Published:Updated:

பிளாட்டினாவில் H கியர்... எதற்கு இந்தப் புது கியர்... ப்ளஸ், மைனஸ் இதோ!

ரஞ்சித் ரூஸோ
ஜெ.தி.துளசிதரன்

H என்றால் ஹைவே அல்லது ஹேப்பி கியர் என்கிறது, பஜாஜ்.

Platina 110 H Gear Test Ride, Pune.
Platina 110 H Gear Test Ride, Pune.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஒரு இன்ஜினை வைத்துக்கொண்டு, அதில் 4 பைக்குகளை உருவாக்குகின்றன. ஆனால், பஜாஜ் மட்டும் ஒரே பைக்குக்கு 4 இன்ஜின்களை உருவாக்கும். பல்ஸர் பைக்குகள் இதற்குப் பெரிய உதாரணம். இப்போது, அந்த வரிசையில் பிளாட்டினாவையும் இணைத்துக்கொள்ளலாம்.

Platina 110 H Gear
Platina 110 H Gear

ஏற்கெனவே, பிளாட்டினா 100 கம்ஃபோர்டெக் விற்பனையாகும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பிளாட்டினா 110 பைக்கை கொண்டுவந்தது பஜாஜ். தற்போது, அதே பைக்கை கொஞ்சம் அப்டேட் செய்து, பிளாட்டினா 110 H கியரை கொண்டுவந்துள்ளது. இந்த பிளாட்டினாவில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதை ஏன் வாங்கலாம், வாங்காமல் இருக்க என்னென்ன காரணம் உள்ளது என்று பார்ப்போம்.

ஏன் வாங்கலாம்?

1. இன்ஜின்

அடுத்த ஆண்டு பிஎஸ் 6 விதிமுறைகள் வரும் நிலையில், தற்போது இருக்கும் பிளாட்டினாவின் பிஎஸ் 4 இன்ஜினை மேம்படுத்தியுள்ளது, பஜாஜ். பிளாட்டினாவின் இந்த 115சிசி இன்ஜின் 8.6bhp பவர் மற்றும் 9.81Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது, பழைய 102சிசி இன்ஜினைவிட 0.7bhp பவர் மற்றும் 1.46Nm டார்க் அதிகம். தற்போது, 100சிசி செக்மென்ட்டிலேயே அதிக டார்க் கொண்ட இன்ஜின் இதுதான்.

பிளாட்டினாவின் புதிய 115cc இன்ஜின்
பிளாட்டினாவின் புதிய 115cc இன்ஜின்

அதுமட்டுமல்லாமல், பிளாட்டினா வரிசையில் முதல்முறையாக 5 கியருடன் வரும் இன்ஜின் இது. இந்த 5-வது கியரை H கியர் என்று சொல்கிறது பஜாஜ். H என்றால் Happy அல்லது Highway எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளாம். 4 மற்றும் 5-வது கியர்களுக்குள் பெரிய வித்தியாசம் கிடையாது. இந்த H கியர் என்பது ஓவர்டிரைவ்தான். இரண்டு கியர்களிலுமே 94 கி.மீ வேகம் வரை செல்ல முடிந்தது. ஆனால், H கியரில் ஓட்டும்போது இன்ஜினில் அதிர்வுகள் குறைந்து, எந்த அழுத்தமும் இல்லாமல் ஃப்ரீயாகப் போகிறது. ஸ்மூத்தான, நச்சென்ற கியர் ஷிஃப்ட்டிங்குக்காக கியர் லிங்க் மெக்கானிசத்தை மாற்றியுள்ளார்கள்.

H Gear
H Gear

நல்ல முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். கியர் ஷிஃப்ட்டிங் அவ்வளவு ஸ்மூத். பிளாட்டினா 100 இன்ஜினில் பவர் டெலிவரி சீராக இருக்காது. சட்டென பவர் ஏறும், சர்ரென இறங்கும். அனால், புதிய இன்ஜினில் டார்க் மற்றும் பவர் சரளமாக முன்னேறுவதால், பைக் முன்பைவிட ஓட்டுவதற்கு இன்னும் பிரமாதமாக இருக்கிறது. பஜாஜின் புதிய NVH லேபில் இந்த பிளாட்டினாவை டெஸ்ட் செய்திருப்பது நன்றாகவே தெரிகிறது. புதிய பிளாட்டினாவின் இன்ஜின் செம ஸ்மூத். 80 கி.மீ வேகத்தைக் கடக்கும்போது வைப்ரேஷன் எட்டிப்பார்க்கிறது.

