Published:Updated:

டெஸ்டிங்கில் புதிய யமஹா ஃபேஸினோ - காத்திருக்கும் சர்ப்ரைஸ்கள்!

இதுவரை ஃபேஸினோவில் இல்லாத வசதிகளான 5 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்க 220மிமீ டிஸ்க் பிரேக், ஸ்பை படங்களில் இருந்தது ப்ளஸ்!

Fascino Spy
Fascino Spy ( MV Reader )

ஃபேஸினோ... இந்தியாவில் விற்பனையாகும் டாப்-10 ஸ்கூட்டர்களில் ஒன்று (சராசரி மாதாந்தர விற்பனை - 14,000). அந்தப் பட்டியலில் இருக்கும் ஒரே யமஹா தயாரிப்பு இதுதான் என்பதால், இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டருக்கான சந்தை மதிப்பில் (5-5-5%) பெரும்பங்கைத் தன்வசப்படுத்தியிருப்பதும் ஃபேஸினோதான்! ரெட்ரோ டிசைன், பலவிதமான கலர்கள் என அசத்தும் இது, எதிர்பார்த்தபடியே இளசுகளுக்குப் பிடித்துப் போனதில் எந்த ஆச்சர்யமும் இல்லை;

Fascino Scooter
Fascino Scooter
Yamaha India

ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது (ஹோண்டா ஆக்டிவா/டியோ, டிவிஎஸ் ஜூபிட்டர், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்/டூயட்) இது வசதிகளில் பின்தங்கிவிடுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வருகின்ற ஏப்ரல் 2020 முதலாக BS-6 விதிகள் நாடெங்கும் அமலுக்கு வரப்போகும் நிலையில், அதற்கேற்ப தனது தயாரிப்புகளை மேம்படுத்தும் பணிகளில் யமஹா தற்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்த நிலையில் திண்டிவனம் - மேல்மருவத்தூர் சந்திப்பின் அருகே புதிய ஃபேஸினோ டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எம். அர்ஜூன்.

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, மிக முக்கியமான மாற்றம் தென்பட்டது. ஆம், இதுவரை ஃபேஸினோவில் இல்லாத வசதிகளான 5 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்க 220மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றைக் காண முடிந்தது. மேலும் முன்பக்கச் சக்கரம் முன்பைவிடப் பெரிதாக இருப்பதுபோலத் தெரிவதால், அவை 12 இன்ச் டயராக இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. ஸ்கூட்டரின் ஹெட்லைட் தெரியவில்லை என்றாலும், க்ளோவ் பாக்ஸ் இல்லாத Inner Shield - க்ரோம் ஃபினிஷ் மிரர்கள் - வழக்கமான ஸ்விட்ச்கள் ஆகியவை மாற்றமின்றி அப்படியே தொடரலாம். ஆனால், படத்தை உற்றுநோக்கினால், ஹேண்டில்பாரில் கூடுதலாக Bar End Weights - அனலாக் ஸ்பீடோமீட்டர் - முன்பைவிடக் குறுகலான Floor Board இருப்பதுபோலத் தெரிகிறது. அனலாக் மீட்டருக்குப் பதிலாக, Alpha-வில் இருக்கும் டிஜிட்டல் மீட்டரைப் பயன்படுத்தலாமே யமஹா?

பக்கவாட்டு பாடி பேனல்கள் புதிதாக இருப்பதுடன், அவை முன்பைவிட நீளமாகவும் உள்ளன. எனவே, சிங்கிள் பீஸ் சீட் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருப்பதுடன், டெயில் லைட்டிலும் வித்தியாசம் தெரிகிறது.

Fascino Spy
Fascino Spy
MV Reader

ஆனால், அது LED-ஆக இருக்குமா என்பது சந்தேகமே. கிராப் ரெயிலும் முன்பிருந்ததைவிட மெலிதாகியுள்ளது. மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஜூபிட்டர் போலவே, External Fuel Filler வசதி ஃபேஸினோவில் இருந்தால் நன்றாக இருக்கும். பின்பக்க வீல் முன்பக்கத்தைவிடச் சிறிதாகக் காட்சியளிப்பதால், அனேகமாக இது 10 இன்ச் சைஸில் இருக்கலாம்.

மேலும், எக்ஸாஸ்ட் பைப் முன்பைவிடத் தடிமனாக இருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இது BS-6 மாடலாக இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால், கார்புரேட்டருக்குப் பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இடம்பெறும்; பவர் மற்றும் டார்க்கில் மாறுதல்கள் இருக்கும். விலையும் தற்போது இருப்பதைவிட 10% அதிகரிக்கும் என நம்பலாம்.

யமஹா Fascino Spy
யமஹா Fascino Spy
MV Reader

தற்போது விற்பனை செய்யப்படும் ஃபேஸினோவில் உள்ள 113சிசி BlueCore இன்ஜின் - CVT கூட்டணி, 7.2bhp பவர் மற்றும் 0.81kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது போட்டியாளர்களைவிடக் குறைவுதான் என்றாலும், குறைவான எடை அந்தக் குறைபாட்டைச் சரிக்கட்டி இருந்தது. சஸ்பென்ஷன் செட்-அப் (முன்பக்க: டெலிஸ்கோபிக், பின்பக்கம்: சிங்கிள் ஷாக் அப்சார்பர்) மற்றும் Underbone ஃபிரேம் ஆகியவற்றில் பெரிய மாற்றம் இருக்காது எனலாம்.

Vikatan