Published:Updated:

டிசம்பர் 15 வரை தள்ளிப்போடப்பட்ட ஃபாஸ்டேக்... எப்போது தீரும் குழப்பம்?

ஃபாஸ்டேக் வாங்குவதில் தற்போது மக்கள் பல சிரமங்களை சந்திக்கிறார்கள். அதைச் சரிசெய்யவே டிசம்பர் 15 வரை ஃபாஸ்டேக் கட்டாயமாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

NHAI
NHAI

சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் முறையை முழுவதும் தானியங்கி மயமாக்க ஃபாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கூடுதல் கட்டணம் பெறப்படும் என ஃபாஸ்டேக் தொழில்நுட்பத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 1  முதல் அமல்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக் என்பது என்ன?
சுங்கச்சாவடி/Toll Gate
சுங்கச்சாவடி/Toll Gate
Fastag

இந்தப் புதிய அறிவிப்புக்குப் பிறகு தற்போது இந்தியாவில் 73 லட்சம் ஃபாஸ்டேக்குகள் வரை விற்பனையாகியுள்ளன. இன்னும் ஃபாஸ்டேக் விண்ணப்பங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஃபாஸ்டேக் கட்டாயமாகும் காலக்கெடுவை டிசம்பர் 15-க்கு மாற்றியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI).

நேற்று மாலை NHAI கொடுத்த அறிவிப்பில், ``ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துபவர்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் டிசம்பர் 1-ம் தேதிக்குப் பதில் டிசம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு எங்கே
தமிழ்நாடு எங்கே

இந்தக் கால அவகாசம் இன்னும் அதிக மக்கள் ஃபாஸ்டேக் வாங்குவதற்கானதாக தெரியவில்லை. ஃபாஸ்டேக் வாங்குவது முதல் இதில் பணம் சேமித்து வைப்பது வரை நிறைய சிரமங்களை மக்கள் சந்திக்கிறார்கள். இந்தப் பிரச்னைகளை எல்லாம் 15 நாள்களுக்குள் சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறை முயன்று வருவதாகத் தெரிகிறது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் `பாயின்ட் ஆஃப் சேல் சென்டர்கள்' தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட இல்லை என்று NHAI அதிகாரபூர்வ மொபைல் செயலியான MyFastag-ல் உள்ளது. POS சென்டர்கள் இல்லாத ஊர்களில் இதை ஆன்லைனில் வாங்கலாம் என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அமேசான் இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக உள்ளது. மொபைல் ஆப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் அமேசான் லிங்கை எப்போது திறந்தாலும் ஸ்டாக் இல்லை என்பதே ஒரே பதில்.

ஃபாஸ்ட்டேக் ஸ்டாக் இல்லை
ஃபாஸ்ட்டேக் ஸ்டாக் இல்லை

இதனால், டோல்கேட்டில் விற்பனை செய்யப்படும் ஃபாஸ்டேக் அட்டைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நம்பகத்தன்மையோடு வாங்க வேண்டும் என்றால் வங்கியை மட்டுமே அணுகும் நிலை உள்ளது. அதிலும் நீங்கள் கணக்கு வைத்திருக்காத வங்கியில் இந்த அட்டையை வாங்கும்போது 150 ரூபாய் ஃபாஸ்டேக் அட்டைக்கு Security deposit, Reissuance fees, Threshold amount என 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை பெறுகிறார்கள்.

டிசம்பர் 1 முதல் NHAI டோல்களில் ஃபாஸ்டேக் இலவசமாகத் தருகிறோம் என நிதின் கட்கரி அறிவித்தார். ஆனால், சுங்கச்சாவடிகளில் 150 ரூபாய் டெபாசிட் கட்டி அட்டையை வாங்கிவிட்டு அதை ரீசார்ஜ் செய்ய 400 ரூபாய் User Fee கட்ட வேண்டும் என்கிறார்கள். இப்படி வங்கிகளிலும், டோல்கேட்டிலும் குழப்பத்தோடு வாங்கும் ஃபாஸ்டேக் ஐடி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை அரசு இன்னும் புரிய வைக்காமலேயே இருக்கிறது.