2. சொகுசு

தற்போது, கம்யூட்டர் பைக்குகளை வாங்கப்போகும் மக்களில் 40 சதவிகிதம் பேர், பைக் எவ்வளவு சொகுசாக இருக்கிறது என்று பார்க்கிறார்களாம்.
Consumer Report

கம்யூட்டர் பைக்குகள் என்றால் மைலேஜ் தரும் என்பதை மாற்றி, சொகுசாகவும் இருக்கும் என்று சொல்ல வைத்ததில் பிளாட்டினாவின் பங்கு பெரியது. ஏற்கெனவே, பிளாட்டினாவில் கம்ஃபோர்ட்டெக் என்ற பெயரில் சொகுசான பைக்கை வழங்கும் பஜாஜ், இந்த பைக்கில் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. புதிய பிளாட்டினாவில், நைட்ராக்ஸ் Spring on Spring (SoS) சஸ்பென்ஷன் வந்துள்ளது.

S-on-S supspension
S-on-S supspension

ஒரு சிறிய ஸ்பிரிங், அதற்குமேல் ஒரு நைட்ராக்ஸ் கேனிஸ்டர், அதைச்சுற்று ஒரு பெரிய ஸ்பிரிங் என மொத்தம் மூன்று லேயர் சஸ்பென்ஷன் உண்டு. சாஃப்ட் செட்டப்தான் என்பதால் சாலையில் தெரியும் மேடு பள்ளங்கள், கைகளையும் முதுகையும் பதம்பார்க்கவில்லை. அதே நீளமான சீட்தான். பில்லியனில் வருபவர்களின் வசதிக்காக ஃபுட் பெக்ஸுக்கு பதிலாக ஃபூட் பேர்டு பொருத்தியிருக்கிறார்கள். வைப்ரேஷன்கள் பிரச்னை இல்லை.

3. டிசைன்

டிசைனில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை பிளாட்டினாவின் லோகோ ஸ்டிக்கராக மட்டுமே இருந்த நிலையில், இந்தமுறை பல்ஸர் போல 3D Emblem பொருத்தப்பட்டுள்ளது. சீட்டில் குவில்ட் பேட்டர்ன் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. பாடியில் பெரிய மாற்றங்கள் இல்லை. அதே ஹெட்லைட் மற்றும் DRL டிசைன்தான். தற்போது CT110, பிளாட்டினா 110, டிஸ்கவர் 110 என மூன்று பைக்குகளும் கிட்டத்தட்ட தோற்றத்தில் ஒன்றுபோல இருக்கும் நிலையில், பஜாஜ் தனது டிசைனை கொஞ்சம் மாற்றியாக வேண்டும்.

4.ரைடிங்

ரைடிங்கில் பெரிய முன்னேற்றங்கள் உள்ளன. பஜாஜின் கம்யூட்டர் வரிசையிலேயே மிகவும் சொகுசான பைக் இதுதான். சஸ்பென்ஷனுக்கு பூங்கொத்துகள்! அதே சமயம் ஸ்விங் ஆர்மையும் மறந்துவிடக்கூடாது. H கியர் மாடலின் ஸ்விங்ஆர்மை முன்பைவிட வலுவாக்கியுள்ளார்கள். இதனால், அதிக வேகங்களில் பைக் அலைபாய்வது குறைந்துள்ளது.

Strengthened swingarm
Strengthened swingarm

டிஸ்க் பிரேக் 220மி.மீ-ல் இருந்து 240 மி.மீ-யாக வளர்ந்துள்ளது. பல்ஸர், அவென்ஜர் போல ஷார்ப்பாக இல்லையென்றாலும் பிரேக் முன்பைவிட துரிதமாகச் செயல்படுகின்றன. Anti Skid Braking சிஸ்டம் என்ற பெயரில் CBS பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் உள்ள ஹைட்ராலிக், பின்பக்கம் உள்ள மெக்கானிக்கல், இரண்டு பிரேக்கையும் ஒயர் மூலம் இணைத்து CBS ஆக மாற்றியுள்ளார்கள். இந்த அமைப்பிற்கு பஜாஜ் பேட்டன்ட் வாங்கும் முயற்சியில் உள்ளது.

