Published:Updated:

ராயல் என்ஃபீல்டு & ஜாவா-வுக்குப் போட்டி... வந்துவிட்டது பெனெல்லி இம்பீரியல் 400

Imperiale 400
Imperiale 400 ( Benelli India )

1950-களில் பெனெல்லி தயாரித்த MotoBi பைக்குகளைப் பின்பற்றியே, இம்பீரியல் 400 பைக்கின் டிசைன் அமைந்திருக்கிறது. சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் மாடலுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

இம்பீரியல் 400... EICMA 2017-ல் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த ரெட்ரோ பைக், பைக் ஆர்வலர்களைக் கவர்ந்தது தெரிந்ததே. அவர்களின் நீண்ட காலக் காத்திருப்புக்கான பதிலாக, நம் நாட்டில் 2.08 லட்ச ரூபாய்க்கு (சென்னை ஆன்-ரோடு விலை - சில்வர் கலர்) இம்பீரியல் 400 பைக்கை பெனெல்லி விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதுவே, கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களுக்கு, 10,000 ரூபாய் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா பைக்குகளுக்குப் போட்டியாக வந்திருக்கும் இந்த ரெட்ரோ பைக்கில் என்ன ஸ்பெஷல்?

டிசைன் மற்றும் வசதிகள்

பெனெல்லி Imperiale
பெனெல்லி Imperiale
Benelli India

1950-களில் பெனெல்லி தயாரித்த MotoBi பைக்குகளைப் பின்பற்றியே, இம்பீரியல் 400 பைக்கின் டிசைன் அமைந்திருக்கிறது. Teardrop போன்ற 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், வட்டமான ஹாலோஜன் ஹெட்லைட், தட்டையான 2 பீஸ் சீட், குறைவான பாடி பேனல்கள், நீளமான ஃபெண்டர், இரட்டை மீட்டர்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், க்ரோம் வேலைப்பாடுகள் ஆகியவை அதற்கான உதாரணம். சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் மாடலுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனால், மிலனில் காட்சிப்படுத்தப்பட்ட பைக்குடன் ஒப்பிட்டால், பெட்ரோல் டேங்க்கில் பெனெல்லியின் லோகோ மாறியிருக்கிறது.

மேலும், இன்ஜின் - எக்ஸாஸ்ட் - மட்கார்டு ஆகியவை கறுப்புக்கும், இண்டிகேட்டர்கள் மற்றும் Exhaust Sheild க்ரோம் ஃபினிஷுக்கும் மாறிவிட்டன; ஃபுல் ஃபேரிங், நேக்கட் ஸ்ட்ரீட், அட்வென்ச்சர் போன்றவற்றைத் தொடர்ந்து, ரெட்ரோ பைக் செக்மென்ட்டில் இம்பீரியல் 400 பைக் வாயிலாக பெனெல்லி டயர் பதித்திருக்கிறது. மற்ற இரு பைக்குகளிலும் இல்லாத Hazard லைட்ஸ், கியர் இண்டிகேட்டர், டேக்கோமீட்டர் ஆகியவை, பெனெல்லியில் இருப்பது பெரிய ப்ளஸ். ஜாவாவில் உள்ள மீட்டர், எல்லாருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், டூரராக அறியப்படும் க்ளாஸிக்கில், ஃப்யூல் கேஜ் மற்றும் ட்ரிப் மீட்டர் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. தவிர, அதிக கலர் ஆப்ஷன்களுடன் க்ளாஸிக் 350 கிடைக்கும் நிலையில், ஜாவா மற்றும் இம்பீரியலில் அது குறைவுதான்.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

Imperiale 400
Imperiale 400
Benelli India

இம்பீரியல் 400 பைக்கில் இருக்கும் புதிய 374சிசி - சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 21bhp@5,500rpm பவர் மற்றும் 2.9kgm@4,500rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 4 வால்வ் - SOHC - Fi அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த ஏர் கூல்டு இன்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இது, கார்புரேட்டர் - OHVயால் இயங்கும் க்ளாஸிக்கைவிட அதிகம். ராயல் என்ஃபீல்டு போலவே Long Stroke பாணியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, அதைப் போலவே பவர் டெலிவரி & எக்ஸாஸ்ட் சத்தத்தைக் கொண்டிருக்கும் என நம்பலாம். இவற்றைவிட பவர்ஃபுல்லான ஜாவா, லிக்விட் கூலிங் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - ஷார்ட் ஸ்ட்ரோக் DOHC இன்ஜின் ஆகிய மாடர்ன் வசதிகளைத் தன்வசம் வைத்திருக்கிறது. மேலும், பெனெல்லியைவிட இது 35 கிலோ எடை குறைவு என்பதால், பவர் டு வெயிட் ரேஷியோவிலும் ஜாவாதான் முன்னிலை வகிக்கிறது (158.8bhp/Tonne). ஆனால், இந்த மூன்றுமே BS-4 விதிகளையே இன்னும் பின்பற்றுவது மைனஸ்.

