Published:Updated:

பெனெல்லி லியோன்சினோ 500... இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் என்ன ஸ்பெஷல்?!

ராகுல் சிவகுரு

''முதற்கட்டமாக லியோன்சினோவின் Street மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, அதற்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து, பின்னர் Trail வேரியன்ட்டை களமிறக்கும் முடிவில் இருக்கிறோம்.''

Leoncino 500
Leoncino 500 ( Benelli India )

பைக் ஆர்வலர்களின் நீண்ட கால காத்திருப்புக்கான விடையாக, Neo Retro Scrambler பாணியிலான லியோன்சினோ 500 பைக்கை, இந்தியாவுக்குக் கொண்டுவர இருக்கிறது பெனெல்லி. கடந்த 2017-ம் ஆண்டிலேயே, இந்தியச் சாலைகளில் இது டெஸ்ட்டிங்கில் இருந்ததுடன், அதன் ARAI சான்றிதழுக்கும் இந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், பெனெல்லியின் நிர்வாகத்தில் நடந்த குளறுபடிகளால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வந்திருக்கவேண்டிய லியோன்சினோ 500, வரும் ஆகஸ்ட் 5–ம் தேதிதான் வருகிறது!

Leoncino 500
Leoncino 500
Benelli India

உலக அளவில், இது ஏற்கெனவே 3 வேரியன்ட்களில் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டாலும் (Standard, Trail, Sport), நம் நாட்டுக்கு வரப்போவது ஸ்டாண்டர்டு மாடல்தான்.

முதற்கட்டமாக, லியோன்சினோவின் Street மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, அதற்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து, பின்னர் Trail வேரியன்ட்டைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறோம்!
விகாஸ் ஜபக், பெனெல்லி இந்தியா நிர்வாக இயக்குநர்

நம் நாட்டில் இந்த வகை பைக்குகள் அரிது என்பதால், இதன் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கிறது. Modern Classic வகையறாக்களில் லியோன்சினோ 500-ம் அடங்கும்.

ஸ்டாண்டர்டு மற்றும் ட்ரெய்ல் வேரியன்ட்களுக்கிடையே என்ன வித்தியாசம்?

பெயருக்கேற்றபடியே, ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு பயன்பாட்டை மனதில்வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது லியோன்சினோ 500 Trail. எனவே, இதில் அலுமினிய ஸ்போக் வீல்கள் மற்றும் Knobby Pattern டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன (முன்: 19 இன்ச், பின்: 17 இன்ச்). வெளிநாடுகளில் டுகாட்டியின் Scrambler Sixty2 பைக், இதற்கான முக்கிய போட்டியாளராக இருக்கிறது. அங்கே, இது 250சிசி இன்ஜினுடனும் வருகிறது. ஸ்போர்ட் வேரியன்ட்டை எடுத்துக்கொண்டால், அதில் 2 பீஸ் ஹேண்டில்பார், Road Biased டயர்களுடன்கூடிய ஸ்போக் வீல்கள், Double Barrel எக்ஸாஸ்ட், பெரிய விண்ட் ஷீல்டு, பின்பக்க சீட்டுக்கான Coul, ரேடியேட்டருக்கு Guard, பைக்கின் பின்பக்கத்தில் பொருள்களை வைக்க சிறிய பாக்ஸ், Contrast கலர் வேலைப்பாடுகள் எனக் கவர்கிறது. இது, அசப்பில் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளரின் Cafe Racer மாடலை நினைவுபடுத்தும்படி இருக்கிறது.

Leoncino 500 Sport
Leoncino 500 Sport
Benelli India

இன்ஜின், சேஸி, பிரேக்ஸ், சஸ்பென்ஷன் - எப்படி?

Leoncino 500 Trail
Leoncino 500 Trail
Benelli India

லியோன்சினோ 500-ல் பொருத்தப்பட்டிருக்கும் 499.6சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின், லிக்விட் கூலிங் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - Wet க்ளட்ச் அமைப்பைக் கொண்டிருக்கிறது. 47.6bhp@8,500rpm பவர் மற்றும் 4.5kgm@5,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் இது, டியூப்லர் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேமில் இடம்பெற்றிருக்கிறது. முன்பக்கத்தில் 50மி.மீ USD ஃபோர்க் - 320மி.மீ ட்வின் டிஸ்க்ஸ் - 17 இன்ச் அலாய் வீல்கள் இருந்தால், பின்பக்கத்தில் மோனோஷாக் - ஒற்றை 260மி.மீ டிஸ்க் - 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த பைக்கின் எடை 207 கிலோ. TRK 502 பைக்கிற்கும் லியோன்சினோ 500-க்கும் சில ஒற்றுமைகள் இருப்பதுடன், சர்வதேச அளவில் இவற்றின் விலை ஏறக்குறைய சமம்தான்;

Leoncino 500 Street
Leoncino 500 Street
Benelli India

ஆனால், இந்தியாவில் பெனெல்லியின் விலை குறைவான 500சிசி பைக்காக இருக்கப்போவது லியோன்சினோ 500தான் என்பது உறுதி. TRK 502 5.1 லட்சத்துக்கு (இந்திய எக்ஸ் ஷோரூம் விலை) கிடைக்கும் நிலையில், லியோன்சினோ 500-ன் விலை 4.5-5 லட்சத்துக்குள் இருப்பதற்கான சாத்தியம் அதிகம். மேலும், டுகாட்டியின் பிரபலமான ஸ்க்ராம்ப்ளர் ஐகான் பைக்கைவிட (7.89 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலை) இது தோராயமாக 3 லட்சம் குறைவுதான். ஆனால், பவர் - பிராண்டு மதிப்பு - ஆப்ஷன்கள் ஆகியவற்றில் டுகாட்டி வேற லெவல்!