
சீனாவில் உள்ள தொழிற்சாலை தனது முழு உற்பத்தித்திறனை எட்டிவிட்டதால், நம் நாட்டில் புதிதாகத் தொழிற்சாலையைக் கட்டமைக்கும் முடிவில் பெனெல்லி இருந்தது!
இத்தாலியைச் சேர்ந்த பைக் நிறுவனமான பெனெல்லி, இந்தியாவில் பைக்குகளை உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை நிறுவும் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிட்டிருக்கிறது. மத்திய அரசு, 150சிசி-க்கும் குறைவான இருசக்கர வாகனங்களின் உற்பத்தியை 2025-ல் முழுவதுமாக நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக, எலெக்ட்ரிக் டூ-வீலர்களைப் பரிந்துரைசெய்திருப்பதே இதற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பைக்குகள், தற்போது சீனாவில் உள்ள தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. அது, தனது முழு உற்பத்தித்திறனை எட்டிவிட்டதால், நம் நாட்டில் புதிதாக தொழிற்சாலையைக் கட்டமைக்கும் முடிவில் பெனெல்லி இருந்தது தெரிந்ததே.
''இந்தியாவில் மாஸ் மார்க்கெட் பைக்குகள் (100-150சிசி) மீதான வரவேற்பு அதிகமாக இருப்பதால் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதுடன், தேவைப்பட்டால் அதை இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் எண்ணம் இருக்கிறது'' என பெனெல்லி இந்தியாவின் நிர்வாக இயக்குநரான விகாஸ் ஜபக் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே, பெனெல்லிக்கு இந்தியாவில் ஒரு தொழிற்சாலை...

ஒருவேளை இந்தத் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வந்திருந்தால், அது 400 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கும்; தவிர, வருடத்துக்கு 2 லட்சம் பைக்குகளையும் உற்பத்தி செய்திருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் இந்திய அரசு, எலெக்ட்ரிக் வாகனங்கள்மீது அதிகக் கவனம் செலுத்துவதால், நீண்ட காலச் செயல்பாட்டின் அடிப்படையில் தொழிற்சாலையைத் தொடங்குவது என்பது லாபகரமாக இருக்காது என பெனெல்லி கருதுகிறது.
அரசின் செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் புதிதாக தொழிற்சாலையைத் தொடங்குவது சரியான முடிவாக இருக்காது. ஏனெனில், இதற்கான முதலீட்டை திரும்பப் பெறுவதற்கே நீண்ட காலம் தேவைப்படும்!விகாஸ் ஜபக்
இதற்கான தீர்வாக, ஏற்கெனவே ஹைதராபாத்தில் வைத்திருக்கும் பைக் அசெம்ப்ளி லைனின் (CKD முறையில் பைக்கை பாகங்களாக இறக்குமதி செய்தல்) உற்பத்தியை இந்த நிறுவனம் இருமடங்காக்கியுள்ளது. (அதாவது, வருடத்துக்கு 20,000 பைக்குகள்)! ''ஒருவேளை பின்னாளில் தேவைபட்டால், 2021-க்குள் வருடத்துக்கு 40 ஆயிரம் பைக்குகளை இந்தத் தொழிற்சாலை உற்பத்திசெய்யும்'' என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அடுத்தபடியாக, இந்தியாவில் வரப்போகும் பெனெல்லி பைக்குகள் என்ன?

2 நாள்களுக்கு முன்பு லியோன்சினோ 500 பைக்கை 4.79 லட்சத்துக்கு அறிமுகப்படுத்தியது, பெனெல்லி இந்தியா. இதனால் மாதத்துக்கு 100 பைக்குகள் என்றளவில் அதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ளாஸிக் சீரிஸ் பைக்குக்குப் போட்டியாக, ஒரு ரெட்ரோ பைக்கை (இம்பீரியல் 400) இந்த நிறுவனம் களமிறக்க உள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் விற்பனைக்கு வரப்போகும் அதன் விலை, 2 லட்ச ரூபாய்க்குக் குறைவாகவே இருக்கும். இதனைத் தொடர்ந்து, ஒரு 250சிசி பைக் வெளிவரும்.
அந்த நேரத்தில், மாதத்துக்கு 350 பைக்குகள் என்ற ரீதியில் அதற்கான இலக்கு இருக்கலாம். 300-500சிசி பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை வருடத்துக்கு 8.25 லட்சம் பைக்குகள் என்ற அளவில் இருக்கும் சூழலில், அதில் 93 சதவிகிதம் சந்தை மதிப்பை தன்வசம் வைத்திருக்கிறது, ராயல் என்ஃபீல்டு! சீனாவைச் சேர்ந்த Qjian Jiang குழும நிறுவனங்களில் ஒன்றான பெனெல்லி, இந்தியாவில் தனது பைக்குகளின் Sales & Service மற்றும் அசெம்ப்ளிக்காக, ஹைதராபாத்தைச் சேர்ந்த மஹாவீர் குழுமத்துடன் கடந்த ஆண்டு கைகோத்திருந்தது.

இந்த ஆண்டில் (ஜனவரி - ஜூலை) இதுவரை, 1,000 பைக்குகளை இந்தக் கூட்டணி இந்தியாவில் விற்பனைசெய்திருக்கிறது. 2020-ல் 5,500 பைக்குகளை விற்பனைசெய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது பெனெல்லி இந்தியா. சீனாவில் இந்த நிறுவனம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவரும் நிலையில், வருங்காலத்தை கருத்தில்கொண்டு அவை இந்தியாவுக்கு வருவதற்கான சாத்தியம் இருக்கிறது.
வாடிக்கையாளர்கள், அதுபோன்ற தயாரிப்புகளின்மீது ஆர்வம் காட்டினால், எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்குறித்து பெனெல்லி நிச்சயம் பரிசீலிக்கும். ஏனெனில், அவற்றில் இந்தியாவுக்கு ஏற்றபடி சில மாற்றங்களைச் செய்தாலே போதும்!விகாஸ் ஜபக்
தற்போது, இந்தியாவின் 18 நகரங்களில் 19 டீலர்கள் பெனெல்லிக்கு இருக்கிறார்கள். புதிய தயாரிப்புகள் அறிமுகமாக இருப்பதால், அடுத்த ஆண்டின் இறுதிக்குள் டீலர்களின் எண்ணிக்கையை 60-ஆக அதிகரிக்கும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.