Alloy Wheels design from Discover 125ST
Alloy Wheels design from Discover 125ST

ரைடிங்கில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல். ஸ்பீடோ மீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், கடிகாரம், சர்வீஸ் இண்டிகேட்டர் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள், தற்போது எந்த கியரில் இருக்கிறீர்கள், கியர் ஏற்ற வேண்டுமா குறைக்க வேண்டுமா என்பதைக் காட்டும் கியர் பொசிஷன் இண்டிகேட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. கியர் பொசிஷன் இண்டிகேட்டரைப் பார்த்து பைக் ஓட்டினால், பைக் ஸ்மூத்தாக இருக்கும். பஜாஜ் பைக்குகளிலேயே பிளாட்டினாதான் அதிரடி மைலேஜுக்கு பெயர் பெற்ற பைக்.

Riding
Riding

5-வது கியர் கொடுத்திருப்பதால், மைலேஜ் அடிவாங்கியிருக்குமே என்ற கேள்வி இருந்தது. ஆனால், அராய் டெஸ்ட்டில் பிளாட்டினா 84 கி.மீ மைலேஜ் கொடுக்கிறதாம். ரியல் டைமில்கூட 70 முதல் 75 கி.மீ மைலேஜ் உறுதி என்கிறது பஜாஜ். போட்டியாளர்களை ஒப்பிடும்போது, இது சிறந்த மைலேஜ்.

5. விலை

பிளாட்டினா 110 H கியர் டிரம் பிரேக், டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியன்ட்டில் கிடைக்கின்றன. டிரம் பிரேக் வேரியன்ட் 66,967 ரூபாய், டிஸ்க் பிரேக் வேரியன்ட் 69,152 ரூபாய் என்ற ஆன்ரோடு விலைகளில் கிடைக்கின்றன. பிளாட்டினா 110 பைக்கைவிட இது ரூ.3000 முதல் 5000 வரை விலை அதிகம். குறைவான விலையில் அதிக அம்சங்களைக் கொடுத்துள்ளார்கள்.

Location : Pune
Location : Pune

போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், டிவிஎஸ் ரேடியான் மற்றும் ஸ்டார் சிட்டியைவிட விலை அதிகமாகவும், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ரோ, பேஸன் Xpro மற்றும் ஹோண்டா ட்ரீம் யுகா மற்றும் லிவோவைவிட விலை குறைவாகவே உள்ளது. வைப்ரேஷன் இல்லாத ரைடிங், அதிக டார்க், சொகுசான டிரைவிங், 5-வது கியர் எல்லாம் சேர்த்து இந்த விலை H கியருக்கு ஏற்ற விலை.

வாங்காமல் இருக்க ஏதாவது காரணம்?

1. எடை - புதிய பிளாட்டினா 118.5 கிலோ எடையோடு இருக்கிறது. பிளாட்டினா 110 பைக்கைவிட சுமார் 7 கிலோ கூடுதல் எடை. இதனால், வேகமான ஸ்பீடு பிரேக்கரில் ஏறும்போது முன்பைவிட பலமாக தூக்கிப்போடுகிறது சஸ்பென்ஷன். குறைந்த வேகங்களில் பிரச்சனையே இல்லை.

Drum Brake
Drum Brake

2. பவர் - டார்க்கில் செக்மென்ட்டிலேயே சிறந்த பைக்காக இருந்தாலும், பவர் என்னவோ பேஸன் Xpro மற்றும் டிவிஎஸ் விக்டர் பைக்குகளைவிட குறைவு. எடையும் அந்த பைக்குகளுக்கு நிகராக இருப்பதால், பவர் இன்னும் கொஞ்சம் உயர்ந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டரில் சைடு ஸ்டாண்டு மிஸ்ஸிங்.

Semi Digital instrument console
Semi Digital instrument console

3. டயர் - சியட் டியூப்லெஸ் டயர்கள் வறண்ட சாலைகளில் சூப்பர் க்ரிப் கொடுக்கின்றன. சென்னை வரண்டுபோயிருந்த வேலையில், புனேவில் கொட்டும் மழையில் பைக்கை டெஸ்ட் செய்தோம். ஈரமான சாலைகளில் போதுமான அளவு க்ரிப் கிடைக்கவில்லை. டயர்கள் இன்னும் கொஞ்சம் அகலமாக இருந்திருந்தால் க்ரிப் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.