ஒரே வாரத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஹூண்டாய் தனது முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. விற்பனைக்கு வந்த சில வாரங்களிலேயே 120 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே வாரத்தில்தான் இந்தியாவின் டூவீலர் டெஸ்லாவான ஏத்தர் நிறுவனத்தின் 450 ஸ்கூட்டரும் விற்பனைக்கு வந்து, முதல் பேட்ச் மொத்தமும் விற்றுத்தீர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த வாகனங்களை பற்றிச் சில சந்தேகங்களும் வாதங்களும் எழுப்பப்படுகின்றன. இந்த வாதங்களின் உண்மைத் தன்மையை கொஞ்சம் அலசுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1. வாதம்: தற்போது இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அனல்மின் நிலையங்கள் வெளியிடும் புகையைவிட வாகனங்கள் பெரிய மாசுபாட்டை ஏற்படுத்துவதில்லை. மின்சாரத்தை இயற்கை முறைக்கு மாற்றிவிட்டு மின்சார வாகனத்துக்கு மாறுவோம்.

உண்மை: அமெரிக்க அரசு நடத்திய 'Well to Wheel Analysis'-ல் மின்சார கார்களுக்கு மின்சாரம் தயாரிக்கும்போது உருவாகும் கார்பன் டைஆக்சைடு, கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல் டீசல் எடுத்துப் பயன்படுத்தும் IC இன்ஜின் கார்களைவிடக் குறைவாகவே இருப்பதாகக் கூறியுள்ளது. 2007-ல் எலெக்ட்ரிக் பவர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் என்ற அமெரிக்க அமைப்பு நடத்திய ஆய்வில் நிலக்கரியில் இருந்து மின்சாரம் எடுத்தாலும், பெட்ரோல்-ஹைப்ரிட் கார்களைப் பயன்படுத்துவதால் Greenhouse Gases மற்றும் பிற எமிஷன்களைக் குறைக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.
ஓர் ஆற்றலை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. அதை ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற்ற மட்டுமே முடியும். அப்படி மாற்றும்போது அங்கு சில ஆற்றல் வீணாகும்.Thermodynamic Law

மின்சார வாகனங்களில் மின்சாரம் என்பது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இங்கே, பேட்டரி, மோட்டார், ஃபியூஸ் மற்றும் கண்டக்டர் போன்ற இடங்களில் சில ஆற்றல் வீணாகி நமக்கு 80 சதவிகிதம் மட்டுமே மெக்கானிக்கல் எனர்ஜியாக கிடைக்கும். பெட்ரோல் வாகனங்களை எடுத்துக்கொண்டால் கெமிக்கல் எனர்ஜியில் இருந்து வெறும் 35 சதவிகிதம் மட்டுமே நமக்கும் மெக்கானிக்கல் எனர்ஜியாகக் கிடைக்கிறது. மின்சார வாகனங்களையோ, ஹைப்ரிட் வாகனங்களையோ பயன்படுத்துவதால் அதிக ஆற்றல் வீணாவதைத் தடுக்கலாம்.
2. வாதம்: எலெக்டரிக் வாகனங்களுக்கு எல்லோருமே மாறினால் தற்போது இருக்கும் மின்சார கட்டமைப்புகள் அதைத் தாங்குமா?

உண்மை: மின்சார வாகனங்கள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே சார்ஜ் செய்யப்படுகின்றன. இந்தியாவில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உருவாக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. விரைவில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு மின்சார விநியோகம் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் இங்கிருக்கும் உள்கட்டமைப்புகளில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அதிகம் நேரம் தேவைப்படாது.
3. வாதம்: பேட்டரி தீர்ந்துவிட்டால் நடு ரோட்டில் நிற்க வேண்டியதுதான்!
உண்மை: இந்த வாதம் 100 சதவிகிதம் உண்மை. பெட்ரோல் தீர்ந்துவிட்டால் நடுவழியில் நிற்பதுபோல பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் நடுவழியில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒவ்வொரு 3 கி.மீக்கு ஒரு பெட்ரோல் பங்க் இருப்பதால் ஃபியூல் டேங்க் நிரப்பிக்கொண்டு கிளம்புவதற்கு நேரம் ஆகாது. ஆனால், பேட்டரியில் சார்ஜ் ஏற்றக் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் தேவை. அதிலும் தற்போது சார்ஜிங் நிலையங்கள் இன்னும் பரவலாக்கப்படாத நிலையில் தொலைதூரப் பயணங்களுக்கு பெட்ரோல்/டீசல் வாகனங்களே சரியானது.

