம் பெறப்போகும் சேட்டக், Urbanite எனும் துணைப் பிரிவின் முதல் மாடலாக அறிமுகமாகியிருக்கிறது.

டிசைன், வசதிகளில் என்ன ஸ்பெஷல்?

Bajaj Chetak EV
Bajaj Chetak EV
Autocar India

காலம் சென்ற 2 ஸ்ட்ரோக் சேட்டக்கை நினைவுகூரும் விதமாக, ரெட்ரோ டிசைனுடன்கூடிய ப்ரீமியம் தயாரிப்பாக எலெக்ட்ரிக் சேட்டக்கைப் பொசிஷன் செய்திருக்கிறது பஜாஜ். யமஹாவின் ஃபேஸினோவைப் போலவே, 6 கலர்களில் கிடைக்கும் சேட்டக்கிலும் இந்த பாணி வடிவமைப்பு செமையாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. வளைவுகளுடனான பாடி பேனல்கள், Multi Spoke அலாய் வீல்கள், Stiching ஃபினிஷ் கொண்ட சிங்கிள் பீஸ் சீட், க்ளோவ் பாக்ஸ் ஆகியவை அதற்கான உதாரணம். இதனுடன் Feather Touch ஸ்விட்ச்கள், முழுக்க LED லைட்டிங், ஆடி கார்களை நினைவுபடுத்தும்படியான Scrolling இண்டிகேட்டர்கள், Negative LCD டிஜிட்டல் மீட்டர், கீலெஸ் ஸ்டார்ட் என மாடர்ன் வசதிகளும் ரசனையுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

அதுவும் சைடு ஸ்டாண்டு, ஃபுட் பெக்ஸ், மிரர்கள், க்ளோவ்பாக்ஸ் ஆகியவை மென்மையாக இயங்குவது ப்ரீமியம் டச். வெவ்வேறு மாதிரியான மெட்டல் பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அவை சிங்கிள் பீஸாகவே தோற்றமளிக்கின்றன. சேட்டக்கின் தரம் மற்றும் ஃபிட் & ஃபினிஷ் மிகவும் அற்புதம்; ஆனால் படங்களில் பார்க்கும்போதே, இத்தாலியின் வெஸ்பா ஸ்கூட்டர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (வெஸ்பா Sprint ஸ்கூட்டரைப் பின்பற்றித்தான் பழைய சேட்டக் தயாரிக்கப்பட்டது).

பர்ஃபாமன்ஸ், ரேஞ்ச்... எப்படி?

Chetak EV
Chetak EV
Bajaj Auto

சேட்டக்கின் டெக்னிக்கல் விவரங்களை, பஜாஜ் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, இதில் இருப்பது 4kw எலெக்ட்ரிக் மோட்டார் - IP67 Rated Sealed Li-Ion பேட்டரி அமைப்பு. இதில் எக்கோ (ரேஞ்ச்: 95 கிமீ), ஸ்போர்ட் (ரேஞ்ச்: 85 கிமீ) என இரு ரைடிங் மோடுகள் தவிர, ரிவர்ஸ் அசிஸ்ட் வசதி இருப்பது செம! எனவே, ரைடர் செலெக்ட் செய்யும் மோடின்படி, ரேஞ்ச் & பர்ஃபாமன்ஸில் மாறுதல் இருப்பது தெரிகிறது. இவை, புனே நகரச் சாலைகளில் சேட்டக்கை பஜாஜ் டெஸ்ட் செய்து கிடைத்த ரேஞ்ச் என்பது கொசுறுத் தகவல்; எலெக்ட்ரிக் மோட்டார் ஸ்விங் ஆர்மில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாக இது பின்பக்கச் சக்கரத்துக்கு பவரை அனுப்புகிறது. சிறப்பான ரேஞ்ச்சை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, 5 Step-களைக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், டிஜிட்டல் மீட்டரில் நியூட்ரல் லைட்டைத் தவிர, 5 Step-களுக்கான இண்டிகேட்டர்கள் இருந்தன. இதனால், ரைடர் த்ராட்டிலில் காட்டப்போகும் பலத்தைப் பொறுத்து, தானாகவே சரியான Step-க்கு மாறிக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

சார்ஜிங் வசதி, மெக்கானிக்கல்ஸ்: பழசா புதுசா?

Bajaj Chetak EV
Bajaj Chetak EV
Bajaj Auto
என்னென்ன எலெக்ட்ரிக் டூ-வீலர் வருது?

