Published:Updated:

களமிறங்கும் புதிய டூவிலர்கள் - புல்லட் X, Moto GP ஜிக்ஸர் & FZ, கஸ்ட்டோ CBS... Updates

கடந்த ஏப்ரல் 1, 2019 முதலாக அமலுக்கு வந்த விதிகளுக்கேற்ப தனது ஸ்கூட்டர்களை மஹிந்திரா அப்டேட் செய்யாததால், அவற்றின் உற்பத்தி/விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

Gusto 125 CBS VX
Gusto 125 CBS VX ( Mahindra )

ராயல் என்ஃபீல்டு புல்லட் X சீரிஸ்

புல்லட் 350 மற்றும் புல்லட் 350ES பைக்குகளின் விலைகுறைவான மாடல்களாக, புல்லட் 350X மற்றும் புல்லட் ES-X 350 ஆகிய பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. முறையே 1.12 லட்சம் மற்றும் 1.27 லட்சத்துக்கு (விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்) வெளியாகியிருக்கும் இவை, அதன் ஸ்டாண்டர்டு மாடல்களைவிட 9,000 ரூபாய் குறைவு! விலை குறைவு என்பதால், வசதிக்குறைப்பாடுகள் இருக்கும் என அஞ்சத் தேவையில்லை; கலர் ஆப்ஷன்கள்தான் மாறியிருக்கிறதே தவிர, மற்ற எல்லாமே அப்படியே தொடர்கின்றன. முன்பு புல்லட் 350 பைக் ஒரே கறுப்பு நிறத்தில் மட்டுமே கிடைத்த நிலையில், தற்போது Bullet Silver, Sapphire Blue, Onyx Black என மூன்று புதிய கலர்களில் புல்லட் 350X பைக்கை வாங்கமுடியும்.

Bullet 350X
Bullet 350X
Royal Enfield

இரண்டிலுமே பெட்ரோல் டேங்க்தான் கலர்ஃபுல்லாக இருக்குமே தவிர, மற்ற பாகங்களில் கறுப்பு நிற வேலைப்பாடுகள் அதிகமாக உள்ளன. ஃபோர்க், இன்ஜின், வீல்கள், ஷாக் அப்சார்பர், மிரர்கள், இண்டிகேட்டர்கள் ஆகியவை இதற்கான உதாரணம். இதுவே 350X பைக் என்றால், அதன் இன்ஜினில் சில்வர் ஃபினிஷும் இருக்கிறது. மேலும் பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் லோகோவும் சிம்பிளாக மாறியிருக்கிறது. ராயல் என்ஃபீல்டின் வழக்கமான 3D லோகோ, புல்லட் ES-X 350 பைக்கில் தொடர்கிறது. சுஸூகி இன்ட்ரூடர் மற்றும் பஜாஜ் அவென்ஜர் சீரிஸ் உடன் போட்டிபோடும் இந்த புல்லட் பைக்குகளில் இருப்பது, 19.8bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்தும் அதே 346சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 2 வால்வ், கார்புரேட்டட் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான்.

யமஹா மான்ஸ்ட்டர் எனர்ஜி MotoGP கலர்ஸ்

தனது ‘Call of the Blue 2.0’ நிகழ்வின் ஒரு பகுதியாக, YZF R15 V3.0 - FZ25 - Cygnus ரே-ZR ஆகிய வாகனங்களின் லிமிடெட் எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது யமஹா. பிரத்யேகமான மான்ஸ்ட்டர் எனர்ஜி MotoGP கலர்களில் வந்திருக்கும் பைக்குகளின் தமிழக எக்ஸ்-ஷோரூம் விலை (YZF-R15 V3.0: 1,43,519, FZ25: 1,38,419), அதன் வழக்கமான கலர் ஆப்ஷன்களைவிடச் சுமார் 2,500 ரூபாய் அதிகமாக இருக்கிறது; இதுவே ஸ்கூட்டர் என்றால் (Cygnus ரே-ZR: 60,869), அதன் தமிழக எக்ஸ்-ஷோரூம் விலை முன்பைவிட 1,500 ரூபாய் அதிகம். இந்த வாகனங்களை வாங்குவோருக்கு, ஒரு மோட்டோ ஜிபி டீ-ஷர்ட் இலவசமாக வழங்கப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது.

YZF-R15 V3.0 MotoGP
YZF-R15 V3.0 MotoGP
Yamaha India

இந்த பைக்கில் கறுப்பு - நீலம் கலர் காம்பினேஷன் இருப்பதுடன், கூடவே மான்ஸ்ட்டர் எனர்ஜி கிராஃபிக்ஸும் இடம்பெற்றிருக்கிறது. யமஹாவின் மோட்டோ ஜிபி அணிக்கு மான்ஸ்ட்டர் எனர்ஜி Title Sponsor ஆனதைக் கொண்டாடும் விதமாக, இந்த லிமிடெட் எடிஷன் மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர் மற்றும் FZ-25 பைக்கில் மோட்டோ ஜிபி ரேஸ் கிராஃபிக்ஸ் இருப்பது முதல் முறை என்பதுடன், R15 பைக்கில் இது இரண்டாவது முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி மெக்கானிக்கலாகவும், வசதிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மஹிந்திரா கஸ்ட்டோ CBS

கடந்த ஏப்ரல் 1, 2019 முதலாக அமலுக்கு வந்த விதிகளுக்கேற்ப தனது ஸ்கூட்டர்களை மஹிந்திரா அப்டேட் செய்யாததால், அவற்றின் உற்பத்தி/விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்திய ஆட்டோமொபைல் துறையே ஆட்டம் கண்டிருக்கும் சூழலில், தற்போது CBS பொருத்தப்பட்ட கஸ்ட்டோ சீரிஸ் ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. முந்தைய மாடலைவிடச் சுமார் 2,000 ரூபாய் அதிக விலையில் வெளிவந்திருக்கும் இவற்றில் CBS தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை (கஸ்ட்டோ 110: DX CBS - 53,352, VX CBS: 60,115 மற்றும் கஸ்ட்டோ 125 VX CBS: 61,138).