ஆரம்பத்தில் நகருக்குள் பயணிக்கவே எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவார்கள். தற்போது FAME II-வில் மானியம் வழங்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களும் ஒரு சார்ஜில் 60 கி.மீ முதல் 110 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கிறது. ஏத்தர் நிறுவனம் சென்னையில் 10 சார்ஜிங் நிலையங்களை இதுவரை நிறுவியுள்ளது. ஹூண்டாய் தனது பங்குக்குக் குறிப்பிட்ட இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் சார்ஜிங் ஸ்டேஷன் வைப்பதாக உறுதியளித்திருக்கிறது. மத்திய அரசு சார்பிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இவற்றைத் தவிர்த்து பெரிய அப்பார்ட்மென்ட்கள் மற்றும் தொழில் வளாகங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் வைக்க விரைவில் அனுமதி வழங்கப்படவுள்ளன.
4. வாதம்: மக்கள் மின்சார வாகனங்கள் வாங்க வேண்டுமென்றால் முதலில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தேவை.

உண்மை: ஒவ்வொரு வீட்டிலும் மின்சார வசதி வந்துவிட்டது. ஒவ்வொரு வீட்டின் சார்ஜிங் சாக்கெட்டிலேயே வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். கார் பார்க்கிங் உள்ள வீடுகளில் பார்க்கிங்கில் எலெக்ட்ரிக் லைன் கொடுப்பது ஈஸி. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் பிரச்னையே இல்லை. 3 யூனிட் மின்சாரம் செலவு செய்து சார்ஜ் போட்டால் 60 கி.மீ வரை பயணிக்கலாம். ஒன்றரை மணிநேர சார்ஜ் போதுமானது. மொபைல் போலவே பயன்படுத்தலாம். பெரிய பேட்டரிகளும் பொதுமக்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களும் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
5. வாதம்: மின்சார வாகனங்களில் அதிக ஆப்ஷன்கள் கிடையாது.

உண்மை: மின்சார வாகனங்களில் தற்போது அதிக ஆப்ஷன்கள் இல்லை என்ற வாதம் கார்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், ஸ்கூட்டர்கள் விஷயத்தில் உண்மையில்லை. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திலேயே ஆப்டிமா, நிக்ஸ், ஃபோட்டான், ஃபிளாஷ் என நான்கு மாடல்கள் உண்டு. ஒவ்வொரு மாடலிலும் இரண்டு மூன்று வேரியன்ட்டுகள் இருக்கின்றன. ஒகினவாவில் ப்ரெய்ஸ், ரிட்ஜ் என இரண்டு மாடல்கள். அதிலும் இரண்டு வேரியன்ட்டுகள் உள்ளன. ஏத்தர் 450, ஏவான், ஆம்பயர் என இன்னும் பல மாடல்கள் தற்போது விற்பனையில் இருக்கின்றன. ரிவோல்ட், டார்க், க்ரியான், அர்பனைட், இஎம் ஃபிளக்ஸ், ஃபிளோ என இன்னும் ஏகப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரப்போகின்றன. கார்களிலும்கூட ஃபோர்டு ஆஸ்பயர் EV, மஹிந்திரா E-வெரிட்டோ, டாடா டிகோர் EV, மாருதி வேகன்-R EV, நிஸான் லீஃப், நிஸான் நோட்-E பவர் எனப் பல கார்கள் வருவதற்கு வரிசைகட்டி நிற்கின்றன.
6. வாதம்: பேட்டரிகளை ரீசைக்கில் செய்ய முடியாது.

உண்மை: தற்போது வாகனங்களில் வரும் லித்தியம் அயன் பேட்டரிகள் ரீசைக்கில் செய்யக்கூடியவை. இந்த பேட்டரி பேக்கில் வரும் பொருள்களை ரீசைக்கில் செய்வதன் மூலம் ஒரு அலாய் கிடைக்கிறது. அது சுத்திகரிக்கப்பட்டு கோபல்ட், நிக்கல் போன்ற மெட்டலாக மாற்றப்படுகிறது. பேட்டரியில் வீணாகும் பொருள்களிலிருந்து சிமென்ட்கூடத் தயாரிக்கிறார்கள்.
மின்சார வாகனம் சார்ந்து உங்களுக்கு இருக்கும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை பதிவிடுங்கள்.