வீடுகளில் காணப்படும் 5 Ampere ப்ளக் பாயின்ட்டின் உதவியுடன், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்வதற்கு 5 மணிநேரம் தேவைப்படுவதுதான் கொஞ்சம் நெருடுகிறது (இதில் DC சார்ஜிங் இல்லை!). வழக்கமான சார்ஜர் தவிர, சேட்டக்குடன் Home Charger-யை கட்டுபடியாகக்கூடிய விலையில் கொடுக்க முடிவெடுத்திருக்கிறது பஜாஜ். சார்ஜ் ஏற்றுவதற்குத் தேவைப்படும் மின்சார அளவைத் தெளிவாகக் காட்டுவது இதன் ஸ்பெஷல்; முன்னே Single Sided Trailing Arm (வெளியே தெரியும்படியான Coil Spring) - டிஸ்க் பிரேக் மற்றும் பின்னே சிங்கிள் ஷாக் அப்சார்பர் - டிரம் பிரேக் இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால், ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்ஸ் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. சேட்டக்கின் 12 இன்ச் வீல்களில், குறைவான Rolling Resistance கொண்டிருக்கும் MRF-ன் Zapper K டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தின் Mechanical Fitness, Ride History, Parameter Monitoring & Security போன்ற அம்சங்கள், மொபைல் ஆப் உதவியுடன் கிடைக்கலாம். ஆனால், இதற்கு டேட்டா வேண்டும் மக்களே!

மறுஅவதாரத்தில் செல்லுபடியாகுமா சேட்டக்?

கேடிஎம் டீலர்களில் சேட்டக்கை விற்பனை செய்வதில் தீர்க்கமாக உள்ளது பஜாஜ். புனே, பெங்களூரு என்ற வரிசையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது. 'சேட்டக்கைத் தொடர்ந்து, Husqvarna & Triumph ஆகிய கூட்டணியினரின் தயாரிப்புகள், விரைவில் வந்து சேரும்' என பைக் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயத்தைச் சொல்லியிருந்தார், பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநரான ராஜீவ் பஜாஜ்.

Chetak EV
Chetak EV
Bajaj Auto

ப்ரீமியம் தயாரிப்பாக அறியப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அதிரடியான விலையில் வராது என்றாலும், ஓரளவுக்கு கரெக்ட்டான விலையில் வரும் என அவர் கூறியிருந்தார். அதன்படி பார்த்தால், தோராயமாக 1.4 லட்சத்துக்குள் (ஆன்-ரோடு விலை) சேட்டக் வரலாம். இதனாலேயே, Make In India பாணியில், உள்நாட்டு உதிரிபாகங்கள் இங்கே அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறது பஜாஜ். போதுமான வசதிகள் இடம்பெற்றிருந்தாலும், சில சிக்கன நடவடிக்கைகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்க்க முடிகிறது.

ஏத்தர் S 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் TFT டிஸ்பிளே - டெலிஸ்கோபிக் ஃபோர்க் - பின்பக்க டிஸ்க் பிரேக் இருக்கும் நிலையில், சேட்டக்கில் இவை எல்லாமே மிஸ்ஸிங்; தவிர இங்கே CBS/ABS ஆகியவற்றில் எது இருக்கும் என்பதிலும் குழப்பம் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ரேஞ்ச்சில் கொஞ்சம் பின்தங்கினாலும், டிசைன் - தரம் - வசதிகள் ஆகியவற்றில் சொல்லி அடித்துவிட்டது சேட்டக். பஜாஜின் டீலர் நெட்வொர்க், சர்வீஸ், உதிரிபாகங்கள் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றாலும், பர்ஃபாமன்ஸ் & சார்ஜிங் ஸ்டேஷன்கள் குறித்த விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. தவிர, இது தமிழகத்துக்கு எப்போது வரும் எனத் தெரியவில்லை.

Bajaj Chetak EV
Bajaj Chetak EV
Autocar India
Vikatan

எது எப்படியோ, இந்தியாவைச் சேர்ந்த ஒரு டூ-வீலர் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக EV தயாரிப்பில் இறங்கியிருப்பதால், ஹீரோ - டிவிஎஸ் - ராயல் என்ஃபீல்டு - மஹிந்திரா ஆகியோரும் இந்த செக்மென்ட்டில் குதிப்பார்கள் எனத் தோன்றுகிறது. இது ஒருவேளை சாத்தியமானால், நம் நாட்டில் காற்று மாசின் அளவைக் குறைக்க முடியும்!

அடுத்த கட்டுரைக்கு