Gusto 110 CBS VX
Gusto 110 CBS VX
Mahindra

என்னதான் Follow-Me-Home ஹெட்லைட்ஸ், 35மிமீ வரை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்கள், LED விளக்குடன் கூடிய ரிமோட் Flip Key, Find Me இண்டிகேட்டர்கள், 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 12 இன்ச் வீல்கள், பவர்ஃபுல் இன்ஜின் என வசதிகளில் அசத்தினாலும், தற்போதைய மாடர்ன் வாகனங்களுடன் போட்டிபோடுவதற்கேற்ப கஸ்ட்டோவின் டிசைனில் சில மாற்றங்கள் அவசியம். மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் BS-6 அமலுக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.

சுஸூகியின் 3 புதிய மாடல்கள்!

ஆக்ஸஸ் 125 SE: 2 மாதங்களுக்கு முன்பு, அலாய் வீல்கள் - டிஸ்க் பிரேக் கொண்ட ஆக்ஸஸில் ஸ்பெஷல் எடிஷன் மாடலை சுஸூகி அறிமுகப்படுத்தியது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அதே ஸ்கூட்டரில் அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக் காம்பினேஷன் கொண்ட ஸ்பெஷல் எடிஷன் மாடலை அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. சென்னை எக்ஸ்-ஷோரும் விலையான 65,294 ரூபாய்க்கு வந்திருக்கும் இது, டிஸ்க் பிரேக் கொண்ட மாடலைவிட 888 ரூபாய் குறைவு; மற்றபடி ஸ்பெஷல் எடிஷனுக்கே உரித்தான Coloured சீட், SE லோகோ, கறுப்பு நிற அலாய் வீல்கள் க்ரோம் மிரர்கள், DC சாக்கெட் ஆகியவை இங்கும் தொடர்கின்றன. Matte Bordeaux Red, Metallic Matte Black, Metallic Sonic Silver. Pearl Mirage White ஆகிய கலர்களில் இது கிடைக்கிறது.

Gixxer SF 250 MotoGP
Gixxer SF 250 MotoGP
Suzuki India

ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி: ஜிக்ஸர் SF 155 பைக்கைத் தொடர்ந்து, தற்போது ஜிக்ஸர் SF 250 பைக்கில் மோட்டோ ஜிபி கலர் ஆப்ஷனைச் சேர்த்திருக்கிறது சுஸூகி. இது வழக்கமான கலர் ஆப்ஷன்களைவிட 800 ரூபாய் அதிக விலையைக் கொண்டிருக்கிறது (சென்னை எக்ஸ் ஷோரூம் விலை: 1,72,096 ரூபாய்). இதில் ஃபேரிங்கில் பக்கவாட்டுப் பகுதியில் சுஸூகி ஸ்டிக்கரிங் பெரிதாக இருப்பதுடன், Ecstar பிராண்டிங் இருப்பதும் பார்க்க ஸ்டைலாக உள்ளது. மற்றபடி மெக்கானிக்கலாக பைக்கில் எந்த மாற்றமும் இல்லை.

ஜிக்ஸர் 250: எப்படி SF 155 பைக்கிலிருந்து ஜிக்ஸர் 155 வந்ததோ, அதே பாணியில் SF 250 பைக்கிலிருந்து ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வந்திருக்கிறது. சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையான 1,59,800 ரூபாய்க்கு வந்திருக்கும் இந்த நேக்கட் பைக், ஃபுல் ஃபேரிங் மாடலைவிட 11,495 ரூபாய் குறைவு! ஜிக்ஸர் 155 பைக்கைப் போலவே காட்சியளிக்கும் ஜிக்ஸர் 250, அதில் இருக்கும் LED ஹெட்லைட் - ஸ்பிளிட் சீட்கள், Extension உடனான 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் ஆகியவை இங்கும் தொடர்கின்றன.

Gixxer 250
Gixxer 250
Suzuki India

ஆனால் Negative LCD டிஸ்பிளே, டூயல் டோன் கலர்கள், Bronze ஃபினிஷ் கொண்ட இன்ஜின் கேஸிங் மற்றும் பக்கவாட்டு பாடி பேனல்கள், Belly Pan என ஜிக்ஸர் 250-ல் சில வித்தியாசங்களும் இருக்கின்றன. மற்றபடி SF 250 பைக்கின் அதே ஃபிரேம், சஸ்பென்ஷன், வீல்கள், பிரேக்ஸ் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நேக்கட் பைக்கில் ஃபுல் ஃபேரிங் இல்லாத காரணத்தால், இதன் எடை 5 கிலோ குறைந்திருக்கிறது (156 கிலோ). யமஹா FZ-25 மற்றும் கேடிஎம் டியூக் 200 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக ஜிக்ஸர் 250 பொசிஷன் செய்யப்பட்டுள்ளது.