மெக்கானிக்கல்ஸ்

Imperiale 400
Imperiale 400
Benelli India

முன்பக்கத்தில் 41மி.மீ டெலஸ்கோபிக் ஃபோர்க் - 300மி.மீ டிஸ்க் பிரேக் - 19 இன்ச் டயர் இருந்தால், பின்பக்கத்தில் ட்வின் கேஸ் ஷாக் அப்சார்பர் - 240 மி.மீ டிஸ்க் பிரேக் - 18 இன்ச் டயர் உள்ளன. டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், ஸ்போக் வீல்கள் இருப்பது நெருடல். இது, பைக்கின் ரெட்ரோ தோற்றத்துக்கு வலு சேர்த்தாலும், ட்யூப் டயர்களை மட்டுமே இதில் பொருத்த முடியும். ஆனால், ஜாவா மற்றும் ராயல் என்ஃபீல்டைவிட அகலமான டயர்கள் இருப்பது, சிறப்பான ரோடு க்ரிப்புக்கு வழிவகுக்கும் (முன்: 100/90-19, பின்: 130/80-18). மேலும் அதிக வீல்பேஸ் (1,440 மிமீ), அதிக வேகங்களில் பைக்கின் நிலைத்தன்மைக்கு உதவும் எனலாம்.

Imperiale 400
Imperiale 400
Benelli India

க்ளாஸிக் 350 பைக்கைப் போலவே இம்பீரியல் 400 பைக்கும், Double Cradle ஃப்ரேம் - நீளமான Peashooter எக்ஸாஸ்ட் பைப் - Spring Balanced ரைடர் சீட் - Knee Pad ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஆனால், ராயல் என்ஃபீல்டு பைக்கின் எடை 194 கிலோவாக இருக்கும் நிலையில், பெனெல்லியின் எடையோ 205 கிலோ! இதனால் இம்பீரியல் 400 பைக்கின் பவர் டு வெயிட் ரேஷியோ, போட்டி பைக்குகளைவிட குறைவாகவே இருக்கிறது (102bhp/Tonne). ஆனால், 780மி.மீ சீட் உயரம், அனைத்து விதமான ரைடர்களுக்கும் வாட்டமாகவே இருக்கும். குறைவான வீல்பேஸ் காரணமாக (1,369மிமீ), ஜாவாவின் கையாளுமை கொஞ்சம் ஸ்போர்ட்டி ரகம். இதனுடன் குறைவான சீட் உயரம் (765மி.மீ) சேரும்போது, பக்கா பைக்காக ஜாவா தெரிவது உண்மைதான்.

முதல் தீர்ப்பு

Imperiale 400
Imperiale 400
Benelli India

வீல்கள், டயர்கள், பிரேக்ஸ், எலெக்ட்ரிக்கல் பாகங்கள் போன்றவற்றை உள்நாட்டிலேயே இருந்து பெற்றுவிட்டதால், இம்பீரியல் 400 பைக்கைக் கட்டுபடியாகக்கூடிய விலையில் அறிமுகப்படுத்த முடிந்ததாக பெனெல்லி தெரிவித்திருந்தது. ஆனால், பைக்கின் மற்ற பாகங்களான ஃபிரேம், சஸ்பென்ஷன், பாடி பேனல்கள், இன்ஜின் ஆகியவை CKD முறையில் பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதாகத் தகவல் வந்திருக்கிறது. முறையே 1.75 லட்சம் (கிளாஸிக் 350 - டூயல் ஏபிஎஸ்) மற்றும் 1.95 லட்சம் (ஜாவா - சிங்கிள் ABS) விலையில் கிடைக்கும் போட்டி பைக்குகளைவிட சுமார் 10-30 ஆயிரம் ரூபாய் அதிக விலையில் பெனெல்லி தனது ரெட்ரோ பைக்கைக் கொன்டுவந்திருக்கிறது. இருப்பினும், கடந்த மாதத்தில் இம்பீரியல் 400 பைக்கின் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில் (4,000 ரூபாய் கொடுத்தாலே போதும்), இதுவரை 500 -க்கும் அதிகமானோர் இதை புக் செய்துவிட்டனர்!

Imperiale 400
Imperiale 400
Benelli India

மற்றபடி, 3 வருடம்/Unlimited கி.மீ வாரன்ட்டியுடன் கிடைக்கும் இந்த ரெட்ரோ பைக்கின் டெலிவரிகள், இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்திலேயே ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு (800) மற்றும் ஜாவா (100) ஆகியோரைவிட குறைவான டீலர்களையே பெனெல்லி (30) கொண்டிருந்தாலும், பைக் ஆர்வலர்கள் இம்பீரியல் 400 பைக்குக்கு அசத்தலான வரவேற்பைத் தந்திருப்பது புரிகிறது. அதிக வெயிட்டிங் பீரியடால் (5-8 மாதங்கள்) ஜாவா பாதிப்படைந்திருக்கிறது. அடுத்த தலைமுறை க்ளாஸிக் 350 பைக்கை ராயல் என்ஃபீல்டு, அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. எனவே, இந்த இடைவெளியை, பெனெல்லி கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டால், இம்பீரியல் 400 விற்பனையில் கோலோச்சுவதற்கான சாத்தியம் இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 பைக்கின் விலை 9,000 குறைந்தது... எப்படி?
பின் செல்ல